Monday, August 24, 2015

அண்ணா நூலகத்தை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும்



சென்னை: 'சென்னையில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை முறையாக பராமரித்து தரம் உயர்த்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டி.பி.ஐ., வளாகம்:
கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோட்டூர்புரத்தில், 179 கோடி ரூபாய் செலவில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாறியதும், அந்த நுாலகத்தை, சென்னை டி.பி.ஐ., வளாகத்திற்கு மாற்ற, அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மனோன்மணி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நுாலகத்தை மாற்ற தடை விதித்தது.'நுாலகத்தை முறையாக பராமரிப்பதில்லை; அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை; புத்தகங்கள் வாங்குவது குறைந்துள்ளது; நுாலகத்தை படிப்படியாக மூடுவதற்கு, அரசு முயற்சிக்கிறது' என, மீண்டும் ஒரு மனுவை, மனோன்மணி தாக்கல் செய்தார். 

அதேபோல், மூத்த வழக்கறிஞர் காந்தியும் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில், 'நுாலகத்தை முறையாக பராமரிக்கிறோம்; அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு, நுாலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வழக்கறிஞர்கள் சுந்தர், ஆஷா ஆகியோரை, அட்வகேட் கமிஷனர்களாக நியமித்தது. இந்த குழு, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு சென்று பார்வையிட்டு, 160 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜராகினர். 

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பிரச்னை இல்லை:




அட்வகேட் கமிஷனர்கள் அளித்த அறிக்கை மற்றும் புகைப்படங்களை, நாங்கள் பரிசீலித்தோம். விரிவான அறிக்கை தாக்கல் செய்த, கமிஷனர்களின் பணியை பாராட்டுகிறோம்.நாங்கள் முதலில் நினைத்த அளவுக்கு, பெரிய அளவில் பிரச்னை இல்லை. ஒழுங்கான பராமரிப்பு இல்லாதது, தரம் உயர்த்தாதது என, குறைபாடுகள் உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வதில், அரசுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.இந்த அளவுக்கு, ஒரு நுாலகத்தை உருவாக்கும் போது, அதை ஏற்படுத்தியதோடு, அரசின் கடமை முடிந்து விடவில்லை. அதை முறையாக பராமரிப்பதுடன், தரம் உயர்த்தவும் செய்ய வேண்டும்.மாநில அரசுக்கு, நிதி ஒரு பிரச்னை இல்லை. நுாலகத்தில் இருந்தே, தன்னிறைவு பெறும் அளவுக்கு, வருவாய் திரட்டுவதற்கான வழிமுறைகளை, கமிஷனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நுாலகத்தில் உள்ள அரங்கம், மாநாட்டு அரங்கங்கள், கருத்தரங்கு அறைகளை வாடகைக்கு விடுவதன் மூலம், வருவாய் திரட்டி கொள்ளலாம். இந்த அரங்குகள், அறைகளை பூட்டி வைத்துள்ளனர். அதனாலேயே, வசதி குறைவாக தெரிகிறது. அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரைகள் அனைத்தையும், குறிப்பிட்ட கால நேர அடிப்படையில், அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்.

அறிக்கை தாக்கல்:




தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு, கால அட்டவணையை, அரசு தயாரித்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் அவ்வப்போது, பணிகளை பூர்த்தி செய்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.முதலில், ஒவ்வொரு பணியையும் முடிப்பதற்கான கால அவகாசம் குறித்த அட்டவணையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வருவாய் திரட்டுவதற்காக, ஏற்கனவே உள்ள வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நுாலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணி விதிகளை அமல்படுத்த வேண்டும்; காலியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான், நுாலகத்தில் உள்ள குறிப்பிட்ட வசதிகள் முழுமையாக இயங்கும் வகையில் இருக்கும்.எனவே, அதிகாரிகள் தேவையான விஷயங்களை, விரைந்து செயல்படுத்துவார்கள் என, நாங்கள் நம்புகிறோம். நுாலகம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்; தரம் உயர்த்தப்பட வேண்டும்.யார் பெயர், இந்த நுாலகத்துக்கு இடப்பட்டதோ, அந்த அண்ணாதுரை பிறந்த தினமான, செப்., 15ம் தேதி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

No comments:

Post a Comment