Monday, January 3, 2011

இந்தியா அறிவியலாளர்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன்


சென்னை, ஜன. 3: இந்திய அறிவியலாளர்கள் புதுமையாகச் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.  இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2012-13 ஆம் ஆண்டை அறிவியல் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.  சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 98-வது இந்திய அறிவியல் மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:  இந்திய அறிவியலாளர்கள் மிகப் பெரியதாகவும், புதுமையாகவும் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர்களது சிந்தனை காலத்தை மீறியதாக இருக்க வேண்டும்.  21-ம் நூற்றாண்டின் ராமன்களையும் (நோபல் விஞ்ஞானி), ராமானுஜன்களையும் (கணித மேதை) இந்தியா உருவாக்க வேண்டிய நேரம் இது.  தரமான கல்வி, இந்தியப் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.  அறிவியல் கல்விக்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும் முக்கிய இணைப்புச் சங்கிலியாக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. நமது கல்விமுறையைப் பலப்படுத்தாமல், ஆராய்ச்சிகளில் சிறப்பிடம் பெற முடியாது.  அதேபோன்று, பல்கலைக்கழகங்களில் புதுமைகளைச் செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழக அமைப்புகளின் வளர்ச்சிக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.  கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 8 இந்திய தொழில்நுட்பக் கழகங்களையும், 5 இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், உயர் கல்வியை வழங்கவும் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் ஆராய்ச்சி முனைவர்களை உருவாக்கும் வகையில் அறிவியல் ஆராய்ச்சி அகாதெமி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பல்கலைக்கழகங்கள் புதுமையான எண்ணங்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் வரவேற்பு அளிக்கும் இடங்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில், அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்தும், நடைமுறைகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களை விடுவிக்க வேண்டும்.  நமது பொருளாதார வளர்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவை நமது அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்தவையாக உள்ளன. இதன் காரணமாகவே, அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசு அதிக அளவில் நிதியுதவி அளித்து வருகிறது.  அறிவியல் துறையில் இந்தியா உலகில் முதன்மையான நாடாக மாறுவதற்குரிய வழிமுறைகள் குறித்து அறிவியல் ஆலோசனைக் குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது.  அதன்படி, சிறந்த மாணவர்களை அறிவியல் துறை பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்களை அறிவியல் படிப்புகள் பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்பம், மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறைகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.  இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2012-13 ஆம் ஆண்டை இந்திய அறிவியல் ஆண்டாக அறிவிக்க வேண்டும். அறிவியல் ஆண்டில் புதிய தலைமுறையினர் அறிவியல் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். நோபல் விஞ்ஞானி சந்திரசேகரின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  நோபல் விஞ்ஞானி ராமனின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இந்தியாவில் பொருள்கள் தயாரிக்கப்படுவதில்லையே ஏன்? பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள், தொழில்துறையினருக்கான தொடர்பை வலுப்படுத்துவது எப்படி உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து அரசுக்குப் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.  மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், 98-வது இந்திய அறிவியல் மாநாட்டின் தலைவர் கே.சி.பாண்டே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து உள்ளிட்டோர் பேசினர்.  நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 27 பேருக்கு பிரதமர் விருதுகளை வழங்கினார்.    

No comments:

Post a Comment