கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளில் பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 3,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பல்கலையின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோவிந்தராஜூலு கூறியதாவது:
செம்மொழி மாநாட்டு பணிகளில் பாரதியார் பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 3,500 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைவருக்கும் பல்வேறு குழுக்களில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், முதல் நாள் கூட்டத்தை ஒழுங்கும் படுத்தும் பணியில் மட்டும் அனைவரும் ஈடுபடுத்தப்படுவர்.
காவல் துறை சார்பில் இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் 150 பேரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தவிர, பொது அரங்கத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது, வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்களும் மாணவர் ஆர்வலர்களும் பங்கேற்பர்.
உணவு வழங்கும் இடத்தில் உணவு வழங்குவது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். எந்த நேரமும் எந்த பணியையும் மேற்கொள்ள மாநாட்டு கட்டுப்பாட்டு அறையில் 500 மாணவர்கள் தயார் நிலையில் இருப்பர். மாநாட்டின் நிறைவு நாளில் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் வழிகாட்டவும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர். வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் பங்கேற்க வரும் வி.ஐ.பி., விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கல்லூரி ஆசிரியர் உதவியாளராக நியமிக்கப்படுகிறார்.
அனைத்து மாணவர்களுக்கும் செம்மொழி மாநாட்டு முத்திரை மற்றும் குழுவின் பெயர் அச்சிட்ட பனியன் வழங்கப்படும். கூட்டத்தின் நடுவே தனியாக அடையாளம் காண வசதியாக வெள்ளை, நீல நிறங்களில் பனியன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கோவிந்தராஜூலு தெரிவித்தார்.
No comments:
Post a Comment