Wednesday, January 19, 2011

தைப்பூச நாயகனின் தாள் பணிவோம் : தைப்பூசம்

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பழநி தைப்பூச விழாவிற்கு வரும்பக்தர்கள், மலைக்கோயில் தண்டாயுதபாணி சுவாமியை மட்டும் தரிசித்துச் செல்கின்றனர். ஆனால் தைப்பூச விழாவிற்கான நிகழ்ச்சிகள், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது. முதல் நாள் கொடியேற்றம் முதல், ஆறாம் நாள் திருக்கல்யாணம், ஏழாம் நாள் தேரோட்டம், பத்தாம் நாள் தெப்பத் திருவிழா (தீர்த்தவாரி) உள்பட அனைத்து விசேஷங்களும் இங்கு தான் நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவில் மட்டுமே தேரோட்டம், மலைக்கோயில் கிரிவீதிகளில் நடக்கும். ஆனால் இவ்விழாவிற்கும், பெரியநாயகியம்மன் கோயிலில்தான் கொடியேற்றம் நடத்தப்படுகிறது. பழநியின் ஊர்க்கோயிலாக பெரியநாயகியம்மன் கோயில் உள்ளதே இதற்கு காரணம். பிரியா நாயகியம்மன் என்பதே மருவி காலப்போக்கில், பெரியநாயகியம்மனாக மாறியுள்ளது.

வாஸ்து சாஸ்திரப்படி, ஈசானிய மூலையில் தெப்பமும், அக்னி மூலையில் வணிகர்களும், கன்னி மூலையில் அந்தணர்களுக்கான அக்ரஹாரமும், வாயு மூலையில் மயானக்கரையும் அமைந்து உள்ளது. வையாபுரிக் கண்மாயின் வடபுற கரை மடையாக இருந்த இடமே தற்போது, காரமடை என மருவியுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணச் சிலை மட்டுமே மலைமீது இருந்துள்ளது. இப்பகுதியில் நாயக்கர் ஆட்சி செய்தபோது, சேர(கேரள) மன்னர்கள் ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து குமார தந்திர ஆகம விதிப்படி, கோயிலை உருவாக்கினர். எனவே கேரள மாநிலத்தை (மேற்கு திசை) நோக்கியபடி, கோயில் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பெரியநாயகியம்மன் கோயில் தான், முற்காலத்தில் திருஆவினன்குடியாக அழைக்கபட்டுள்ளது. இதனால் பழங்காலம் முதலே, முருகனுக்குரிய விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இக்கோயிலில் நடத்தப்படுவதற்கு காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கே சொந்தம்: தைப்பூச விழாவிற்காக, பலர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். வேண்டுதல் நிமித்தமாக, பல்வேறு காவடிகளைச் சுமந்து வருகின்றனர். அவர்களின் காவடிப் பாட்டுகளில் சில, முருகனைச் சொந்தம் கொண்டாடு பவையாக அமைந்துள்ளன."செட்டி மகனே! சிங்காரப் பொட்டி மகனே!!'' என செட்டியார் இனத்தவரும்,"குறமகள் வள்ளியைக்கொடுத்தோம்!எங்கள் மருமகன் முருகனல்லவா?'' என குறவர் இனத்தவரும் சொந்தம் கொண்டாடுவதில் போட்டியிடுவதாக பாடல்கள் உள்ளன. இது தவிர "முருகன் எங்கள் வீட்டு மருமகன், அவனுக்கு செருப்பை சீர் கொண்டு போகிறோம்' என செருப்பை காவடியாக அருந்ததியர் சுமந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பழநியில் வீசும் சஞ்சீவிக் காற்று: பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணியின் சிலை, போகர் சித்தரால் நவபாஷணத்தால் செய்யப்பட்டது. முருகன் சிலை மட்டுமின்றி மலைக்கோயிலில், மருத்துவ குணமுள்ள ஏராளமான மூலிகைச் செடிகள்வளர்ந்துள்ளன. செடி, கொடிகள் மட்டுமல்ல, இங்கு வீசும் காற்றுக்கேமருத்துவ குணம் உள்ளது.மலையைச் சுற்றிலும் சித்திரை மாதக் கடைசி ஏழு நாட்களிலும், வைகாசி மாத முன் ஏழு நாட்களிலும் சஞ்சீவிக் காற்று வீசுகிறது. இது பல மூலிகைகளின் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சித்தரான முருகன்: ஞானப்பழம் தொடர்பான பிரச்னையில், கோபத்துடன்முருகன் இங்கு வந்தமர்ந்ததாக கூறப்படுகிறது. பழநிக்கு முந்தைய காலத்தில் "சித்தன் வாழ்வு' என்ற பெயர் இருந்ததை, சில கல்வெட்டுகளும், இலக்கியங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் "சித்தன்' என்ற சொல் தண்டாயுதபாணி சுவாமியை குறிப்பதாகவும், இளமை, அழகு, மணம் ஆகியவற்றின் உருவமாக விளங்கும் முருகன், வாழ்ந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் சிலர் உதாரணம் கூறுகின்றனர். முருகனடிமையாக இருந்தசித்தர்கள் பலர் வசித்ததால், இப்பெயர் ஏற்பட்டதாகவும் கருத்துநிலவுகிறது.

பழநியில் 4 தீர்த்தம்: பழநியில் பிரம்மன், வள்ளி, இடும்பன், சுப்ரமணியம் என நான்கு தீர்த்தங்கள் இருந்துஉள்ளதாக, இலக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரம்மன், வள்ளி தீர்த்தங்கள், மலைக்கோயிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ளன. இடும்பன் கோயில் எதிரே, இடும்பன் தீர்த்தம் உள்ளது. சுப்ரமணிய தீர்த்தம் மட்டுமே கோயிலின் (முன் மண்டபம்) விரிவாக்கத்தின் போது, காலப்போக்கில் மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது."சுக்குச் சர்க்கரை'"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெ#வமுமில்லை' என்பது முன்னோர் வாக்கு. இதன்படி, பழநி கோயிலில் வழங்கப்படும், சுக்குச்சர்க்கரைக்கு பல நோய்களை தீர்க்கும் மகத்துவம் உள்ளது. தினமும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜை நடக்கும். அப்போது சுக்குத்தூள் கலந்த சர்க்கரையை நைவேத்தியமாக, தளிகையாக படைப்பது வழக்கம். பூஜை முடிந்ததும், இந்த சுக்குச்சர்க்கரை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்று வேலையும் மயிலையும் வழிபட்டால் வேல்முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர். இதனால் தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி, ""வெற்றி வாகையை சுமக்கும் வேலை வணங்குவதே வேலை,'' என்று பாடினார். ""கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தை அரசாளும் பாக்கியம், குபேரனைப்போல செல்வவளம், இந்திரனையும் மிஞ்சிய சுகபோகவாழ்வு, பிறப்பற்ற நிலை, செந்தமிழில் புலமை, பகையை முறியடித்தல், காலனை வெல்லும் சக்தி, அஷ்டமாசித்தி ஆகியவற்றை பெற சுலபமான வழி முருகன் கையிலிருக்கும் வேலினையும், அவனது வாகனமாகிய மயிலினையும், அப்பெருமானின் பன்னிரு கண்ணழகையும் மனதால் நினைத்திருப்பது தான். வீணாகக் காலம் கழிப்பதை விட, முருகனின் வேலை வணங்கினால் எல்லா இன்பங்களும் கிடைக்கும். இத்தகவலை நமக்குத் தந்துள்ளவர் அருணகிரிநாதர்.

Thursday, January 13, 2011

HAPPY PONGAL WISHES 2011


I WISH U EVERY SUCCESS MY FRIENDS OUR TAMILAR THIRU NAL WISHES HERE AND THERE. 


BY   RGKUMARAN.

Tuesday, January 11, 2011

துணிந்து நில்... எதிலும் வெல்! இன்று விவேகானந்தர் பிறந்தநாள்

""என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன @வண்டு மானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். இந்த தேசத்தில் பிறந்த புழு கூட உண்மைக்காகவே உயிர்விட வேண்டும்,'' என்று முழக்கமிட்டவர்வீரத்துறவி விவேகானந்தர்.

கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார். இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். மற்றவர்களெல்லாம் அங்குவந்திருந்தவர்களை "லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் "டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்' என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.

""கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,'' என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள "கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி' போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாகவே கருதினார். அதற்கு காரணம் அவர் குருவிடம் கற்ற பாடம் தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.""நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,'' என்றார் விவேகானந்தர்.""கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,' ' என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.""அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?'' என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,""இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!'' என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,'' என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது. ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது.

அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.""இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,'' என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர். அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.

இன்று தேசிய இளைஞர் தினம்:இன்றைய இளைஞர்கள் கையில் தான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தை பொறுத்து தான் நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவரும், ஆன்மிகவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, கவிதை, யோகா, சொற்பொழிவு, கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தனர். "நூறு இளைஞர்களை தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் ' என்று அவர் கூறினார். இது இளைஞர்கள் மேல் அவர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. இளைஞர்கள் முன்மாதிரியாக ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதும் அவர்களாகவே மாறிவிடாமல், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.

இளைஞர்களின் பொறுப்பு : நாட்டில் 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 42 கோடி பேருக்கு மேல் உள்ளது. இளைஞர்கள் டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல அரசியலிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். எனவே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இளைஞரிடமும் உள்ளது. இளைஞர்களின் சக்தியை முழுமையாக நல்வழியில் பயன்படுத்தினால் இந்தியாவின் வல்லரசு கனவு எளிதில் நிறைவேறலாம். இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Monday, January 3, 2011

இந்தியா அறிவியலாளர்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன்


சென்னை, ஜன. 3: இந்திய அறிவியலாளர்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.  இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2012-13 ஆம் ஆண்டை அறிவியல் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.  சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 98-வது இந்திய அறிவியல் மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:  இந்திய அறிவியலாளர்கள் மிகப் பெரியதாகவும், புதுமையாகவும் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர்களது சிந்தனை காலத்தை மீறியதாக இருக்க வேண்டும்.  21-ம் நூற்றாண்டின் ராமன்களையும் (நோபல் விஞ்ஞானி), ராமானுஜன்களையும் (கணித மேதை) இந்தியா உருவாக்க வேண்டிய நேரம் இது.  தரமான கல்வி, இந்தியப் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.  அறிவியல் கல்விக்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும் முக்கிய இணைப்புச் சங்கிலியாக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. நமது கல்விமுறையைப் பலப்படுத்தாமல், ஆராய்ச்சிகளில் சிறப்பிடம் பெற முடியாது.  அதேபோன்று, பல்கலைக்கழகங்களில் புதுமைகளைச் செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழக அமைப்புகளின் வளர்ச்சிக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.  கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 8 இந்திய தொழில்நுட்பக் கழகங்களையும், 5 இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், உயர் கல்வியை வழங்கவும் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் ஆராய்ச்சி முனைவர்களை உருவாக்கும் வகையில் அறிவியல் ஆராய்ச்சி அகாதெமி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பல்கலைக்கழகங்கள் புதுமையான எண்ணங்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் வரவேற்பு அளிக்கும் இடங்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில், அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்தும், நடைமுறைகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களை விடுவிக்க வேண்டும்.  நமது பொருளாதார வளர்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவை நமது அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்தவையாக உள்ளன. இதன் காரணமாகவே, அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசு அதிக அளவில் நிதியுதவி அளித்து வருகிறது.  அறிவியல் துறையில் இந்தியா உலகில் முதன்மையான நாடாக மாறுவதற்குரிய வழிமுறைகள் குறித்து அறிவியல் ஆலோசனைக் குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது.  அதன்படி, சிறந்த மாணவர்களை அறிவியல் துறை பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்களை அறிவியல் படிப்புகள் பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்பம், மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறைகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.  இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2012-13 ஆம் ஆண்டை இந்திய அறிவியல் ஆண்டாக அறிவிக்க வேண்டும். அறிவியல் ஆண்டில் புதிய தலைமுறையினர் அறிவியல் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். நோபல் விஞ்ஞானி சந்திரசேகரின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  நோபல் விஞ்ஞானி ராமனின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இந்தியாவில் பொருள்கள் தயாரிக்கப்படுவதில்லையே ஏன்? பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள், தொழில்துறையினருக்கான தொடர்பை வலுப்படுத்துவது எப்படி உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து அரசுக்குப் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.  மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், 98-வது இந்திய அறிவியல் மாநாட்டின் தலைவர் கே.சி.பாண்டே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து உள்ளிட்டோர் பேசினர்.  நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 27 பேருக்கு பிரதமர் விருதுகளை வழங்கினார்.    

ஆராய்ச்சிகளுக்கென 14 புதுமைப் பல்கலைக்கழகங்கள்: கபில் சிபல்


சென்னை, ஜன.3: ஆராய்ச்சியிலும் கல்வியிலும் கவனம் செலுத்த 14 புதுமைப் பல்கலைக்கழகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.  சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் 98-வது இந்திய அறிவியல் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. மாநாட்டுத் தொடக்க விழாவில் அவர் பேசியது:  ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக பொதுத்துறையில் உள்ள நவரத்தின நிறுவனங்களைப் போன்று பல்கலைக்கழகங்களையும் தத்தெடுக்கும் திட்டம் உள்ளது.  இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்யப்படும். வெளிநாட்டிலிருந்து நிதி பெற அனுமதி அளிப்பதோடு, முழுமையான தன்னாட்சி வழங்கப்படும்.  பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு இந்தியப் பல்கலைக்கழகங்கள் அதிக அளவில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளன.  நாடு முழுவதும் 14 புதுமைப் பல்கலைக்கழகங்களை தொடங்குவது குறித்து திட்டமிட்டு வருகிறோம். இந்தப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் புதிய சாதனைகளைப் படைக்கும். ஏழ்மை, பசி, நீர்ப் பிரச்னை ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்டும்.  இந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பில் மற்ற பல்கலைக்கழகங்களைவிட பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றார் கபில் சிபல்.  துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை அதிக அளவில் உருவாக்கும் வேளையில், உயர் கல்வியின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்றார்.  அமர்த்யா சென்,  ரத்தன் டாடா பங்கேற்கவில்லை சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிய 98-வது இந்திய அறிவியல் மாநாட்டில் நோபல் விஞ்ஞானி அமர்த்யா சென், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் மாநாட்டுத் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.  அறிவியல் மாநாட்டு தொடக்க விழாவில், ரத்தன் டாடாவுக்கு ஜவாஹர்லால் நேரு விருது வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், நோபல் விஞ்ஞானி அமர்த்யா சென்னுக்கு மாநாட்டுத் தலைவரின் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், இருவரும் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.