Monday, November 15, 2010

‘பி.எட்., பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலம்’ - 15-11-2010

‘பி.எட்., பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலம்’ - 15-11-2010

கோவை: “ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது,” என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.

கோவை பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பத்மநாபன் பேசியதாவது: கல்வி என்பது எதிர்காலத்துக்கான முதலீடு. நாம் பெறும் உயர்கல்வி, வறுமையையும், வேலை வாய்ப்பின்மையையும் அகற்ற உதவ வேண்டும். ஆசிரியரை மையமாகக் கொண்ட கல்வி முறையில் இருந்து, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறைக்கு மாற வேண்டும். நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்தால், நம்பிக்கையுடன் வகுப்பறையை சந்திக்கலாம். வகுப்பறையில் சுதந்திர காற்று வீச வேண்டும். நல்ல நடத்தையுடன் சிறந்த ஆசிரியர் என்ற பெயர் பெற வேண்டும்.

நீங்கள் அளிக்கும் பயிற்சி, மாணவர்களிடம் ஏற்கனவே புதைந்துள்ள தெய்வீக சக்தியை வெளியே கொண்டு வர உதவ வேண்டும். முன்னர் மாணவர்களின் கண்ணை மட்டும் விட்டு வைத்து, அடிக்குமாறு பெற்றோர் கூறினர். இன்று பெற்றோரின் நிலை வேறு. ஆகவே கால மாற்றத்துக்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமானது. ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. உங்களிடம் கற்கும் மாணவர் மனதில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய உதவுங்கள். மத்திய ஆசிரியர் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, இந்தியாவுக்கு பி.எட்., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.

இன்று, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 50 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். பல மாநிலங்களில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்தான் பணியில் உள்ளனர். தமிழகத்தில் வாய்ப்புகள் கதவை தட்டும் அளவுக்கு உயர்கல்வித் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவில் முதல் முறையாக தமிழகத்தில்தான் ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கென தனி பல்கலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பத்மநாபன் பேசினார்.

No comments:

Post a Comment