தமிழகம்
இலங்கைத் தமிழருக்கு மறுவாழ்வு: மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம்
First Published : 07 Jun 2010 12:00:00 AM IST
Last Updated : 07 Jun 2010 12:18:18 AM IST
சென்னை, ஜூன் 6: இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை அதிபர் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) இந்தியாவுக்கு வர இருப்பதை ஒட்டி மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களின் சாவுக்கு காரணமான ராஜபட்ச இந்தியா வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு, பொருளாதார உதவி மற்றும் நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.கடித விவரம்:இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் 2009 டிசம்பர் மாதத்துக்குள் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு உறுதி அளித்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.ஆனால், இலங்கையில் இப்போதும் 80 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் அரசிடம் இருந்து மறுவாழ்வுப் பணிகளை எதிர்பார்த்து இருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.அதேபோல், முகாமில் இருந்து வெளியில் சென்று மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பொருளாதார வளர்ச்சியும், நிரந்தர அரசியல் தீர்வுக்கான பணிகளுக்காக நீதியின் அடிப்படையிலான சமரசப் பேச்சுகளும் தேவைப்படுகின்றன.எனவே, இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபரின் பயணத்தின் போது இந்த இரு விஷயங்களைப் பற்றியும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இதை சிறப்பு விஷயங்களாக எடுத்துக் கொண்டு,மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு, இலங்கையில் உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் தேவை குறித்து ராஜபட்சவிடம் வற்புறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.கடந்த ஆண்டு திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை சென்று, முகாம்களில் தமிழர்களை சந்தித்துவிட்டு வந்தனர். அதற்குப் பிறகு மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாக முகாம்களில் இருந்து தமிழர்கள், வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர் அல்லது அவர்கள் முன்பு வாழ்ந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவர் என்று இலங்கை அரசு அறிவித்தது.அதன்படி அதற்கடுத்த வாரங்களில் சிலர் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இருந்தபோதிலும், தமிழர்களின் முகாம்களில் இன்னும் ஏராளமானோர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழர்கள் அனைவரையும் சொந்த இடங்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்து, சம அந்தஸ்துடன் வாழ வழி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அதை வலியுறுத்தும் வகையில் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment