கலை உள்ளம் படைத்தவர் ராஜராஜன் அமைச்சர் உபயதுல்லா
27 Sep 2010 12:52:53 PM IST
தஞ்சாவூர், செப். 26: மாமன்னர் ராஜராஜ சோழன் கலை உள்ளம் படைத்தவர் என்றார் மாநில வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா.
ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:
மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலுக்கு நடத்தப்படும் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் காணும் பேறு கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. கல்வெட்டுகளின் மூலம் ராஜராஜன் மிகுந்த கலை உள்ளம் படைத்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
சமயப் பொது நிலை என்பதில் ராஜராஜனையும், முதல்வர் கருணாநிதியையும் ஒரு சேரப் பார்க்கலாம் என்றார் உபயதுல்லா.
தமிழனை எழுச்சியுற செய்தவர் ராஜராஜன்
தஞ்சாவூர், செப். 26: வீழ்ச்சியுற்ற தமிழனை எழுச்சியுறச் செய்தவர் ராஜராஜன் என்றார் மாநில நிதியமைச்சர் க. அன்பழகன்.
தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோர்வுற்றுக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பியவர் ராஜராஜன். அவரது காலத்தில்தான் பல கட்டங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழனின் வரலாறு சரியான முறையில் தெளிவான வகையில் வரையறுக்கப்படவில்லை. தமிழன் வரலாறுதான் உலகிற்கே முதன்மையான தனித்தன்மையுடன் விளங்குகிறது. வரலாற்றுச் செய்திகள் இல்லை என்றாலும்கூட, தமிழ் மொழியே ஒரு வரலாறுதான்.
அந்தக் காலத்திலேயே சிறப்பான நிர்வாகத் திறன் கொண்டு ஆட்சி புரிந்தவர் ராஜராஜன். எனினும், அந்தக் காலத்திலும் சமுதாயக் குறைகளும் இருந்தன. சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை. நிலம் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்பது போன்ற நிலைகளும் இருந்துள்ளன. மக்களின் மனதை எண்ணிப் பார்க்கக்கூடிய மன்னராக ராஜராஜன் இருந்துள்ளார். தில்லை கோயிலில் அடைபட்டுக் கிடந்த தேவார திருமுறைச் சுவடிகளை மீட்டு, திருக்கோயில்களில் திருமுறைகளைப் பாட வைத்தார். தஞ்சை கோயிலில்கூட வடமொழிப் பாடல் பாடுவோர் 3 பேர், தமிழில் திருமுறை பாடுவோர் 4 பேர் என தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து பணிக்கு அமர்த்தியிருந்தார் ராஜராஜன்.
மேலும் இசை, நாட்டியம், கட்டடக் கலையை வளர்த்த பெருமைக்குரியவர் ராஜராஜன் என்றார் அன்பழகன்.
தஞ்சை பெரிய கோயிலில் 50 பேர் பங்கேற்ற திருமறை ஓதுதல் நிகழ்ச்சி
First Published : 27 Sep 2010 12:54:36 PM ISTLast Updated :
தஞ்சாவூர், செப். 26: தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் பங்கேற்ற திருமறை ஓதும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
ராஜராஜன் காலத்திற்கு முன் வாழ்ந்த நால்வர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகியோர் எழுதிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட நூல்களிலுள்ள பாடல்கள் திருமறை எனக் கூறப்படுகிறது.
இந்தத் திருமறையின் மீது ராஜராஜனுக்கு அதீத ஈடுபாடு உண்டு. சிதம்பரம் கோயிலில் இருந்த திருமறைப் பாடல்களை மீட்டு வந்து, பெரிய கோயிலில் வழிபாட்டிற்கு பாடச் செய்தவர் ராஜராஜன்.
இதற்காக சுற்றுப் பகுதியிலிருந்து 400 தலிச்சேரி பெண்களை கோயிலில் தங்க வைத்து தமிழ் கற்றுக் கொடுத்து, இசைக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தினமும் மாலை திருமறைப் பாடல்களை பாடச் செய்தார்.
திருமறை மீது ராஜராஜனுக்கு இருந்த ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, பெரிய கோயிலில் சதய விழாவின் போது திருமறை ஓதுவதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தினர் கடந்த 82 ஆண்டுகளாக திருமறை ஓதுதல் நிகழ்ச்சியை பெரிய கோயிலில் அரங்கேற்றி வருகின்றனர். பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, 10 ஓதுவார்கள் தலைமையில், களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 40 சிறார்கள் பங்கேற்று திருமறை ஓதினார்கள்.
இதுகுறித்து களிமேடு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகாபதி கூறியது:
அப்பர் மீது பற்றுக் கொண்டு களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் தொடங்கியுள்ளோம். மார்கழி மாத பஜனையின் போது இக் கிராமத்திலுள்ள சிறுவர், சிறுமிகள் திருமறை ஓதியபடி வீதியுலா வருவார்கள். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய கோயிலில் திருமறை ஓதி வருகிறோம் என்றார் அம்பிகாபதி.
இந்த நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் முத்து, குணசேகரன், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவாக, திருமறை ஓதிய ஓதுவார்கள் கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment