Friday, September 3, 2010

குஜராத் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழன் சிலையை மீட்க தமிழக அரசு தீவிரம்

குஜராத் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழன் சிலையை மீட்க தமிழக அரசு தீவிரம்; அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் உயர் அதிகாரி குழு செல்கிறது
சென்னை, செப். 3-
 
சோழ மன்னர்களில் ஆட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக செய்தவர் என்ற பெருமைக்குரியவர் முதலாம் ராஜராஜ சோழன்.  சுந்தரசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் 2-வது மகனாக பிறந்த இவரது இயற்பெயர் அருண் மொழி கி.பி. 985-ம் ஆண்டு இவர் சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டபோது ராஜராஜன் என்ற பெயரை பெற்றார்.
 
கி.பி.1014ம் ஆண்டு வரை ராஜராஜசோழன் ஆட்சி செய்தார். தஞ்சையில் இவர் கட்டிய பெரிய கோவில், உலக கட்டிடக் கலை நிபுணர்களால் இன்றும் போற்றி புகழப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலை இவர் கி.பி. 1004ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு, அதாவது ஆறே ஆண்டுகளில் கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மாத இறுதியில் தஞ்சை கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த நிலையில் ராஜராஜ சோழனின் அரிய செப்பு சிலை ஒன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காலிகோ மியூசியம்Ó என்ற தனியார் அருங்காட்சியகத்தில் இருப் பது தெரிய வந்தது.
 
தஞ்சை பெரிய கோவிலை கட்ட ராஜராஜசோழன் முடிவு செய்ததும், அந்த பணியை அவர் வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவரிடம் ஒப்படைத்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜராஜ சோழன், அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரது சிலைகளை பெருந்தச்சன் உருவாக்கினார். அவர் ராஜராஜசோழனின் 3 செப்பு சிலைகளை செய்து தஞ்சை பெரிய கோவிலில் நிறுவினார்.
 
தஞ்சை பெருவுடையாரை வணங்க வந்த பக்தர்கள் ராஜராஜசோழனையும் வணங்கிச் சென்றனர். ஆனால் அன்னியர் படையெடுப்பின்போது ராஜராஜனின் சிலை சூறையாடி அபகரித்து செல்லப்பட்டு விட்டது.
 
இறுதியில் எப்படியோ அந்த சிலை ஆமதாபாத்தில் அருங்காட்சியகம் நடத்தி வரும் சாராபாய் பவுண்டேசன் வசம் சென்று விட்டது.
 
ஆமதாபாத் மியூசியத்தில் உள்ள ராஜராஜன் சிலையானது கல்வெட்டுக்களிலும், ஓலைச் சுவடிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள உருவ அளவுகளை 100 சதவீதம் ஒத்துள்ளது. அதன் நேர்த்தி மூலம் ராஜராஜனின் உண்மையான உருவ அமைப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் 1000ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ராஜராஜனின் சிலையை மீட்டு அதை தஞ்சை கோவிலுக்குள் நிறுவன வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இதையடுத்து ராஜராஜனின் சிலையை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
 
தற்போது அருங்காட்சியகம் நடத்தி வரும் சாராபாய் பவுண்டேசன் நிர்வாகிகளுடன் நேரடியாக பேச்சு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சுற்றுலாத்துறை செயலாளர் வி.இறையன்பு, தொல்பொருள் ஆய்வாளர் ஆர்.நாகசாமி வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் ஆகியோர் விரைவில் குஜராத் செல்ல உள்ளனர். ஆமதாபாத்தில் உள்ள அருங்காட்சியக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்துவார்கள்.
 
ராஜராஜனின் சிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு அன்புப் பரிசாக தரும்படி கேட்டுக் கொள்வார்கள். ராஜராஜன் சிலை மீண்டு வரும்பட்சத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முழுமையான விழாவாக இருக்கும். தஞ்சை பெரிய கோவிலை தந்த ராஜ ராஜனுக்கு தமிழக மக்கள் செய்த பெரும் நன்றியாகவும் இது இருக்கும்.

1 comment:

  1. it is a good message here only. thanjavur people always welcome to all thanks rgkumaran

    ReplyDelete