Wednesday, October 13, 2010

தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

புதுடில்லி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது. குத்துச்சண்டையில் மனோஜ் குமார், சுரன்ஜாய் சிங், பரம்ஜித் சமோதா ஆகிய 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்று, சாதித்தனர்.

டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ, ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில் சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.

மனோஜ் தங்கம்:ஆண்களுக்கான "லைட் வெல்டர் வெயிட்' 64 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் மனோஜ் குமார், இங்கிலாந்தின் பிராட்லி சவுண்டர்சை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மனோஜ் குமார் 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

சுரன்ஜாய் அதிர்ஷ்டம்:ஆண்களுக்கான "பிளை வெயிட்' 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், கென்யாவின் பென்சன் ஜங்கிரு மோதுவதாக இருந்தது. ஆனால் கென்ய வீரர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், சுரன்ஜாய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

சமோதா அபாரம்:ஆண்களுக்கான "சூப்பர் ஹெவி வெயிட்' +91 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் பரம்ஜித் சமோதா, டிரினிடாட் டுபாகோவின் அப்துலை சந்தித்தார். இதில் சமோதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.

ஹீனா வெள்ளி:பெண்களுக்கான தனிநபர் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து பங்கேற்றார். இதில் 481.6 புள்ளிகள் பெற்ற ஹீனா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரை விட 0.3 புள்ளிகள் கூடுதலாக பெற்ற மலேசியாவின் சின் பிபியனா தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டினா அஸ்பான்டியரோவா (478.8 புள்ளி) வெண்கலப் பதக்கம் வென்றார்.

சமரேஷ் வெண்கலம்:ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., "ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சமரேஷ் ஜங் பங்கேற்றார். இதில் 559 புள்ளிகள் பெற்ற சமரேஷ் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதில் சிங்கப்பூரின் பின் கெய் (570 புள்ளி), டிரினிடாட் டுபாகோவின் ரோஜர் பீட்டர் டேனியல் (563 புள்ளி) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

நரங் ஏமாற்றம்:ஆண்களுக்கான தனிநபர் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங் பங்கேற்றார். இதில் நரங் மற்றும் இலங்கையின் மங்கலா சமரகூன் தலா 590 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தனர். பின்னர் நடந்த "டை பிரேக்கர்' சுற்றில் ககன் நரங் 51.6 புள்ளிகள் பெற்றார். இலங்கை வீரர் 53.2 புள்ளிகள் பெற்று, இறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் நடந்த 50 மீ., "ரைபிள் புரோன்' இரட்டையர் பிரிவிலும் ககன் நரங், இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றினார்.

இதுகுறித்து ககன் நரங் கூறுகையில், ""காமன்வெல்த் போட்டியில் எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக நான்கு பதக்கம் வென்ற போதிலும், "புரோன்' பிரிவு போட்டிகளில் தடுமாற்றம் கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. இம்முறை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அடுத்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் தொடரும் என நினைக்கிறேன்,'' என்றார்.

இந்தியாவுக்கு நன்றி : ஆண்களுக்கான "பான்டம் வெயிட்' 56 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இலங்கையின் மஞ்சு வானியாராச்சி, வேல்ஸ் வீரர் மெக்கோல்டுரிக்கை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 72 ஆண்டுகளுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1938ல் நடந்த சிட்னியில் நடந்த போட்டியில் இலங்கையின் பார்னி ஹென்ரிகஸ் தங்கம் வென்றிருந்தார். தவிர, 60 ஆண்டுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1950ல் ஆக்லாந்தில் நடந்த போட்டியில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 3 பதக்கம் குத்துச்சண்டையில் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இவரது பயிற்சியாளர் டியன் கோம்ஸ் கூறுகையில், ""பாட்டியாலாவில், இந்திய பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சாந்துவிடம் மஞ்சு வானியாராச்சி பயிற்சி மேற்கொண்டார். இப்பயிற்சியின் மூலம் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதேபோல கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு முன் வானியாராச்சி, சாந்துவிடம் பயிற்சி மேற்கொண்டார். ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட மிகப் பெரும் தொடருக்கு முன், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்தியாவுக்கும், குத்துச்சண்டை கூட்டமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

காஸ்யப் வெண்கலம் : பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் நடந்த 3வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் சேட்டன் ஆனந்த், காஸ்யப் மோதினர். இதில் காஸ்யப் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

No comments:

Post a Comment