முதல் பக்கம்»செய்திஎழுத்தின் அளவு:
தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்
ஜூன் 23,2010,14:43கருத்துகள் (140)
Share 1diggdigg
கோவை : ""தமிழ்நாட்டிற்கென்று எனது இதயத்தில் தனி இடம் உள்ளது; செம்மொழி மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்,'' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் லச்சினையை திறந்து, மாநாட்டை துவக்கி வைத்து அவர், பேசியதாவது: உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்துள்ள தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள் பங்கேற்றுள்ள முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் துவக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுக்கு 2004ம் ஆண்டில் செம்மொழித் தகுதி கிடைத்தது. தமிழின் தொன்மை நிலை மற்றும் செறிவால் மட்டும் இந்தத் தகுதி கிடைக்கவில்லை. மாபெரும் கலாச்சாரத்துக்கும் அடித்தளமாக இந்த மொழி இருப்பதனால்தான், செம்மொழித் தகுதி கிடைத்திருக்கிறது. செம்மொழித் தகுதி பெற்றதற்காக இத்தகைய மகத்தான மாநாட்டை நடத்தியதற்கு முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன். கவிஞர், எழுத்தாளர், முதிர்ந்த அரசியல் தலைவர், முதல்வர் என பல தளங்களில் பணியாற்றும் அவர், இந்த மாநாட்டின் மையநோக்குப் பாடலையும் எழுதியுள்ளார். 19 ஆண்டுகள் முதல்வராகவும், 50 ஆண்டுகளாக சட்டமன்றத்திலும் பணியாற்றும் அவர், தன்னுடைய வேலைப்பளுவுக்கு இடையிலும் இலக்கியப் பணியை மேற்கொள்ளும் அவரது திறனைப் பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டிற்கென்று எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. ஜனாதிபதி தேர்தலுக்கான எனது பிரசாரத்தை நான் சென்னையில்தான் துவக்கினேன். தேர்தல் முடிந்தபின், புதுடில்லியிலிருந்து எனது முதல் வெளியூர் பயணம், தமிழகத்தில் நடந்த ராஜிவ் தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் உரையாற்றுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்பது, தமிழகத்துடனான எனது உறவை மேலும் தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன். உலகின் பழமையான பண்பாட்டையும், செறிவான கலாச்சாரத்தையும் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்கள், இந்தியாவின் கலை, இலக்கியம், இசை, கட்டுமான பெருமைகளை உலகிற்கு அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளன. பட்டு வணிக வழி ஆரம்பிப்பதற்கு முன்பே, தமிழர்கள் முதலாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கடல் கடந்து சென்று, வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியதற்கு ஆதாரமாக, "திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழி தமிழில் கூறப்பட்டுள்ளது.
தமிழர்களின் படைப்புத் திறனால், அவர்கள் எத் துறையில் ஈடுபட்டாலும் சாதனை படைப்பர் என்பது என் நம்பிக்கை. தமிழின் வரலாறு, நமது தேசத்தின் பெருமை. பிற மதங்களை மதிக்கும் தன்மை, தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பங்காகவுள்ளது. சைவ, வைணவ தத்துவங்களின் உறைவிடமாக தமிழகம் உள்ளது. அதில் உருவான கருத்துக்களே, ஜைனம், புத்தம், இஸ்லாமியம் மற்றும் கிறித்துவ மதக்கருத்துக்களிலும் பிரதிபலிக்கின்றன. அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாத மதச்சார்பற்ற சமூகத்தை உருவாக்குவதில் தமிழகம் முன்னோடியாகவுள்ளது.
சுயசார்புள்ள பொருளாதார, நிர்வாகங்களையுடைய கிராமங்களுடன் தமிழகம் இயங்கி வருகிறது. இந்த கிராமங்கள் அனைத்தும், சுய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவில் அதிகாரம் பெற்று விளங்குகின்றன. சமூக வாழ்வு மற்றும் கலாச்சாரத்திலும் அவை தங்களது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ பாண்டியர்கள், மக்களின் நலனுக்காக பணியாற்றியதோடு, கலை மற்றும் கலாசாரங்களை வளர்ப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளனர். அவர்களால் தமிழ்க் கலாசாரம், கிழக்கிலும், மேற்கிலும் பரவி வளர்ந்துள்ளது. பல்லவர்களின் கோவில் கட்டுமானக்கலையும், சோழர்களின் வெண்கலச் சிற்பங்களும் பிரசித்தி பெற்றவை. பரத நாட்டியக் கலையும், கர்நாடக சங்கீதமும் இந்த மண்ணில்தான் பிறந்துள்ளன. இவையனைத்திலும் தமிழ் மொழிக்கு பிரதான பங்களிப்பு உள்ளது.
உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் மிகவும் பழமையானதும், ஏராளமான இலக்கிய மற்றும் இலக்கண வளத்தையும் உடைய மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. தொல்காப்பியம், கி.மு.200 ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்தில் தமிழ் மொழியில் நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. மனிதர்களுக்குள் சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்தும் வகையில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத் தமிழ்ப் பாடல்களில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று எழுதப்பட்டுள்ளது. வாழ்வின் நன்னெறிகளை திருக்குறளில் திருவள்ளுவர் தெளிவாக விளக்கியுள்ளார். தமிழ் தெரியாததால், திருக்குறளை அது எழுதப்பட்ட மொழியிலேயே படிக்க முடியாதது குறித்து, மகாத்மா காந்தியே வருந்தியுள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலும், சுதந்திரப்போராட்டத்துக்கு அஹிம்சை வழியில் போராடியதிலும், தமிழ்ச் சமுதாயம் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை, மிக அற்புதமான இலக்கியங்கள். சுப்ரமணிய பாரதி போன்ற தமிழ்க் கவிஞர்களின் பாடல்கள், மக்களிடம் தேசப்பற்றையும் சுதந்திர தாகத்தையும் ஏற்படுத்தின. தமிழின் அடுத்த தலைமுறை, தமிழ்க் கலாச்சாரத்தையும், அதன் இலக்கிய நெறிøயும், கொள்கைகளையும் பின் பற்றி நடக்க வேண்டும். ஒரு மொழி என்பது இரு செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டுமென்று நேரு வலியுறுத்துவார். தொன்று தொட்டு வரும் பாரம்பரிய வேர்களை அடிப்படையாகக்கொண்டும், காலத்துக்கேற்ப வளர்ந்து பரவும் மொழியாகவும், மக்கள் பின்பற்றுவதாகவும் இருக்க வேண்டுமென்று கூறுவார். தமிழ் மொழி, பழமையுடையதாகவும், மாறி வரும் சூழலுக்கேற்ப அதன் தேவைகளை நிறைவேற்றுகிற மொழியாகவும் உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு இதில் முக்கியப் பங்கு உள்ளது. கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள அஸ்கோ பர்போலாவைப் பாராட்டுகிறேன். முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதை நிறைவேற்றும் அளவுக்கு இந்த மாநாடு வெற்றி பெறுமென நம்புகிறேன். இவ்வாறு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசினார்.
No comments:
Post a Comment