சென்னை, பிப். 3: திராவிட இயக்கத்தை, திராவிட இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: மகாபலிச் சக்கரவர்த்தி பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொடுமை புரிகிற அரக்கர்களைத்தான், மக்களை கொலை செய்கிற, மக்களிடம் கொள்ளையடிக்கிற, இம்சைப்படுத்துகிற அரக்கர்களைத்தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நல்லவனாக இருந்தும், மக்களிடம் அன்பு பெற்றவனாக இருந்தும், அவர்தான் மன்னனாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பிய நிலையிலும், அந்த மன்னனை அழிக்கிறார் ஆண்டவன். அந்த நல்லவனின் வேண்டுகோளுக்கு இணங்க, அவனால் முன்னேறிய மக்களைப் பார்வையிட அவனுக்கு ஆண்டுக்கு ஒருநாள் அனுமதி வழங்குகிறார். அதுதான் ஓணம் பண்டிகை என்று கூறுகிறார்கள். நான் மகாபலி அல்ல; அவ்வளவு வலிமை பொருந்தியவன் அல்ல. ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகிற ஆட்சி மகாபலி மரபு ஆட்சி. என் தலைமையிலேயே இருக்கிற இந்த ஆட்சியை வீழ்த்த அத்தனை வழிகளிலும் முயற்சி நடைபெறுகிறது. ஏனென்றால் அவர்கள் கையை விட்டு ஆட்சி போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதை மீண்டும் கொண்டுவருவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கிடைத்துள்ள சாதனமாக இருப்பது பத்திரிகைகள். இந்த ஆட்சியை அகற்றிவிட்டு நாம் அமர்ந்துவிடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பது கேள்வி. ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறதே, இதனுடைய விளைவுகளையும் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.அதை எண்ணிப்பார்த்துதான் நாம் 21 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். மகாபலி மன்னன் ஆட்சியில் மக்கள் எத்தகைய நன்மைகளை எல்லாம் பெற்றார்கள் என்பதைப் போல, இந்த ஆட்சியின் மூலம் தமிழக மக்களுக்குச் செய்த நன்மைகளை ஏராளம். ஆனால், அவற்றைச் சொல்ல நேரமில்லை. தி.மு.க.வின் உச்சக்கட்ட சாதனை: தி.மு.க.வின் உச்சக்கட்ட சாதனையாக, கிராமங்களில் குடிசைகளே இருக்கக் கூடாது; நகரங்களில் குடிசைப் பகுதிகளே இருக்கக் கூடாது என்று அறிவித்து அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிப் பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலிலே இவர்கள் வெற்றி பெறவில்லை என்றால் என்ன ஆவது இந்தத் திட்டம் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்தத் திட்டம் தொடரும். வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் வெற்றிபெறுவோம் என்பதால் இந்தத் திட்டமும் தொடரும். என்னை நீங்கள் (மக்கள்) என்றைக்கும் மறக்காமல் இருப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தமிழகத்திலே செய்து முடித்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். செய்யத் தொடங்கியிருக்கிறேன். இந்தத் தொடக்கத்தை தொடர்ந்து முற்றாக முடிக்க வேண்டிய கடமையை, தி.மு.க.வின் ரத்த ஓட்டங்களான உங்களிடம் ஒப்படைக்கிறேன். ஒரு முடிவு எனக்கு ஏற்படுமானால், அண்ணா எப்படி என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போனாரோ, அப்படி இந்தப் பொறுப்பை உங்களிடம் நான் ஒப்படைத்திருப்பதாகக் கருத வேண்டும். அவ்வாறு கருதி, இந்தக் கழகத்தைக் காப்பாற்றுங்கள், திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுங்கள், திராவிட இனத்தைக் காப்பாற்றுங்கள் என்றார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.அன்பழகன், துணை முதல்வரும், தி.மு.க.வின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதிஇளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பேசினர்.
No comments:
Post a Comment