Tuesday, June 15, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கம் கருணாநிதி, 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார் நிகழ்ச்சிகள் விவரம்
சென்னை, ஜூன். 15-
 
கோவையில் வருகிற 23 முதல் 27 வரை உலகத் தமிழ்ச்செம் மொழி மாநாடு நடக்கிறது. இதன் ஆய்வரங்கத்தினை முதல்- அமைச்சர் கருணாநிதி 24-ந்தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.
 
இந்தியா உள்பட 50 நாடுகளிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாகவும், கட்டுரையாளர்களாகவும், நோக்கர்களாகவும், பொழிவாளர்களாகவும், 3000 பேருக்கு மேல் கலந்து கொள்கிறார்கள்.
 
முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், பொழிவரங்கம், அமர்வரங்கம் என நான்கு நிலைகளில் ஆய்வரங்கம் ஜூன் 24 முதல் 27 வரை கொடீசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. அமர்வரங்கம் 234 அமர்வுகளில் நடை பெறவுள்ளது. கொடீசியா வளாகத்தில் ஆய்வரங்க நிகழ்வுகளுக்காக 23 அரங்கக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோ, நக்கீரர், கபிலர், பரணர், ஒளவை, பூங்குன்றனார், வெள்ளி வீதியார், பெருஞ்சித்திரனார், கோவூர்கிழார், சாத்தனார், காக்கைபாடினியார், அம்மூவனார், மாசாத்தியார், நக்கண்ணையார், மாமூலனார், மாங்குடி மருதனார், உருத்திரங்கண்ணனார், நப்பூதனார், பிசிராந்தையார், கல்லாடனார், கம்பர் என்று அரங்கக் கூடங்களுக்கு முதல்- அமைச்சர் பண்டைத் தமிழ் புலவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்.
 
தொடக்க விழா நடைபெறும் அரங்கம் 5000 பேர் அமரக்கூடிய தொல்காப்பியர் அரங்கமாகும். இந்த அரங்கத்தில் நாள்தோறும் முகப்பரங்கப் பொழிவுகள் காலையில் நடைபெறுகிறது. மேலும் 26.6.10 அன்று பிற்பகல் “சங்க காலம்-அண்மைக்கால ஆய்வுநிலைகள்” எனும் தலைபபில் கலந்தாய்வரங்கம் நடைபெறுகிறது.
 
பொழிவரங்கம், கலந்துரையரங்கம் திருவள்ளூர் அரங்கத்திலும், இளங்கோ அரங்கத்திலும் நடைபெறவுள்ளன. முன்னரே பதிவு செய்து கொண்டுள்ள பேராளர்கள், நோக்காளர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் மட்டுமே ஆய்வரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
 
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்க நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
 
ஆய்வரங்க தொடக்க விழா தொல்காப்பியர் அரங்கத்தில் வருகிற 24-ந் தேதி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தை தொடங்கி வைக்கிறார். அமைச்சர் அன்பழகன் வெளியிடும் சிறப்பு மலரையும் பெற்றுக் கொள்கிறார்.

இதற்கு சிவதம்பி தலைமை தாங்குகிறார். தமிழ் அறிஞர்கள் ஜார்ஜ்ஹார்ட், கிறிஸ்டினாமுரு, கந்தையா, திருமலைச்செட்டி உள்பட 9 பேர் பங்கேற்கிறார்கள். பொற்கோ வரவேற்கிறார். வ.செ.குழந்தைசாமி உள்பட 4 பேர் வாழ்த்தி பேசுகிறார்கள். அவ்வை நடராஜன் நன்றி கூறுகிறார்.
 
பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை திருவள்ளூர் அரங்கில், உலக நாடுகளில் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். இதே நேரத்தில் இளங்கோ அரங்கில் “உலகமயமாதல் சூழ்நிலையில் தமிழ்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. இதற்கு நாகநாதன் தலைமை தாங்குகிறார். இவற்றில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். மாலை 5.30 முதல் 6 மணி வரை கொடிசிவளாகத்தில் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் “வலி அறுப்பு” என்ற திருநங்கையர் நாடகம் நடக்கிறது.
 
25-ந்தேதி காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தொல்காப்பியர் அரங்கில் “சிந்துவெளி எழுத்துச்சிக்கல்: திராவிடத் தீர்வு” என்ற தலைப்பில் முகப்பரங்கம் நடக்கிறது. இதற்கு ஐராவதம் மகா தேவன் தலைமை தாங்குகிறார். பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை திருவள்ளூர் அரங்கில் தமிழண்ணல் தலைமையில் “தமிழாய்வுச் செல் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. இளங்கோ அரங்கில் “தத்துவ உலகில் தமிழ்” என்ற தலைப்பில் பொழிவரங்கம் நடக்கிறது. இதற்கு தோத்தாத்திரி தலைமை தாங்குகிறார். இதையடுத்து கூத்துப்பட்டரை வழங்கும் “ஆற்றாமை” நாடகம், பூலவாடி முத்து மீனாட்சி குழுவினர் வழங்கும் “அண்ணன் மார்கூத்து” ஆகியவை இடம் பெறுகிறது.
 
26-ந்தேதி காலை 9.15 முதல் 10.15 மணி வரை தொல்காப்பியர் அரங்கில் அமைச்சர் அன்பழகன் தலைமையில் முகப்பரங்கம் நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஜார்ஜ் ஹார்ட் தலைமையில், “சங்க காலம்-அண்மைக்கால ஆய்வு நிலைகள்” குறித்து கலந்தாய்வு நடக்கிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். மாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை நடிகை ரோகிணி பங்கேற்கும் “பாஞ்சாலி சபதம்” 6.30 மணி முதல் 7.30 மணி வரை மவுனக்குரல் வழங்கும் “பனித்தீ” ஆகியவை நடக்கிறது.
 
25-ந்தேதி காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தொல்காப்பியர் அரங்கத்தில் பொன்.கோதண்டராமன் தலைமையில் “இன்றைய நோக்கில் தொல்காப்பியம்” என்ற தலைப்பில் முகப்பரங்கம் நடக்கிறது. 10.30 மணி முதல் 12 மணி வரை திருவள்ளுவர் அரங்கில் “தமிழ் வளர்ச்சி” என்ற தலைப்பில் பொழி வரங்கம் நடக்கிறது. அவ்வை நடராஜன் தலைமை தாங்குகிறார்.
 
இளங்கோ அரங்கில் 12 மணி முதல் 1.30 மணி வரை “படைப்பிலக்கிய நோக்கும் போக்கும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. இதற்கு சிவத்தம்பி தலைமை தாங்குகிறார். இதில் கவிஞர் கனிமொழி உள்பட பலர் பங்கேற்கிறார்கள். பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை “எதிர்கால தமிழ் கவிதை” என்ற தலைப்பில் பொழிவரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார்.

No comments:

Post a Comment