Monday, June 21, 2010

நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு :விழாக்கோலம் பூண்டது கோவை
ஜூன் 22,2010,00:32
கோவை: உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, "கொடிசியா' வளாகத்தில் நாளை துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் பங்கேற்கின்றனர்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.
வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி நேற்று காலை விமானத்தில் கோவை வந்தார். முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் விவாதித்த முதல்வர், போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை விபரங்களையும் உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதல்வர், வரும் 27ம் தேதி வரை கோவையில் முகாமிட்டு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டில், இன்று இரவு 7.50 மணிக்கு டில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் கோவை வருகிறார். ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி, நாளை காலையில் நடக்கவுள்ள மாநாடு துவக்க விழாவில் பங்கேற்கிறார்; மாலையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
முக்கிய தலைவர்களின் வருகை மற்றும் மாநாடு முன்னிட்டு கோவை நகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை டி.ஜி.பி., லத்திகாசரண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க நேற்று முன் தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். "கண்காணிப்பு பணியை தீவிரமாக கையாளும் அதே நேரத்தில், மக்களை எவ்வித கெடுபிடிக்கும் உள்ளாக்க வேண்டாம்' என, போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வரும் மக்கள் கைப்பை, சூட்கேஸ் உள்ளிட்ட எவ்விதமான பொருட்களையும் எடுத்துவர வேண்டாம்; அவ்வாறு, பொருட்களுடன் வந்தால் போலீசாரின் சோதனை நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். மாநாடு வளாகத்தில் வெடிபொருள் ஊடுருவலை தடுக்க "டோர் பிரேம் மெட்டல் டிடக்டர்' சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைவருக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கூடங்களை நேற்று திறந்து வைத்த துணைமுதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்குமாறு பொறுப்பாளர்களை அறிவுறுத்தினார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னேற்பாடுகளால் கோவை மாநகரமே களைகட்டியுள்ளது; மாநாட்டில் பங்கேற்க மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கோவை - அவிநாசி சாலையில் நாளை மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன் தினம் இரவே, அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. தமிழர்களின் கலை, இலக்கியம், வரலாற்றை நினைவு கூறும் காட்சிகளுடன் கூடிய இந்த அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். நேற்று காலை முதலே மக்கள் கூட்டம், கூட்டமாகச் சென்று, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கொடிசியா வளாக அலங்கார வேலைப்பாடுகளை ஆர்வமுடன் பார்வையிட்டு வியந்தனர். நகரச் சாலைகளில் வண்ண ஓவியங்கள் பளிச்சிடுவதை சிறுவர், சிறுமியர் குதூகலத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment