செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 : முதல்வர் அறிவிப்பு
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010,23:46 IST
மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 27,2010,09:04 IST
தஞ்சை : செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன். என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:ராஜராஜனுக்கு நாம் பெருமை சேர்க்கவில்லை. நமக்குத்தான் ராஜராஜன் புகழை பிச்சையாக வழங்கியுள்ளான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய மன்னாதி மன்னன் ராஜராஜன். உள்ளூர் ஆட்சி முறை, கலை, சமயம், இலக்கியம் என பல்வேறு துறைகளில், பிற்காலங்களில் மீண்டும் அடைய முடியாத மேன்மையை அப்போதே தமிழகம் பெற்றது.
சோழர்களுடைய பாரம்பரியம் கி.மு., - கி.பி., என்று பகுத்து பார்க்கும் போது, 176 ஆண்டு ஒரு சேர சோழப் பேரரசு தென்னகத்தில் இருந்தது, நிலைத்து வாழ்ந்தது. அப்போது, தஞ்சை, சோழப்பேரரசின் தலைநகராக இருந்தது. சோழ சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தில், குறிப்பாக ராஜராஜன் நிர்வாகம் அனைத்து மன்னர்களுக்கும் உதாரணமாக விளங்கியது. ராஜராஜன் திரட்டிய நிதி எப்படியெல்லாம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிட முடியாது. மக்களின் நலவாழ்வுக்கு, நாட்டை காப்பாற்ற, வசூலிக்கப்பட்ட வரிப்பணம் செலவிடப்பட்டது.
வரியை வசூலித்து, மக்களுடைய பணத்தை திரட்டி இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அரசு, ஒவ்வொருவர் தலையிலும் இவ்வளவு கடனை சுமத்தியிருக்கிறது என்று பேசுகின்றனர். அப்படி மக்கள் தலையில் கடனை சுமத்தும் எந்த அரசும் இந்தியாவில் இல்லை. அப்படிப்பட்ட அரசும் தமிழக அரசு இல்லை. நாம் வாங்கும் கடன்களை மக்கள் தொகையால் வகுத்து புத்திசாலி அரசியல்வாதிகள், தலைக்கு இவ்வளவு கடன் என்று சொல்கின்றனர்.நாம் வாங்கும் கடன்கள், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதம் வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க போர் உருவாக்கப்பட்டது. அதற்கு உலகளந்த போர் என்று பெயர். ராஜராஜன் சைவன் என்றாலும் சமணத்தையோ, பவுத்தத்தையோ வெறுத்தவன் அல்ல.
ராஜராஜன் காலத்தில் ஊராட்சித் தலைவர்களாக, கால்வேலி சொந்த நிலம் இருக்க வேண்டும். படித்தவனாகவும், எதையும் மற்றவர்களுக்கு புரிய வைக்கும் தன்மை உள்ளவனாகவும், எண்ணத்திலும், செயலிலும் தூய்மை உடையவனாகவும், 30 வயதுக்கு மேற்பட்டவனாகவும், ஒழுக்கம் மிகுந்தவனாகவும், குற்றமில்லாதவனாகவும் இருக்க வேண்டும்.
கள்ளக் கையெழுத்து போட்டோர், லஞ்சம் வாங்கியவர், அபராதம் செலுத்தியவர் போட்டியிட முடியாது என்பது, ராஜராஜன் காலத்தில் விதிமுறைகளாக இருந்தது. இப்போது போட்ட கையெழுத்தையே சிலர் இல்லை என்று கூறுகின்றனர்.ராஜராஜன் காலத்தில் குடவோலை முறையில் உள்ளூர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழன் நிர்வாகத்திறமை, கவிதைத்தன்மை, வீரத்தின் விளைநிலமாக இருப்பான். ராஜராஜன் செல்லாத பகுதிகள் இல்லை. வெல்லாத பகுதிகள் இல்லை. அவனைக்கண்டு அஞ்சாதவர்கள் இல்லை.பல போர்களில் தந்தைக்கு துணையாக நின்று வெற்றிகளை குவித்தான் ராஜேந்திரன். ராஜராஜன் பெயர் இந்த கோவிலில் ஆயிரம் ஆண்டு நிலைத்து, ஆயிரமாவது ஆண்டை நாம் கொண்டாடும் நேரத்தில், அடுத்த ஆயிரமாவது விழா நடத்தும் போது நாம் இருக்கப்போவதும் இல்லை.
இரண்டாயிரமாவது ஆண்டு விழா நடக்கும் போது, நம்மை யாரும் மறக்கப்போவதுமில்லை. பெரியகோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் வேளையில், தஞ்சை நகரின் வளர்ச்சிக்கு தமிழக அரசின் சார்பில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தவிர, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், சாலை வசதி மேம்படுத்தப்படுகிறது. தஞ்சை அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு என்று தனியாக பிரிவு ஏற்படுத்தப்படும்.தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிபோல், மத்திய அரசும் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மத்திய திட்ட மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
அந்த நிதி இன்னும் வந்துசேரவில்லை. அதை சேர வைக்கும் வேலையை அவரே செய்ய வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன். இது, தமிழக மக்கள் எப்போதும் ராஜராஜனை நினைத்துக் கொண்டிருக்க உதவும். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சோழர்கால வரலாற்று கண்காட்சி மேலும் ஒருவார காலம் வரை நீடிக்கப்படுகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.
No comments:
Post a Comment