ஆடல் கலை வளர்த்த ராஜராஜன்!
முனைவர் ராம. கெüசல்யா,First Published : 26 Sep 2010 12:00:00 AM IST
Last Updated :
திருவையாறு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வர்
ரிடத்தில் கலைகள் செழிக்க வேண்டுமானால் மூன்று கூறுகள் தேவை. அவை கலைஞர்கள், சுவைஞர்கள், புரவலர்கள். எப்பொழுது கலையை ரசிக்க முடியும்? நாடு அமைதியாக இருக்கவேண்டும், வளமாக இருக்கவேண்டும். இது நாட்டைக் காக்கும் மன்னனின் பொறுப்பு.
இத்தகைய மண்தான் சோழ நாடு. சோழ மன்னர்கள் குறிப்பாக ராஜராஜ மாமன்னன் தான் எடுத்த ராஜராஜேச்சுரத்தை (பெரிய கோயில்) கலைகளின் தாயகமாக ஆக்கினான். நாட்டியக் கலைக்கு அம்மன்னன் செய்த தொண்டு அளப்பரியது. இறைவனுக்கு நடத்தப்படும் 16 வகை வழிபாடல்களுள் ஆடலும் ஒன்று.
எதையுமே பிரம்மாண்டமாகச் சிந்தித்துச் செயல்படுத்தும் ராஜராஜன் பெருவுடையாரின் வழிபாட்டுக்காக 407 ஆடல் மகளிரைத் தஞ்சையிலே குடியமர்த்துகிறார். தளிச்சேரிப் பெண்கள் (தளி - கோவில், சேரி- குடியிருப்பு) தளிப்பெண்கள் என்று அழைக்கப்பட்ட இவர்களுக்காக கோயிலுக்கு அருகில் தளிச்சேரியை அமைக்கிறார்.
தெற்குத் தளிச்சேரி வடக்குத் தளிச்சேரி ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் தென் சிறகு, வடமேல் சிறகு ஆகிய வரிசைகளும் மேலும் ஒரு தெருவும் இவர்களுக்காக உருவாகிறது. இது தொடர்பான அத்தனை செய்திகளையும் ஒரு நீண்ட கல்வெட்டில் தருகிறார். இப்பெண்களின் பெயர், இவர்கள் எந்த ஊரிலிருந்து அழைத்து வந்தவர்கள், அவர்கள் எந்தத் தெருவில் எந்த இலக்கமிட்ட வீட்டில் குடியமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கான ஊதியம் ஆகிய அனைத்துச் செய்திகளும் பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றன.
ஓர் ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோவில் இருந்தால் இப்பெண் எந்தக் கோவிலைச் சேர்ந்தவர் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களோடு இவர்களுக்கு உதவ நாட்டிய ஆசிரியர்களும் பாடகர்கள் கருவியாளர்கள் உள்ளிட்ட பக்க இசைக் குழுவினரும் உண்டு. இவர்களுக்கு உதவ தச்சுவேலை செய்பவர் உள்ளிட்ட தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பெயர்கள், துறைகள், ஊதியம் ஆகிய அனைத்து விவரங்களும் இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ளன.
மேலும் இவர்களுள் யாரேனும் இறந்துவிட்டாலோ வேறு ஊருக்குச் சென்று விட்டாலோ அவர்களது குடும்பத்தில் அடுத்தவர் அவ்விடத்தில் பணியாற்றி ஊதியம் பெற்றுக் கொள்ளலாம். அடுத்தவர் தகுதியற்றவராக இருந்தால் தகுதியான ஒருவரை நியமித்து அந்த ஊதியத்தை அவர் பெற்றுக் கொள்ளலாம். யாரும் இல்லாமல்போய் விட்டாலோ நியாயத்தாரரே தகுதியான ஒருவரை நியமிக்கலாம். இவ்வாறு இறைவனுக்கான பணி இடைவிடாது நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சோழ நாட்டின் பல்வேறு திருத்தலங்களிலிருந்தும் இத்தகைய ஆடல் மகளிர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.
சில ஊர்களில் ஒன்றிற்கு மேற்பட்ட தளிசேரிகள் இருந்திருக்கின்றன. திருவாரூர் பெரிய தளிச்சேரி நக்கன் மாதேவிக்கு சிவன் கோவில்களிலிருந்து மட்டும் அல்லாமல் திருமால் கோவில்களிலிருந்தும் ஆடல் மகளிர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாமணிக் கோவில், அம்பர், அவனி நாராயண விண்ணகர் போன்ற வைணவத் தலப் பெயர்களும் காணப்படுகின்றன.
இவர்களது பெயர்களில் குந்தவை, மாதேவடிகள் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. அரச குடும்பத்தின் மீது இவர்கள் கொண்ட பக்தி விசுவாசம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இப்பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்தார்கள் போலும்.
அன்றாட ஆடல் அர்பணிப்புக்காக ஆடல் மகளிரைக் குடியமர்த்திய மன்னர் ஆடல் குறித்த இலக்கணப் பகுதி ஒன்றை நிரந்தரமாகக் கல்லிலேயே செதுக்கி வைத்திருக்கும் செயல் பிரமிக்க வைக்கிறது. இக்கோயிலிலே காணப்படும் கரண சிற்பங்களே இவை. கரணம் என்ற சொல்லிற்கு செயல் என்பது பொருள். பரதநாட்டியத்தில் இது ஒரு கூறு. "ஹஸ்த பாத ஸம்யோகோ கரணம் பவேத்' கை கால்களின் ஒருங்கிணைந்த இசைவு "கரணம்' ஆகும். என்றாலும் இதனோடு உடல் நிலையும் சேரவேண்டும். அசைவின் ஓர் உரைநிலைத் தருணம் (ஊதஞழஉச ஙஞஙஉசப). உண்மையில் இது ஒரு முழு இயக்கம்தான்.
இயக்கத்தின் ஓர் உரைநிலைத் தருணம், தொடக்கம், முடிவு ஆகியவற்றுள் எதுவாகவும் இது இருக்கலாம். இவை 108 என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பெரியகோயிலின் கருவறையைச் சுற்றி 11 அடி கனத்துக்கு ஒரு சுற்றுச்சுவர் உள்ளது அதையடுத்து ஓர் உள்சுற்று அறை காணப்படுகிறது. இதனை "சாந்தாரம்' என்கிறார்கள். இச்சாந்தாரத்தின் வெளிப்புறச்சுவர் 13 அடி கனம் கொண்டது. இந்த உள்சுற்று அறையான சாந்தாரத்தின் அகலம் 6 அடி. இந்த அறையில்தான் சிறப்பு மிக்க சோழர் கால ஓவியங்கள் உள்ளன. மேலுள்ள முதல் தளத்தில்தான் இக்கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தலையை உயர்த்தாமல் சம மட்டத்திலிருந்து பார்க்கும் வண்ணம் இவை வரிசையாக அமைந்திருக்கின்றன. இத்தளத்தில் கரண சிற்பங்கள் இருப்பது வெளி உலகுக்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தெரியாமலே இருந்தது. 1954 ஆம் ஆண்டில் தொல்லியல் துறை அலுவலர் கே. ஆர். ஸ்ரீனிவாசன் என்பவரே இதனை முதலில் கண்டுபிடித்தார்.
கரணங்கள் 2 அடி உயரக் கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டிருக்கின்றன. 108 கரணங்களுள் முதல் 81 கரணங்களே செதுக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய கரணங்களுக்கான கற்கல் தயார் நிலையில் இருக்கின்றன. என்ன காரணத்தாலோ இவை முழுமைப்படுத்தப்படவில்லை.
சிவபெருமான் நான்கு கரங்களுடன் இவற்றை ஆடிக் காட்டுவதாக இவை அமைக்கப் பட்டுள்ளன. சிவகணங்கள் கருவிகளை இசைத்துக் கொண்டோ பார்த்துக் கொண்டோ அருகில் இருக்கின்றன. தலபுட்பபுடம் என்னும் முதல் கரணம் முதல் சர்ப்பிணி என்னும் 81 வது கரணம் வரை இவை உள்ளன. இங்குள்ள வரிசை முறையே நாட்டிய சாத்திரத்திலும் காணப்படுகிறது. அரசு நிர்வாகத்திலிருந்து நிலத்தைப் பகுப்பது வரை அனைத்தையும் செம்மைப்படுத்திய மன்னன் ஆடலின் கூறுகளையும் நிலையாக செம்மைப்படுத்திக் காட்ட விழைந்ததன் வெளிப்பாடே இவை எனலாம்.
ஆடலோ ஒரு நிகழ்த்துக்கலை. நிகழ்த்துக்கலை என்பது நிகழ்த்தப்படும் அக்கணமே சுவைக்கப்படக் கூடியது. என்னதான் சொற்களால் பின்னர் வருணித்தாலும் அதனைச் சரியாக நம் கண் முன்னால் கொண்டு வர இயலாது. அப்படியே இயன்றவரை எழுதி வைத்தாலும் கால வெள்ளத்தில் அழிந்து போகலாம். கல்லிலே விளக்கங்களைப் பொறித்து வைத்தாலும் மாறான பொருள் விளக்கங்கள் தரப்படலாம். ஆகவேதான் சிற்பமாக வடித்துத் தந்திருக்கலாம். பொது மக்கள் நடமாடுகிற பகுதியில் வைக்க வேண்டாம் என்றும் அரச குடும்பத்தினரும் உயர் அலுவலர்களும் கலைஞர்களும் மட்டுமே புழங்கக் கூடிய பகுதியில் வைப்பதே பாதுகாப்பானது என்று மன்னர் முடிவு செய்திருக்கலாம்.
இம்முடிவுகளின் பயனால்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னும் சில அழிவு சக்திகளைச் சந்தித்த பிறகும் கரணங்கள் குறித்த சரியான விளக்கங்களை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment