Friday, April 15, 2011

புதிய தங்க குதிரையில் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

ஏப்ரல் 15,2011
அழகர்கோவில்: மதுரை வரும் கள்ளழகர், ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில், புதிதாக செய்யப்பட்ட தங்கக் குதிரையில், வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் கள்ளழகர், சித்ரா பவுர்ணமி அன்று காலை, குதிரை வாகனத்தில், வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த தங்கக் குதிரை, 300 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. அன்று முதல், அவ்வப்போது திருவிழாவின் போது சுத்தம் செய்து, புதுப்பித்தனர். முலாம் பூசவோ, மராமத்து செய்யவோ இல்லை. திருவிழாவின் போது, சுவாமியை மண்டகப் படிகளில் வைத்து தூக்குவதால், குதிரை வாகனத்தில் இருந்த இணைப்புகள், பலமிழந்து விட்டன. தீர்த்தவாரியின் போது பக்தர்கள் பீய்ச்சும் மஞ்சள் நீரால், தங்க முலாமும் ஆங்காங்கே காணாமல் போய்விட்டது. குதிரை வாகனத்திற்கு தங்க முலாம் பூச வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. தற்போது, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை கமிஷனர் கல்யாணி, அறங்காவலர்கள் செல்லையா, கோபால், திலகராமு, ஜவஹர் ஆகியோர் ஏற்பாட்டில், புதிய தங்கக் குதிரை செய்யும் பணி துவங்கப்பட்டது.

முதல் கட்டமாக, 13 கன அடி தேக்கு மரத்தில், குதிரை வாகனம் செய்யப்பட்டது. பின், தாமிரத் தகடுகள் பதிக்கும் பணி நடந்தது. கோவிலில், ஐந்து கிலோ 520 கிராம் 24 காரட் தங்கம் கையிருப்பில் இருந்தது. இது தவிர, குதிரை வாகனத்திற்காக திருக்கோஷ்டியூர் எம்பெருமான் சாரிட்டிஸ் சார்பில், 400 கிராமும், பக்தர்களிடம் இருந்தும், தங்கம் பெறப்பட்டது. இதைக் கொண்டு, புதிய தங்கக் குதிரைக்கு முலாம் பூசும் பணிகள் நேற்று முடிந்தன. இதன் மொத்த மதிப்பு ஒரு கோடியே 50 லட்ச ரூபாய். இன்று காலை ஆறு மணிக்கு, குதிரைக்கு கண் அலங்காரம் செய்யப்படுகிறது. பின், ஒன்பது மணிக்கு யாகசாலை பூஜையும், பிரதிஷ்டையும் நடக்கிறது.பகல் 12 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் புதிய தங்கக் குதிரையில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். பின் இக்குதிரை வாகனம், தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஏப்.,18ல் புதிய தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.

No comments:

Post a Comment