Wednesday, January 19, 2011

தைப்பூச நாயகனின் தாள் பணிவோம் : தைப்பூசம்

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பழநி தைப்பூச விழாவிற்கு வரும்பக்தர்கள், மலைக்கோயில் தண்டாயுதபாணி சுவாமியை மட்டும் தரிசித்துச் செல்கின்றனர். ஆனால் தைப்பூச விழாவிற்கான நிகழ்ச்சிகள், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது. முதல் நாள் கொடியேற்றம் முதல், ஆறாம் நாள் திருக்கல்யாணம், ஏழாம் நாள் தேரோட்டம், பத்தாம் நாள் தெப்பத் திருவிழா (தீர்த்தவாரி) உள்பட அனைத்து விசேஷங்களும் இங்கு தான் நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவில் மட்டுமே தேரோட்டம், மலைக்கோயில் கிரிவீதிகளில் நடக்கும். ஆனால் இவ்விழாவிற்கும், பெரியநாயகியம்மன் கோயிலில்தான் கொடியேற்றம் நடத்தப்படுகிறது. பழநியின் ஊர்க்கோயிலாக பெரியநாயகியம்மன் கோயில் உள்ளதே இதற்கு காரணம். பிரியா நாயகியம்மன் என்பதே மருவி காலப்போக்கில், பெரியநாயகியம்மனாக மாறியுள்ளது.

வாஸ்து சாஸ்திரப்படி, ஈசானிய மூலையில் தெப்பமும், அக்னி மூலையில் வணிகர்களும், கன்னி மூலையில் அந்தணர்களுக்கான அக்ரஹாரமும், வாயு மூலையில் மயானக்கரையும் அமைந்து உள்ளது. வையாபுரிக் கண்மாயின் வடபுற கரை மடையாக இருந்த இடமே தற்போது, காரமடை என மருவியுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணச் சிலை மட்டுமே மலைமீது இருந்துள்ளது. இப்பகுதியில் நாயக்கர் ஆட்சி செய்தபோது, சேர(கேரள) மன்னர்கள் ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து குமார தந்திர ஆகம விதிப்படி, கோயிலை உருவாக்கினர். எனவே கேரள மாநிலத்தை (மேற்கு திசை) நோக்கியபடி, கோயில் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பெரியநாயகியம்மன் கோயில் தான், முற்காலத்தில் திருஆவினன்குடியாக அழைக்கபட்டுள்ளது. இதனால் பழங்காலம் முதலே, முருகனுக்குரிய விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இக்கோயிலில் நடத்தப்படுவதற்கு காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கே சொந்தம்: தைப்பூச விழாவிற்காக, பலர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். வேண்டுதல் நிமித்தமாக, பல்வேறு காவடிகளைச் சுமந்து வருகின்றனர். அவர்களின் காவடிப் பாட்டுகளில் சில, முருகனைச் சொந்தம் கொண்டாடு பவையாக அமைந்துள்ளன."செட்டி மகனே! சிங்காரப் பொட்டி மகனே!!'' என செட்டியார் இனத்தவரும்,"குறமகள் வள்ளியைக்கொடுத்தோம்!எங்கள் மருமகன் முருகனல்லவா?'' என குறவர் இனத்தவரும் சொந்தம் கொண்டாடுவதில் போட்டியிடுவதாக பாடல்கள் உள்ளன. இது தவிர "முருகன் எங்கள் வீட்டு மருமகன், அவனுக்கு செருப்பை சீர் கொண்டு போகிறோம்' என செருப்பை காவடியாக அருந்ததியர் சுமந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பழநியில் வீசும் சஞ்சீவிக் காற்று: பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணியின் சிலை, போகர் சித்தரால் நவபாஷணத்தால் செய்யப்பட்டது. முருகன் சிலை மட்டுமின்றி மலைக்கோயிலில், மருத்துவ குணமுள்ள ஏராளமான மூலிகைச் செடிகள்வளர்ந்துள்ளன. செடி, கொடிகள் மட்டுமல்ல, இங்கு வீசும் காற்றுக்கேமருத்துவ குணம் உள்ளது.மலையைச் சுற்றிலும் சித்திரை மாதக் கடைசி ஏழு நாட்களிலும், வைகாசி மாத முன் ஏழு நாட்களிலும் சஞ்சீவிக் காற்று வீசுகிறது. இது பல மூலிகைகளின் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சித்தரான முருகன்: ஞானப்பழம் தொடர்பான பிரச்னையில், கோபத்துடன்முருகன் இங்கு வந்தமர்ந்ததாக கூறப்படுகிறது. பழநிக்கு முந்தைய காலத்தில் "சித்தன் வாழ்வு' என்ற பெயர் இருந்ததை, சில கல்வெட்டுகளும், இலக்கியங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் "சித்தன்' என்ற சொல் தண்டாயுதபாணி சுவாமியை குறிப்பதாகவும், இளமை, அழகு, மணம் ஆகியவற்றின் உருவமாக விளங்கும் முருகன், வாழ்ந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் சிலர் உதாரணம் கூறுகின்றனர். முருகனடிமையாக இருந்தசித்தர்கள் பலர் வசித்ததால், இப்பெயர் ஏற்பட்டதாகவும் கருத்துநிலவுகிறது.

பழநியில் 4 தீர்த்தம்: பழநியில் பிரம்மன், வள்ளி, இடும்பன், சுப்ரமணியம் என நான்கு தீர்த்தங்கள் இருந்துஉள்ளதாக, இலக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரம்மன், வள்ளி தீர்த்தங்கள், மலைக்கோயிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ளன. இடும்பன் கோயில் எதிரே, இடும்பன் தீர்த்தம் உள்ளது. சுப்ரமணிய தீர்த்தம் மட்டுமே கோயிலின் (முன் மண்டபம்) விரிவாக்கத்தின் போது, காலப்போக்கில் மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது."சுக்குச் சர்க்கரை'"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெ#வமுமில்லை' என்பது முன்னோர் வாக்கு. இதன்படி, பழநி கோயிலில் வழங்கப்படும், சுக்குச்சர்க்கரைக்கு பல நோய்களை தீர்க்கும் மகத்துவம் உள்ளது. தினமும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜை நடக்கும். அப்போது சுக்குத்தூள் கலந்த சர்க்கரையை நைவேத்தியமாக, தளிகையாக படைப்பது வழக்கம். பூஜை முடிந்ததும், இந்த சுக்குச்சர்க்கரை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்று வேலையும் மயிலையும் வழிபட்டால் வேல்முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர். இதனால் தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி, ""வெற்றி வாகையை சுமக்கும் வேலை வணங்குவதே வேலை,'' என்று பாடினார். ""கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தை அரசாளும் பாக்கியம், குபேரனைப்போல செல்வவளம், இந்திரனையும் மிஞ்சிய சுகபோகவாழ்வு, பிறப்பற்ற நிலை, செந்தமிழில் புலமை, பகையை முறியடித்தல், காலனை வெல்லும் சக்தி, அஷ்டமாசித்தி ஆகியவற்றை பெற சுலபமான வழி முருகன் கையிலிருக்கும் வேலினையும், அவனது வாகனமாகிய மயிலினையும், அப்பெருமானின் பன்னிரு கண்ணழகையும் மனதால் நினைத்திருப்பது தான். வீணாகக் காலம் கழிப்பதை விட, முருகனின் வேலை வணங்கினால் எல்லா இன்பங்களும் கிடைக்கும். இத்தகவலை நமக்குத் தந்துள்ளவர் அருணகிரிநாதர்.