அறப்போராட்டத்தால் தமிழுக்கு செம்மொழி தகுதி முதல்வர் கருணாநிதி பேச்சு
தஞ்சாவூர்: ""உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும்,'' என, தமிழக முதல்வர் கருணாநிதி பேசினார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மைய துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் ராஜேந்திரன் வரவேற்றார். கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மையத்தை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டுமென மத்தியில் பலர் பிரதமர்களாக, தமிழகத்தில் பலர் அரசர்களாக இருந்தும் கூட பெற முடியவில்லை. 100 ஆண்டுக்கு முன் பரிதிமாற்கலைஞர் உட்பட பலர் வேண்டுகோள் விடுத்தும் கிடைக்காத தகுதி, நாம் நடத்திய அறப்போராட்டத்தால் கிடைக்கப் பெற்றுள்ளது. நம்மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கிய நிலையில், சோனியா எனக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை நான் திருச்சியில் படித்துக் காண்பித்தேன். அதில், "தமிழுக்கு செம்மொழி தகுதி பெற தி.மு.க., உள்ளிட்ட பல கட்சி, அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தாலும், இத்தகுதி வழங்கியமைக்கு கருணாநிதியே உம்மையே அத்தனையும் சாரும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இதை என் பேரன், பேத்தி காலத்திலும் வைத்து காப்பாற்ற வேண்டிய செப்பேடு என்றேன். வரலாற்றுச் சின்னமாக நான் அதை பாதுகாத்துள்ளேன். செம்மொழி குறித்து நாம் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மைசூரில் இயங்கிய தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மத்திய அரசின் அனுமதியுடன் மாற்றியுள்ளோம். உலகத் தமிழ் மாநாடு போல உலகச் செம்மொழி மாநாடு நடத்தி 500 வெளிநாட்டு அறிஞர், ஆய்வாளர், புலவர்களை பங்கேற்கச் செய்தோம். உலகச்செம்மொழி அனைத்தையும் ஆய்வு செய்ய தமிழ் பல்கலையில் ஓர் உயராய்வு மையம் அமைகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு என தனித்தனி பல்கலைக் கழகம் பல உள்ளன.
இருந்தும், உலகச் செம்மொழி அனைத்துக்கும் இங்குள்ள ஆய்வு மையம் பொதுவாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும், என முடிவானது. தமிழ் பல்கலையில் மார்ச் 27ல் நடந்த ஆட்சி மன்றக்குழுவில் உலக செம்மொழி உயராய்வு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி, மே 7ம் தேதி மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். கோவை மாநாட்டுக்குப் பின், அதை உடன் பரிசீலித்து ஜூலை 14ம் தேதி பல்கலை மானியக்குழு மூலம் இரண்டு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கோவை மாநாடு என்பதை தெரிவிக்கிறேன். இந்நிதி மூலம் இங்கு உயராய்வு மையம் துவக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும். இவ்வாறு கருணாநிதி பேசினார். துணை முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி.மணி, பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment