Monday, February 1, 2016

கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்! -காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகரித்து, பூமியில் பெய்யும் மழையின் அளவு, சற்று குறைவதாக, புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.வாஷிங்டன்: நிலவின் வடிவம், சற்று பெரிதாகும் போது, காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகரித்து, பூமியில் பெய்யும் மழையின் அளவு, சற்று குறைவதாக, புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சுபாசா கொயமா இதுகுறித்து கூறியதாவது: பல்வேறு காரணங்களால், நிலவின் வெளிவட்ட சுற்று, அவ்வப்போது விரிவடைந்தும், சுருங்கியும் காணப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில், காற்று மண்டலத்தில், காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், வெப்பக்காற்று குளிர்வதில் பிரச்னை ஏற்படுகிறது. ஈரப்பதம் குறைவதால், மழை பொழிவு, சற்று குறையும், எனினும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
1998 - 2012 ஆண்டுகளில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய புள்ளி விவரங்களை வைத்து, இதை உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.http://www.dinamalar.com/news_detail.asp?id=1446498

கஷ்டங்கள் கற்கண்டு ஆகட்டும்!
பிப்., 5 ரதசப்தமி திருவிழா ஆரம்பம்

நம் கஷ்டத்தை, நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து தப்பி ஓட நினைத்து, பிறரை கஷ்டத்துக்குள்ளாக்குவது மகாபாவம். இதை உணர்த்தவே, ரதசப்தமி விழா நடத்தப்படுகிறது.
தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள், வடதிசை நோக்கி தன் பயணத்தை துவக்குகிறது சூரியன். அது, தன் சுற்றுப்பாதையில் சரியாக கால் வைக்கும் நாளே, ரத சப்தமி!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து, 17 கி.மீ., தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. இங்கே ரதசப்தமி விழா, பிப்.,5ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.
ஒரு சமயம், காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடைய, நவக்கிரகங்களை வழிபட்டார்; அவரை குணமாக்கின கிரகங்கள். இதையறிந்து, கோபமடைந்த பிரம்மா, 'உங்கள் பணி, அவரவர் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன் வழங்குவதே! முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனை அடையவே, காலவ முனிவருக்கு தொழுநோயைக் கொடுத்தேன். அதை, அவரை அனுபவிக்க விடாமல் தடுத்ததால், நீங்கள் பூமியில் பிறப்பெடுத்து, அந்நோயின் வேதனையை அனுபவியுங்கள்...' என்று சாபமிட்டார்.
இதனால், பூலோகம் வந்த கிரகங்கள், சிவனை நோக்கி, தவமிருந்தன. சிவனும், அவர்களுக்கு சாப விமோசனம் அளித்ததுடன், அவ்விடத்திலேயே அவர்கள் கோவில் கொள்ள ஆசியளித்தார். அதுவே, சூரியனார் கோவில்!
தங்களை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை தாங்கள் தாங்கி, அவர்களுக்கு அருள் செய்கின்றன இங்குள்ள கிரகங்கள்.
தமிழகத்தில், நவக்கிரகங்களுக்கு என்று அமைந்த ஒரே கோவிலான இது, சூரியனார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும், எல்லா கிரகங்களுக்கும், இங்கு சன்னிதி உண்டு. கருவறையில், சிவசூரியன் எனும் சூரிய பகவான், தன் துணைவியரான உஷா தேவி மற்றும் சாயாதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்கு உக்கிரம் அதிகம் என்பதால், அதைக் குறைக்க, சன்னிதி எதிரே, குரு பகவானை ஸ்தாபித்துள்ளனர்.
கருவறையை சுற்றி, மற்ற கிரகங்களான சந்திரன், அங்காரகன், புதன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது சன்னிதிகள் உள்ளன. இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
இங்கு ரதசப்தமி திருவிழா, பிப்., 5ல் துவங்கி, ரதசப்தமி தினமான, 14ம் தேதி நிறைவு பெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறன்று, சிவசூரியனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு என்பதால், அன்று, ஏராளமான பக்தர்கள் வருவர்.
ஜாதக ரீதியாக சூரியனின் இருப்பிடம் சரியில்லாதோரும், சூரிய திசையால் பாதிக்கப் படுவோரும் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம், செந்தாமரை மலர் சாத்துவர். எல்லா கிரகங்களுமே இங்கு உள்ளதால், அந்தந்த கிரக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.
மனிதனாகப் பிறந்து விட்டால், கஷ்டம் நிச்சயம். இதற்கு ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், அசுரர், முனிவர் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. நம் பாவ, புண்ணியத்தை கழிக்கவே, பூமியில் பிறந்துள்ளோம். நமக்கு வரும் கஷ்டங்கள், நம் விதிப்பயனால் வருபவை. அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், அவற்றை தாங்கும் சக்தியை தரவும், அந்த கஷ்டங்கள் மூலம், 'அனுபவம்' என்னும் கற்கண்டை பெறவும் ரதசப்தமி நன்னாளில் நவக்கிரகங்களை வேண்டிக் கொள்வோம்!

முதியோர் கல்வி!  
''ஏம்மா... அப்பாவுக்கு இது தேவையா.. கொஞ்சம் வயசாகி, அதிலயும் ரிட்டயர்மென்ட்டும் வந்துட்டா, புத்தி பிசகி போயிடுமா...'' அடுக்களையில் வந்து, அம்மாவிடம் அடிக்குரலில் அதட்டினான் சிவா.
''என்னடா இவ்வளவு சூடா பேசற... அவர் உன்னோட அப்பாடா...''
''அதனால தான் உன்கிட்ட வந்து சொல்றேன். பக்கத்து ப்ளாட் நாராயணன் போன் செய்து எத்தனை வருத்தப்பட்டார் தெரியுமா... நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, என் சக்தியெல்லாம் திரட்டி, இந்த வீட்டை வாங்கியிருக்கேன். இந்த வீட்டுக்கு வாங்குன கடனையே, இன்னும், 20 வருஷத்துக்கு கட்டணும்.
''இந்த நிலையில, இவர் செய்ற பிரச்னைகளுக்காக, யார் கூடவும் சண்டை போடவோ, சமாதானம் பேசவோ எனக்கு சக்தி இல்லம்மா,'' என்றவன், காபி டம்ளரை பிரிட்ஜ் மீது, 'னங்' என்று வைத்து விட்டு நகர்ந்தான் சிவா.
அவனின் இந்த விரைப்பும், அலுப்பும் அம்மாவிடம் மட்டும் தான்! அப்பாவை எதிர்த்து மட்டுமில்லை, எதிரில் நின்று கூட பேச மாட்டான்.
''பாக்கியம்... மார்க்கெட் பக்கம் போற வழியில கடா நார்த்தங்காய் குவிச்சு வச்சுருந்தாங்க. ஒரு கிலோ வாங்கியாந்தேன்; ஊறுகா போட்ரு,'' என்று சப்புக் கொட்டியபடி கூறிய கணவனை, நிமிர்ந்து பார்த்தாள்.
டீ ஷர்ட்டில் முன்னணி நெட்வொர்க்கின் படமும், முக்கால் கால் டவுசருமாய் நின்ற கணவனை பார்க்கையில், அவளுக்கே அயர்ச்சியாய் இருந்தது.
'நாகரிகம் என்ற விஷயம், எதுவரை வந்து நிற்கிறது...' என்று, மனதில் நினைத்தவள், ''சிவா ரொம்ப சங்கடப்பட்டான்,'' என்றாள்.
''அவனுக்கென்ன வேலை,'' என்றார் அலட்சியமாய்!
''அவன் ஒண்ணும் வேலை இல்லாம திரியல... நீங்க தான், வேண்டாத வேலையெல்லாம் செஞ்சுட்டு திரியறீங்க... எதிர் ப்ளாட் நாராயணன் மீது, செகரட்டரி கிட்ட புகார் தந்துருக்கீங்க... அவர் போன் செய்து, சிவாகிட்ட குறைபட்டுருக்கார்,'' என்றாள்.
''ஆமாடி... இப்ப என்ன அதுக்கு! அந்த நாராயணன், ப்ளாட் சட்ட திட்டங்கள மதிக்கல. அவரோட ப்ளாட்டை பேச்சுலர் தடிப்பசங்களுக்கு வாடகைக்கு விட்டுருக்கார்... எந்நேரமும் அவனுக பண்ற அலப்பறை தாங்க முடியல. இதப்பாரு... நீ இந்த விஷயத்துல தலையிடாத,'' என்று கூறி வெளியே சென்று விட்டார்.
இந்த விஷயத்தில் மகனுக்கும், கணவருக்கும் நிகழும் பனிப்போரை நினைக்கையில், கவலையாக இருந்தது பாக்கியத்திற்கு!
மகாதேவனின் ப்ளாட்டை ஒட்டித் தான், மைதானம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், எதிர் ப்ளாட் இளவட்ட பயல்களுடன், ப்ளாட் பொடுசுகளும் சேர்ந்து, கிரிக்கெட் விளையாடியபடி இருந்தனர். திரைச்சீலையை விலக்கி, வேடிக்கை பார்த்த மகாதேவனின் மனதில், ஏதேதோ நினைவுகள் ஓடியது.
அவர் காலத்தில் கிரிக்கெட்டுக்கெல்லாம் அவ்வளவு மவுசு இல்லை; கிட்டிப்புல்லும், கபடியும் தான் விளையாடுவர்.
அவர் வலை விரித்து காத்திருந்தது போல், அவர்கள் அடித்த பந்து ஒன்று, மிகச் சரியாய் இவர்கள் வீட்டு ஜன்னலில் பட்டு, வீட்டுக்குள் விழுந்தது.
மாலையில், ப்ளாட் அசோசியேஷன் கூட்டம், கொஞ்சம் பரபரப்பாய்த் தான் ஆரம்பித்தது.
நாராயணனும், அவர் ப்ளாட்டில் குடியிருந்த ஆறு பேச்சுலர் பசங்களும், சிறிது கவலையுடன் அமர்ந்திருந்தனர்.
''இதோ பாருங்க... பந்து கொஞ்சம் பிசகி, என் தலையில விழுந்திருந்தா என்னாகியிருக்கும்... நம்ம ப்ளாட்டோட ரூல்ஸ் என்ன... வாடகைக்கு வரவங்களால, ப்ளாட்காரங்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதுங்கிறது தானே...'' என்று நேற்று இரவு, கவுரவம் படம் பார்த்த எபெக்டை அங்கே காட்டினார் மகாதேவன்.
''அங்கிள் மன்னிச்சுக்கங்க... உங்கள தொல்லை பண்ற மாதிரி நாங்க நடந்ததில்ல. ஒரு வேளை அப்படி நடந்துட்டதா நீங்க நினைச்சா, நிச்சயமா, இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டோம்,'' என்று மன்னிப்பு கேட்டான், அவர்களில் ஒருவனான பாபு.
''ஓகே பிரச்னை தீர்ந்துடுச்சு... மகாதேவன்... இனி ஏதாவது நடந்தா பாத்துக்கலாம்,'' என்று கூறி, அதற்கு மேல் பிரச்னையை வளர்க்க விரும்பாமல், அனுப்பி வைத்தார், ப்ளாட் செகரட்டரி, ஐயர்.
பதினைந்து நாள், ஷீரடிக்கு சுற்றுப் பயணம் சென்று திரும்பி வந்தனர், மகாதேவன் பாக்கியம் தம்பதி. 
தலையில் பெரிய கட்டுடன் ஓடி வந்து கட்டிக் கொண்ட பேத்தியைப் பார்த்து, இருவரும் பதறிப் போயி மருமகளிடம் விசாரித்தனர்.
''ஏங் கேட்கறீங்க... நீங்களும் ஊர்ல இல்ல; உங்க புள்ளையும் ஆபீஸ் போயிருந்தார். நான் வேலையா உள்ளே இருந்தேன். இந்த பிசாசு, மர பீரோவை இழுத்து மேல போட்டுட்டா... தரையெல்லாம் ரத்த வெள்ளம். சமயத்துல ஓடி வந்து உதவினது, எதிர்வீட்டு பேச்சுலர் பசங்க தான்! இவள உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டுப் போய் கட்டுப் போட்டு, அவங்க புண்ணியத்துல, இப்ப இவ, உயிரோடு உட்காந்திருக்கா,'' என்றாள் மருமகள்.
''இத்தனை நடந்திருக்கு... எங்ககிட்ட நீ சொல்லியிருக்க வேணாமா,'' என்று, மருமகளை கடிந்து கொண்டாள், பாக்கியம்.
''அப்படியில்ல அத்தை... யாத்திரை போன இடத்துல, உங்கள தொந்தரவு செய்ய வேணாமேன்னு தான் சொல்லல,'' என்றாள்.
மவுனமாக வீட்டிற்குள் போனார் மகாதேவன்.
''ஏன் அத்தை... இதுக்கு பிறகாவது, மாமாவோட மனசுல, அந்த பசங்க மேல, நல்ல எண்ணம் வருமா...'' அடிக்குரலில் கேட்டாள் மருமகள்.
''வரணும்... அப்பத்தான் இவரோட குடைச்சல் இல்லாம, அவனுக மட்டுமில்ல, நாமளும் நிம்மதியா இருக்க முடியும்,'' என்று அலுத்துக் கொண்டாள் பாக்கியம்.
மாப்பிள்ளை முறுக்கு, தலைப்பிள்ளை வரைக்கும் எனும் கணக்காய், எண்ணி பதினைந்து நாளில் அவருடைய அசல் முகம், வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
''பாகி... இந்த முறை நான் வெடிக்கப் போறது சீனி வெடி, ஊசி வெடியில்ல; ஆட்டம் பாம்,'' எகிறி குதித்த மகாதேவனின் காதோரம், இரண்டு விரல் நீளத்தில், 'ப்ளூ டூத்' முளைத்திருந்தது கொஞ்ச நாளாய்!
''எதையோ வெடிங்க,'' என்றாள் அலுப்பாய் பாக்கியம்.
''அட கருமாந்திரமே... நான் சொல்றது ராவண வதமில்ல, பக்கத்து வீட்ல இருக்கிற காலி பசங்கள துரத்திற தர்மயுத்தம். அவனுக ப்ளாட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கே, ஆறு தடிப்பசங்க கூட ஒரு பொண்ணு, தப்பாயில்ல...''
''அது தப்போ என்னவோ... உங்க வயசுக்கு நீங்க பேசறது தப்பா இருக்கு. அடிக்கடி ஏதாவது புகார எடுத்துட்டுப் போய், செகரட்டரிக்கிட்ட மூக்கை உடைச்சுக்காட்டி, உங்களுக்கு தூக்கமே வராதா...'' என்றாள் கோபமாய் பாக்கியம்.
'யாரா இருக்கும் அந்தப் பொண்ணு...' என்று நெற்றிப் பொட்டை ஆட்காட்டி விரலால் தட்டி யோசனை செய்யத் துவங்கினார்; தலையில் அடித்தபடி விலகினாள் பாக்கியம்.
மாடியில் காற்று வாங்க போனார் மகாதேவன். பாபு தன் ரூம்மேட் பிரவீண் மற்றும் சகாக்களுடன் அமர்ந்து, செஸ் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஒருவன், நீள முடிக்கு ரப்பர்பேண்ட் போட்டிருந்தான்; இன்னொருவன், கிருதாவை தாடி வரைக்கும் பென்சில் போல் கத்தரித்திருந்தான்; அடுத்தவனின் கால்டவுசர் முழுக்க பாக்கெட்டாய் இருந்தது. ஆறு பேரும், ஆறு வானரங்கள் போல் இருந்தனர்; கலர் கலராய், கையில்லாத பனியன்கள் அணிந்து இருந்தனர்.
சிறுவயதில் மெலிசான மேல்சட்டைக்கு, கையில்லாத உள்பனியன் உடுத்த ஆசைப்படுவார் மகாதேவன். ஆனால், வீட்டில் அதற்கான அனுமதி கிடைக்கவேயில்லை. அவருடைய அண்ணன்களுடைய பழைய கை வைத்த பனியன்கள் தான், இவருக்கு போட்டுக் கொள்ள கிடைக்கும்.
''ஹாய் அங்கிள்.. என்ன அப்படியே நிற்கிறீங்க... சிப்ஸ் சாப்பிடுறீங்களா...'' சிரித்த முகத்துடன், சிப்ஸ் பொட்டலத்தை நீட்டினான் பாபு.
''என்ன... சிப்சோட மாடியில உட்கார்ந்திருக்கீங்க; கச்சேரியா...'' என்று நக்கலாக கேட்டார் மகாதேவன். ஆனால், மனத்திற்குள், 'இத்தனை இடைஞ்சல் செய்தும், கோபப்பட மாட்டேங்கறானுகளே...' என்று வியந்தார்.
''பாத்தீங்களா... எங்களுக்கு தோணல... உங்களுக்குத் தான் சிப்ஸ், சைட்டிஷ்ஷா மட்டும் தெரியுது,'' மென்மையாய் சிரித்தான் பாபு.
அவன் அப்படி கூறியது தன்னை அவமானப்படுத்தியது போல் இருந்தது மகாதேவனுக்கு!
''இந்த நையாண்டி பேச்செல்லாம் இருக்கட்டும்... உங்க ரூம்ல ஒரு பொண்ணை பாத்தேனே... யார் அது?''
''அதுவா... அவங்க பேர் ஸ்ரீஜா; பிரவீணோட பியான்சி...''
''இதென்ன கலாசாரம்... ஒரு பொண்ணை, அஞ்சாறு தடிப்பசங்க கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிறது... இதெல்லாம் தப்புன்னு சொன்னா, உங்களுக்கு நான் வில்லன் அப்படித் தானே...''
புன்முறுவல் மாறாமல், அவரை பார்த்த பாபு, ''அங்கிள்... பிரவீணும், ஸ்ரீஜாவும் காதலிக்கிறாங்க... அவங்க வீட்ல, இவங்க காதலுக்கு ஆதரவு இல்ல; அதனால, நாங்க, அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கப் போறோம்; இதுல என்ன தப்பிருக்கு...'' என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டான் பாபு.
''என்னய்யா நியாயம் பேசற... அவங்க ரெண்டு பேருக்கும் தாய், தகப்பன் இல்ல... அவங்கள கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குனா, நீங்க லேசா பெத்தவங்கள தூக்கி எறிய கத்து தர்றீங்களா... இது தான் உங்க நண்பர்கள் லட்சணமா...''
''அங்கிள்... உங்க காலம் மாதிரி இப்ப இல்ல... எல்லா விஷயங்களும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை உள்ளடக்கியது. தனிமனித சுதந்திரம்கிறது, மத்த எல்லா விஷயத்தையும் விட பெரிசு. இப்போ இருக்கற இளைஞர்கள், பெத்தவங்களை மதிக்கவும் செய்றாங்க; அதேவேளை, தம் உரிமையை நிலைநாட்ட, எந்த தடையையும் தாண்டி வர்றாங்க. எந்த பிரச்னையும் வராது; நீங்க கவலைப்பட வேணாம்...'' அவன் அலட்சியமாய் சொல்லிவிட்டு நகர, அந்த அலட்சியமே, அவருக்குள் அடக்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
''முதல்ல காபி சாப்பிடுங்க மகாதேவன்...'' தன் முன்னால் இருந்த காபி கோப்பையை, அவர் பக்கமாய் நகர்த்தினார், ப்ளாட் செகரட்டரி, ஐயர்.
''சார்... நான் என்ன எங்க வீட்ல காபி நல்லாயில்ல; உங்க வீட்ல குடுங்கன்னு கேட்டா இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். என்னோட புகார சீரியசா எடுத்துட்டு ஆக் ஷன் எடுங்க. வயசுப் பொண்ணு, 20 நாளா அந்த வீட்ல இருக்கா...''
'உஷ்'ன்னு பெருமூச்சு விட்டார் செகரட்டரி.
''காதல், கல்யாணம் இதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். இதுல நாம மூக்கை நுழைக்கிறது அவ்வளவு நாகரிகம் இல்ல மகாதேவன்...''
''நீங்க போய் அவங்க காதல தடுங்கன்னு நான் சொல்ல! அவங்க இல்லீகலா ஒரு பொண்ணை கொண்டாந்து வச்சுருக்காங்க. அது, நம்ம ப்ளாட் ரூல்ஸ் படி தப்புத் தானே!''
''இருக்கலாம்... ஆனாலும் அந்த பசங்க எந்த தப்பும் செய்றதா தெரியல... யாருக்கும் அவங்களால எந்த இடஞ்சலும் இல்ல. படிச்சு, நல்ல வேலையில இருக்கற பசங்க. நாம ஏன் அவங்க வெறுப்பை தேவையில்லாம சம்பாதிக்கணும்.''
''அப்படியா... அப்போ, நானும் உங்க ரூல்சை மதிக்க போறதில்ல. நாய் வளர்க்க போறேன்... அசோசியேஷன்ல இதைப் பற்றி கண்டிப்பா பேசுவேன். நீங்க மறுபடியும் செகரட்டரி ஆகணும்ன்னா நாங்க ஓட்டுப் போடணும்; மறந்துடாதீங்க!''
அவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார், ஐயர்.
அடர் நீல நிற டீ ஷர்ட், முட்டி வரைக்கும் பெர்முடாஸ், காதில் நீண்டு இருந்த ப்ளூ டூத், உள்ளங்கை அகல செல்போன்...
''நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே மகாதேவன்...''
''ம்... கேளுங்க...''
''நிஜத்துல உங்களுக்கு கோபம், அந்த இளைஞர்கள் மேலயா... இல்ல அவங்க இளைஞர்களா இருக்காங்களே... அதாலயா?''
'சுரீ'ரென நிமிர்ந்து பார்த்தார் மகாதேவன்.
''ஐயம் சாரி மகாதேவன்... வாழ்க்கையில நாம நிறைய கடந்து வந்துட்டோம். நம்மால யோசிக்கக் கூட முடியாத எத்தனையோ சவுகரியங்கள் இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு கிடைக்குது. ஆனா, அது இயல்பான ஒண்ணு தான்... இருபது, முப்பது வருஷங்கள் கழிச்சுப் பார்த்தா, இன்னும் வசதி வாய்ப்புகள் கூடித்தான் இருக்கும்...''
''என்ன சொல்ல வர்றீங்க ஐயர்...'' கோபமாய் கேட்டார் மகாதேவன்.
''மகாதேவன்... கிட்டத்தட்ட நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தான் இருக்கும்... நாம பிறந்ததுல இருந்து, எத்தனையோ பருவங்கள கடந்து வந்துட்டோம். அப்பயெல்லாம் எந்த தடுமாற்றமும் அடையாத நாம, இளமையை கடந்து வரும் போது மட்டும், ஏக்கமா, அங்கேயே நின்னு திரும்பி பாக்கிறோம்.
''இந்த சமூகத்துல இன்னும் நாங்க இளைஞர்தான்னு அடையாளம் காட்டிக்க, அவங்க உடையையும், நாகரிகத்தையும் நகல் எடுத்து நாம போட்டுட்டா மட்டும், நாம இளைஞர்கள் ஆயிட முடியாது. இளமை ரொம்ப அற்புதமான விஷயம் தான்; ஆனா, அதை விட அரிய விஷயம் முதுமை. அது எல்லாருக்கும் வாய்க்கிறது இல்ல.
''அனுபவமும், பொறுமையும், அமைதியும், விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தையும் தர்றது, முதுமை மட்டும் தான்! அதை உணர்ந்தால், நம்மள மாதிரி பெரியவங்க, முதுமைக்கான அடையாளத்தை அழிச்சுக்கிட்டு, இளமை வேஷம் போட்டுட்டு திரிய மாட்டாங்க.
''நாமெல்லாம் நூறு வயசு கடந்து வாழப் பிரியப்படறோம்; ஆனா, யாருமே முதுமையடைய விரும்பறதில்ல. அது எப்படி சாத்தியப்படும்ன்னு, இன்னைக்கு வரைக்கும் யாருக்குமே தெரியல,'' என்றார் செகரட்டரி.
ஜரிகை வேட்டியும், வெள்ளை கதர் சட்டையும், நெற்றியில் விபூதி கீற்றுமாய் வந்து நின்ற மகாதேவனை, பிளந்த வாய் மூடாமல் பார்த்தாள், பாக்கியம்.
''நான் செகரட்டரி வீடு வரைப் போய், எதிர்வீட்டு பசங்க மேல சொன்ன புகாரை அசோசியேஷன் வரைக்கும் கொண்டு போக வேணாம்ன்னு சொல்லி, எக்ஸ்க்யூஸ் கேட்டுட்டு வந்துடறேன்,'' என்று கூறி, தெருவில் இறங்கி நடந்தார் மகாதேவன்.
''அத்தை... மாமாவுக்கு என்னாச்சு...'' ஆச்சர்யத்தில் விழி விரித்தாள் மருமகள்.
''என்னவோ ஆகியிருக்கு... யார்கிட்டயோ போய் உங்க மாமா முதியோர் கல்வி கத்துட்டு வந்திருக்காரு... இந்த நாளுக்காகத் தான நாம காத்திருந்தோம்,'' என்று கூற, இருவரும் ஒருசேர சிரித்தனர்.

எஸ்.பர்வின் பானு  http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28953&ncat=2