Thursday, June 16, 2011

இந்த ஆண்டு எப்படி தேர்ச்சி பெறப்போகிறோமோ என்ற பயம் வந்து விட்டது

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. 1 மற்றும் 6-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை ஆராய 9 பேர் கொண்ட குழுவை நியமித்து 3 வாரத்துக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தீர்ப்பு வரும்வரை 1 மற்றும் 7-ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.




தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்று முடிவு செய்யப்படாததால் ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம் அடைந்தனர். கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை பொதுவான பாடங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.



அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று மாணவர்களுக்கு பொது அறிவு, நீதி போதனை, கையெழுத்து பயிற்சி, ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி போன்றவற்றை ஆசிரியர்கள் சொல்லி கொடுத்தனர்.



இதுகுறித்து மாணவ- மாணவிகள் கூறியதாவது:-



அரிகிருஷ்ணன் (கொளத்தூர் எவர்வின் பள்ளி மாணவன்):- பழைய பாடத் திட்டமோ, சமச்சீர் கல்வியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு உரிய நேரத்தில் பாடம் கற்று தந்தால்தான் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.



தாழ்த்தப்படுவதால் மாணவர்கள் படிப்பு மிகவும் பாதிக்கப்படுகிறது. புத்தகம் இல்லாமல் எதை படிப்பது, புத்தகங்கள் வழங்கப்பட்டாலே அவற்றை படித்து புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அதனால் எந்த பாடத் திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும் அதை விரைவாக கொண்டு வரவேண்டும். குறித்த காலத்துக்குள் வந்தால்தான் நாங்கள் படிக்க முடியும். சமச்சீர் கல்வியை விட மெட்ரிக் பாடத்திட்டமே சிறந்ததாகும்.



பிரசாந்த்:- பள்ளி விடுமுறையில் சமச்சீர் பாடத்தை ஓரளவுக்கு படித்து விட்டோம். இப்போது பழைய பாடத்திட்டத்தை படிக்க வேண்டும் என்பது பொது தேர்வு எழுதும் எங்களை பாதிக்கும். மெட்ரிக்குலேசன் பாடத்தில் உயிரியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல் போன்ற பாடங்களை தனித்தனியாக படித்தோம்.



சமச்சீர் கல்வியில் இன்று அனைத்தையும் ஒரே பாடத் திட்டத்தில் படிக்கிறோம். எந்த பாடத்திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். காலம் கடந்து அறிவிப்பதால் எதை படிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுவதோடு படிக்கும் ஆர்வம் குறைகிறது.



விஜயலட்சுமி:- மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற படிப்பில் சேருவதற்கான குரூப்புகளை தேர்வு செய்வதற்கு அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். குறிப்பிட்ட அந்த பாடங்களில் அதிக மார்க் எடுத்தால்தான் சயின்ஸ் குரூப் கிடைக்கும். கல்வி முறையில் ஏற்படும். இது போன்ற குழப்பத்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியாது. ஒரே நேரத்தில் எங்களால் எல்லா பாடத்தையும் படிக்க முடியாது. இதனால் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்பு படிக்க முட்டுக்கட்டை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.



ஏற்கனவே பாதி புத்தகத்தை சமச்சீர் கல்வி திட்டத்தில் படித்து விட்டோம். இப்போது வேறு கல்வி திட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். பாடத்திட்டங்களை அடிக்கடி மாற்றுவதால் நாங்கள் குழப்பம் அடைவதோடு படிப்பில் ஆர்வமும் குறைகிறது.



ஷர்மிளா:- அரசு மாறுகின்ற போதெல்லாம் கல்வி துறையிலும் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது. இது மாணவர்களின் நலனை பெரிதும் பாதிப்பதாக உள் ளது. ஏற்கனவே பள்ளி திறப்பது 15 நாள் தாமதமாகி உள்ளது. இன்னும் 1 மாதம் இந்த நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.



இந்த போக்கு நீடித்தால் நாங்கள் எப்போது பாடங்களை படிப்பது? இந்த ஆண்டு எப்படி தேர்ச்சி பெறப்போகிறோமோ என்ற பயம் வந்து விட்டது. பாடத்திட்டத்தில் ஒரு நிலையில்லாத போக்கு நீடிப்பதால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசு இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்.



மாணவ சமுதாயம் பாதிக்காப்படாத வகையில் தேர்வுகள் நடத்த வேண்டும். மேல்படிப்புக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் முக்கியமாக இருப்பதால் கல்வித்துறை தனிக்கவனம் செலுத்தி விரைவாக பாடங்களை தொடங்க நடவ டிக்கை எடுக்கவேண்டும்.



மோனிஷா:- சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை. கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான பாடத்திட்டத்தை அரசு தாமத மில்லாமல் நடைமுறைப் படுத்தவேண்டும். பழைய பாடத்திட்டத்தையே விரைவாக செயல்படுத்த வேண்டும். பொதுவான பாடம் நடத்த வேண்டிய தேவையில்லை. பொது தேர்வை எழுத இருக்கும் நாங்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே படிக்கிறோம். கோடை விடுமுறையை கூட உற்சாகமாக கழிக்க முடியாமல் சிறப்பு வகுப்புகளுக்கு சென்றோம்.



சிறப்பு வகுப்புகளில் சமச்சீர் பாடங்களை படித்தோம். தற்போது திடீரென்று பழைய பாடத்திட்டத்தை கொண்டு வருவதாக கூறு கிறார்கள். எந்த பாடத்திட்டம் என்றாலும் அதனை சீக்கிரமாக கொண்டு வரவேண்டும்.



ஹபியா:- சமச்சீர் கல்வியில் நிறைய பாடத்திட்டங்கள் உள்ளன. படிக்க எளிதாக இருந்தது. அந்த திட்டத்தையே விரைவாக கொண்டு வரவேண்டும். நாங்கள் ஏற்கனவே அதனை படிக்க தொடங்கி விட்டோம். எளிதாக இருப்பது மட்டு மல்லாமல், பெரும்பாலான பாடங்களை படித்து விட்டதால் அதே திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பாடங்கள் நடத்த இன்னும் 3 வாரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியும் 2 மாத எங்களது படிப்பு வீணாகி விட்டது. எனவே அரசு இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கவிதா (பெற்றோர், திரு.வி.க.நகர்):- இந்த தாமதத்தால் மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும். பள்ளிகள் தாமதமாக தொடங்குவதால் பிள்ளைகளின் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. 70 நாள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதுவே பிள்ளைகளுக்கு படிப்பு மேல் கவனத்தை கொண்டு வராது.



சோமளா (பெற்றோர்):- எந்த பாடத்திட்டமானலும் விரைவாக அரசு செயல் படுத்த வேண்டும். புதிய பாடத்திட்டத்தால் மாணவர்- பெற்றோர்களை குழப்புகிறார்கள்.



இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment