Monday, November 15, 2010

தமிழ்மொழியுடன் ஆங்கிலமும், இந்தியும் கற்றுக்கொள்ளுங்கள்

தமிழ்மொழியுடன் ஆங்கிலமும், இந்தியும் கற்றுக்கொள்ளுங்கள்’ - 15-11-2010
செங்கல்பட்டு: தமிழ் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவ மாணவியருக்கு, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார்.
‘தினமலர்’ சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, நேற்று செங்கல்பட்டில் நடந்தது.

நிகழ்ச்சியில் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ‘தினமலர்’ சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக மாணவ மாணவியருக்காக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் அலை அலையாக நிகழ்ச்சிக்கு வருகின்றனர். இதை பார்க்கும்போது ஒருவித அச்சமும் ஏற்படுகிறது. நிகழ்ச்சிக்கு வரும் மாணவ, மாணவியர் ஒழுங்காக வீடு போய் சேர வேண்டும் என்ற அச்சம்தான்.

மாணவ, மாணவியர் இந்நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். பிளஸ் 2 கல்விதான், வாழ்க்கையின் திருப்புமுனை. ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறும் குறிப்புகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு சென்றதும் ஆசிரியர்கள் கூறிய குறிப்புகளை பாடங்களுடன் ஒப்பிட்டு திரும்ப திரும்ப படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால் 100க்கு 90 மதிப்பெண்கள் எடுக்கலாம்.

கடந்தாண்டுகளில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியரில், ஆயிரக்கணக்கானோர் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்ற பின் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்ய வாய்ப்பு வரும். அப்போது ஆங்கில அறிவு அவசியம். எனவே ஆங்கிலப் பாடங்களை நன்கு படியுங்கள். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்து அகராதியில் பொருள் கண்டுபிடித்து படியுங்கள். அப்போது ஆங்கிலம் சுலபமாக வரும். ஆங்கிலம் ஒன்றும் கடினமான பாடம் அல்ல. அதேபோல் தமிழகம் தவிர பிற மாநிலங்களுக்கு செல்லும்போது இந்தி மொழி அவசியம். பள்ளி விடுமுறை நாட்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். எனது அனுபவத்தில் இதை கூறுகிறேன்.

நான் சிறு வயதில் இந்தி கற்காததை, தற்போதும் குறைவாகக் கருதுகிறேன். கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். பள்ளி நேரம் தவிர வீட்டில் தினமும் குறைந்தது 6 மணி நேரம் படித்தால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முடியும். நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

No comments:

Post a Comment