படித்தது தொலைதூரக்கல்வியில்; ஜெயித்தது ஐ.ஆர்.எஸ்., தேர்வில்!
- குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 100 பேர் பலி !
- இந்தியா அதிர்ச்சி தோல்வி : ஜிம்பாப்வே அபார ஆட்டம்: ரோகித் சதம் வீண்
- பந்தாவில் ஈடுபட்ட பதிவாளர்கள் : பரிவு காட்டிய பாதுகாப்பு போலீசார்
- ஒரு வாரத்தில் வேலை: மாற்றுத் திறனாளிகளிடம் முதல்வர் உறுதி
- ஆந்திராவில் வெடித்தது வன்முறை: ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் கைது
பதிவு செய்த நாள் : மே 29,2010,00:31 IST
கோவை : தொலை தூரக் கல்வி முறையில் பட்டம் பெற்ற விவசாயி மகன், ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் செவலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ்(28). தந்தை கருப்பையா, விவசாயி; தாயார் மாரியம்மாள், அங்கன்வாடிப் பணியாளர். இரண்டு அண்ணன், அக்கா, தங்கை என 4 பேருடன் பிறந்தவர் சங்கர் கணேஷ். அண்ணன் இருவரும் படிக்காமல், விவசாயம், வேலை என்று போய் விட்டனர். தம்பியையாவது படிக்க வைக்க வேண்டுமென்று, சங்கரை நடையநேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். படிப்பில் சோடை போகாத சங்கர், எஸ்.எஸ்.எல்.சி.,யில் 435 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார். ஆனாலும், அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லை.
ஏதாவது, தொழிற்படிப்பைக் கற்றுத்தரலாமென்று, சிலைமான் ருக்மணி சண்முகம் பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் டிப்ளமோ படிப்பில் சங்கரை சேர்த்து விட்டனர். 1997ல் டிப்ளமோ முடித்து வந்ததும், திருப்பூரில் சாயத் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அதற்குள் ஒரு தங்கைக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க, அவரையும் படிக்க வைக்க உதவ வேண்டிய கட்டாயம். ஆனாலும், படிப்பின் மீதான வேட்கை தீரவில்லை. தாய், தந்தைக்கும் கூட, "படிக்கிற பையனை சரியாகப் படிக்க வைக்கவில்லையோ' என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (பொருளாதாரம்) படிக்க, தொலைதூரக் கல்வியில் சேர்ந்தார். படிப்பின் மீதிருந்த காதல், பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக வரவைத்தது. பட்டம் கையில் வந்ததும், உள்ளுக்குள் இருந்த ஐ.ஏ.எஸ்., ஆசை கொழுந்து விட்டு எரிந்தது.
கடந்த 2005ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஆரம்பித்தார். ஆனால், அடுத்த ஆண்டில்தான் ஆயத்தத்தேர்விலேயே தேர்ச்சி பெற முடிந்தது. அதன் பின், ஆண்டுதோறும் முயற்சிகள் தொடர்ந்தன. சென்னை சென்று சிறிது காலம் பயிற்சி பெற்றார். இதற்கு இடையில்தான், கோவை அரசு கல்லூரி பேராசிரியர் கனகராஜ் தொடர்பு கிடைத்தது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை எடுப்பதை அறிந்து, அவர் நடத்தும் வகுப்புகளுக்குச் சென்றார். இதற்காகவே, மீண்டும் திருப்பூரில் வேலைக்குச் சேர்ந்தார் சங்கர் கணேஷ். கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்பு, அவரை பக்குவப் படுத்தி, பல மடங்கு திறமையை வளர்த்துக் கொள்ள, அவரைத் தூண்டி விட்டது. ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தந்த நம்பிக்கை உரையும், பேராசிரியர் கனகராஜ் கற்றுத் தந்த நுணுக்கங்களும் அவரை சாதிக்க வைத்தது.
நான்கு முறை பிரதான தேர்வையும், மூன்று முறை நேர்காணலையும் சந்தித்த சங்கர் கணேஷ், இப்போது ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவரது வெற்றி, கிராமப் புறங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய, தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவியருக்குக் கிடைத்த வெற்றியாகும். எல்லாவற்றையும் விட, தொலை தூரக் கல்வி முறையில் பட்டம் பெற்று, சிவில் சர்வீஸ் தேர்வில் ஜெயித்த பெருமை, சங்கர் கணேஷ்க்கு மட்டுமே இருக்கிறது. எதிர்காலத்தில் தொலைதூரக் கல்வியில் படித்தவரை, தாழ்வாகக் கருதும் நிலையை மாற்றவும் இவரது வெற்றி உதவும். ""நம்பிக்கையும், விடாமுயற்சியும், சரியான வழி காட்டுதலும் இருந்தால், எந்த கிராமத்து மாணவனும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம். நிறைய புத்தகங்களைப் படிக்க நேரம் ஒதுக்குவதோடு, ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் நிறைய முயற்சி எடுக்க வேண்டும். தொலை தூரக்கல்வியில் படிப்பவர்களை, உதாசினப்படுத்துகிற போக்கு, இந்த சமூகத்தில் நிறைய இருக்கிறது. அதுவும் மாற வேண்டும்,'' என்று கூறும் சங்கர் கணேஷின் அடுத்த இலக்கு ஐ.ஏ.எஸ்., அடுத்த ஆண்டில் தேர்வெழுதி, நிச்சயம் ஜெயிப்பேன் என்கிறார் இந்த கிராமத்து இளைஞர்.
புதிய அகராதி! தொலைதூரக் கல்வியில் படித்து பட்டம் பெற்று, சிவில் சர்வீஸ் தேர்விலும் சாதனை படைத்து, புதிய சாதனை படைத்துள்ள சங்கர் கணேஷ், ஆங்கிலம், தமிழ் என இரு மொழிப் பத்திரிக்கைகளிலும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இந்திய பொருளாதார வாய்ப்புகள் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். பொருளாதாரம் தொடர்பான வார்த்தைகளை உள்ளடக்கிய ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றையும் உருவாக்கி வருகிறார். வரும் ஆகஸ்ட்டில் இந்த புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
he is a example person
ReplyDelete