Friday, July 2, 2010

அனைத்தும் தமிழில்; ஆண்டுக்கு ரூ.10 கோடி போதும் : அரசுக்கு, சிதம்பரம் யோசனை

அனைத்தும் தமிழில்; ஆண்டுக்கு ரூ.10 கோடி போதும் : அரசுக்கு, சிதம்பரம் யோசனை
ஜூன் 27,2010,21:02
கோவை : ""மருத்துவத்தமிழ், சட்டத்தமிழ், பொறியியல் தமிழ், புள்ளியியல் தமிழ், அறிவியல் தமிழ், பொருளாதாரத்தமிழ், கணிதத்தமிழ், கணினித்தமிழ் என, அனைத்துத் துறைகளிலும் புதிய தமிழ் நூல்கள் வெளியிடப்பட வேண்டும். ஆண்டு தோறும் 100 புதிய நூல்களை வெளியிட ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் தேவைப்படும். தமிழக அரசுக்கும், புரவலர்களும் இத்தொகை ஒன்றும் பெரிதல்ல,'' என்று, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

மாநாட்டின் நிறைவு விழாவுக்கு முன்னிலை வகித்து சிதம்பரம் பேசியதாவது: கடந்த 23ம் தேதி துவங்கி இன்று (நேற்று)வரை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், தமிழ் மொழி வளர்ச்சிக்கான நூற்றுக்கான ஆய்வுகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், கலை இலக்கிய நாட்டிய நிகழ்வுகள் நடந்துள்ளன. தமிழ்மொழி வரலாற்றில் பல புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பெருமையை எண்ணிப்பார்க்கும் போது, தமிழ்மொழிக்கு அளப்பரிய தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களை நினைவுகூறாமல் இருக்க முடியாது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பிறமொழி ஆதிக்கத்தில் பல நூற்றாண்டுகளாக கட்டுண்டு கிடந்த தமிழை மீட்க உ.வே.சாமிநாத அய்யர், மீனாட்சிசுந்தரனார், பாவாணர், பரிதிமாற்கலைஞர், டாக்டர் வரதராசனார், சேதுப்பிள்ளை, வையாபுரி பிள்ளை, மயிலை வேங்கிடசாமி, வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், ஜி.யூ.,போப் போன்ற அறிஞர்களுக்கு தமிழ் மொழியும், தமிழ்ச் சமுதாயமும் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.

"திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்ந்த மொழியாக நிலைபெற்று விளங்குகிறது தமிழ்' என்று 148 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர் டாக்டர் கால்வெல் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆராய்ச்சி நூல் குறிப்பிடுகிறது. அன்று, டாக்டர் கால்வெல் கண்ட கனவு நனவு தற்போது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் நாம் திளைத்திருக்கிறோம். ஒரு செம்மொழியின் தகுதிகள் என்ன? 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும்; 1,500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மொழியின் இலக்கணங்கள் தோன்றியிருக்க வேண்டும்; அந்த இலக்கியமும், இலக்கணங்களும் எந்த ஒரு பிறமொழியையும் தழுவாமல், சுயமாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். மொழியியல் அறிஞர்கள் வகுத்துள்ள இந்த தகுதிகள் அனைத்தும் தமிழ் மொழிக்கு உண்டு. இந்த கூற்றை தடுப்பாரும் இல்லை; மறுப்பாரும் இல்லை.

இதனால் தான் நம்முடைய தமிழ்மொழி, செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றது. ஒரு மொழியின் இலக்கியங்களும், இலக்கணங்களும் அந்த மொழியை பேசும் மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் தன்மைகளும் வளர்ச்சியை ஒட்டியே அமைந்திருக்கிறது. ஆதிமனிதன் எவ்வாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்தினான்? அவனுடைய மொழி என்ன? சைகைகள், உடல் அசைவுகள் தான் அவனுடைய மொழி. திருந்தாத பண்புகளுடன் இருந்த ஆதிமனிதனின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல திருத்தங்கள் ஏற்பட்டன. மனிதன் திருந்துகிறான் என்றால், நல்ல பண்படுகிறான்; நல்ல பண்பாடுகளை பின்பற்றுகிறான், என்று பொருள். ஓர் உணர்வை ஒரே ஒலியில் வெளிப்படுத்தும் போது மொழி பிறக்கிறது. ஒரு குறிப்பைப் பதிவு செய்யும் போது மொழிக்கு வரிவடிவம் கிடைக்கிறது. வரிவடிவம் பெற்ற மொழியில் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியம் பெற்ற மொழிக்கு, இலக்கணம் வகுக்கப்படுகிறது.

ஒலி, வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் என்ற பண்புகளுடன் ஒரு மொழி செம்மைப்படுகிறது. ஒரு மொழி பேசும் மக்கள் செம்மை பெற்றதால், அந்த மொழியும் செம்மை பெற்றது என்றும் சொல்லலாம். ஒரு மொழி செம்மைப்படும் போது அந்த மொழியை பேசும் மக்களும் செம்மைப்படுகிறார்கள் என்றும் சொல்லலாம். திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் அந்த மொழிக்கு மட்டுமா பொருந்தும்? அந்த மொழிக்கு சொந்தக்காரர்களுக்கும் பொருந்தும். ஆகவே தான் நான் பெருமையோடு சொல்வேன், 2,500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ்ச்சமூகம் தான் பண்புகளும், நாகரீகமும் நிரம்பிய சமுதாயமாக விளங்கியிருக்க வேண்டும். அப்படி விளங்கியதால் தான், தமிழ்ச்சமூகம் 2,500 ஆண்டுகளாக செழுமை பெற்று நிலைத்திருக்கிறது. நம்முடைய காலத்தில் தமிழ் செம்மொழியாக போற்றப்படுகிறது. தமிழ் உலகமொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. நாளையும், அடுத்த நூற்றாண்டிலும் வரும் ஆயிரம் ஆண்டுகளிலும், அதற்கு பிறகும் தமிழ் செம்மொழியாக போற்றப்பட வேண்டும் என்பதே, நமது குறிக்கோள்.

ஒரு மொழிக்கு ஆதாரமே பேச்சு தான். தமிழில் பேசினால் தான், தமிழ் வாழும். வழக்கொழிந்த மொழிகள் என பல மொழிகளை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்தவை. கிரேக்க மொழியும் ஏறத்தாழ வழக்கொழியும் நிலைக்கு வந்தது. இப்போது, கிரேக்க நாட்டில் அம்மொழியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வாழும் மொழி. இன்னும் தமிழ் நீடூழி வாழவேண்டும் என்றால்...தமிழரும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் மக்களும் தமிழில் பேச வேண்டும்; அதற்காக, அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என்று பொருளல்ல; ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளை கற்றுக்கொள்ளக்கூடாது என்று பொருளல்ல. பேசும் போது தமிழில் பேச வேண்டும். குறிப்பாக, பெற்றோர் தங்களது குழந்தைகளுடனாவது தமிழில் பேச வேண்டும்.

இந்த நேரத்தில் நான் சற்று வருத்தத்துடன் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வட்டார வழக்கு, என்று ஒன்று இருக்கிறது. வட்டார வழக்கு மொழியிலும், நல்ல தமிழ்ச்சொற்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதில் தவறு இல்லை. வட்டார மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளன. ஆனால், வட்டார வழக்கு என்று வரும்போது, ஒரு மொழி சிதைக்கப்படுவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில், குறிப்பாக நகரங்களில், இந்த போக்கை காணமுடிகிறது. தமிழ் மொழியில் கொச்சையாக பேசுவது, அருவெறுப்பாக தமிழில் இல்லாத புதிய சொற்களை உருவாக்குவது, அசிங்கமான அர்த்தங்களை சொற்களை புகுத்துவது என்பதெல்லாம் "வட்டார வழக்குமொழி' என, ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு செய்தால் வழக்கு மொழி, வழுக்குமொழியாக மாறி, பிறகு இழுக்குமொழியாக மாறிவிடுமோ என்று கவலைப்படுகிறேன்.

இலக்கியங்கள் தொடர்ந்து படைக்கப்பட்டால் தான் ஒரு மொழி, வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியங்கள் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்கு போதுமானது அல்ல. இலக்கியங்களோடு உறவாடும் வாய்ப்பும், வசதியும் சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றன; அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் அந்த மொழி பயன்பட்டால் தான், அம்மொழி வாழும் மொழியாக இருக்க முடியும்; லத்தீன், பாலி மொழி வரலாற்றை மீண்டும் நினைத்துப்பாருங்கள். இலக்கியத்தமிழ் ஒரு வகை. அதைப் போல் மருத்துவத்தமிழ், சட்டத்தமிழ், மேலாண்மைத் தமிழ், புள்ளியியல் தமிழ், அறிவியல் தமிழ், பொருளாதாரத் தமிழ், கணிதத்தமிழ், கணினித்தமிழ் போன்றவைகளுக்கும் ஊக்கமளித்தால் தான் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்து ஆண்டுகளுக்கு ஓங்கி வளர்ந்த உயர் செம்மொழியாகத் தமிழ் விளங்க முடியும். அதற்கு போதிய நிதியில்லை என்பது, மிகப்பெரும் குறை. பயில்பவர்களும், பயிற்றுவிப்பர்களும் இருந்தால் தான் அத்தகைய மொழிகளை நூலாக்க முடியும். "நூல்களை எழுதி வெளியிட்டால் தானே நாங்கள் அதை படிக்க முடியும் அல்லது பாடநூலாக வைக்க முடியும்' என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கூறுகிறார்கள். புதிய காலத்துக்குத் தேவையான நூல்கள் தமிழில் வெளியிடப்பட வேண்டும். இந்த வரிசையில் சில பல்கலைக்கழங்கள் சில பாடநூல்களை பதிப்பித்து வெளியிடுகின்றன; இந்த முயற்சி மட்டும் போதாது. நூலாசிரியர்கள் பாடநூல்கள் மற்றும் பயிற்சி நூல்களை எழுதும் போது பாமரர்களுக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும். "நூலாசிரியர்களே, உங்கள் சன்மானத்தை நாங்கள் தருகிறோம்; பதிப்புக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால், மளமளவென புதிய நூல்கள் வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நூலாசிரியருக்கு ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க வேண்டும்; பதிப்பாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பதிப்புச் செலவாகவும், லாபமாகவும் வழங்க வேண்டும். ஒரு நூலுக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் தேவைப்படும். தமிழக அரசுக்கும், தமிழ் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு 10 கோடி செலவழித்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் செம்மொழியாக, உலகமொழியாக ஒளிவீசும்.
இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.

No comments:

Post a Comment