Tuesday, August 10, 2010

தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா

தமிழகம்செப்டம்பர் 25, 26-ல் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா


First Published : 08 Aug 2010 12:00:00 AM IST

Last Updated :


சென்னை, ஆக. 7: தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் அங்கு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.



ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.



கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:



ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா, தஞ்சை மாநகரில் செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் இரண்டு நாள்கள் சிறப்பாக நடத்தப்படும்.



இந்த விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளிலும் நடத்தப்படும். அதே நாள் மாலையில், தஞ்சைப் பெரிய கோயிலில் அனைத்திந்திய பரத நாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.



அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.



இரண்டாம் நாள்: இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சைப் பெரிய கோயிலில் பொது அரங்கமும் நடைபெறும்.



அன்றைய தினம் மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்படும்.



தஞ்சை மாநகருக்காக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் தொடங்கப்படும். அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்கள், பல்வேறு சான்றோர்கள், ஆன்றோர்கள், அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுவர்.



பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவை ஒட்டி வரலாற்றுக் கண்காட்சி நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் க.அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம், வணி வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் உள்பட பலரும் பங்கேற்றனர்.





கட்டப்பட்ட காலம் எப்போது?





தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் 1006-ம் ஆண்டு தொடங்கி 1010-ம் ஆண்டில் முடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.



தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் என்று பெரிய கோயில் அழைக்கப்படுகிறது. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அது விளங்கி வருகிறது.



10-ம் நூற்றாண்டுக் காலத்தில் சோழப் பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்த போது, ராஜராஜ சோழ மன்னனால் பெரிய கோயில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் ராஜராஜேஸ்வரம் எனவும் பின்னர், நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது.



17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்ட போது, பிருகதீசுவரம் ஆனது. இந்தக் கோயில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியச் சின்னமாக கடந்த 1987-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

1 comment:

  1. இளைஞர்மணிபொறியியல் படித்தவர்களுக்கு அரசுப் பணி!

    First Published : 11 Aug 2010 02:50:21 AM IST
    Last Updated :

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. மொத்தம் 660 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

    பொதுப்பணித் துறையில் நீராதார நிறுவனம், கட்டட நிறுவனம், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஆலைகளுக்கான உதவி ஆய்வாளர், ஜூனியர் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர் ஆகிய பதவிகளுக்கு வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது.

    ÷மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இதுகுறித்து தகவல் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளவும்.

    ReplyDelete