தினமலர் முதல் பக்கம் » கோர்ட் செய்தி »இந்தியா
இலவச கலர் "டிவி' திட்டம் சரியே: சுப்ரீம் கோர்ட் கருத்து
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010,23:25 IST
புதுடில்லி : பொது மக்களுக்கு இலவசமாக கலர் "டிவி' வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
வெற்றி பெறும் பட்சத்தில், எல்லாருக்கும் இலவசமாக கலர் "டிவி' வழங்கப்படும் என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அவ்வாறே பல கட்டங்களாக "டிவி'க்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மக்களின் வரிப்பணத்தில் இருந்து கலர் "டிவி'க்கள் வழங்கப்படுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என, தென்காசியைச் சேர்ந்த வக்கீல் சுப்ரமணியம் பாலாஜி என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மக்களுக்கு இலவசமாக காஸ் அடுப்புகள், வேட்டி, சேலைகள், நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில் எந்த தவறும் இல்லை; ஆனால், இலவச கலர் "டிவி'யால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியம் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கூறியதாவது: ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டே இலவசமாக கலர் "டிவி'க்கள் வழங்கப்படுகின்றன. மனுதாரரின் வக்கீல், ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இதை பார்க்கலாம். ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை, மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.