துவங்கியது காமன்வெல்த் விளையாட்டு: விழாக் கோலம் பூண்டது தில்லி
First Published : 04 Oct 2010 12:00:00 AM IST
Last Updated : 04 Oct 2010 08:44:04 AM IST
மூவர்ணக் கொடியை ஒலிம்பிக் தங்க வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்தி வர பின்தொடரும் இந்திய அணியினர்.
புது தில்லி, அக். 3: பத்தொன்பதாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் துவங்கியது. போட்டியையொட்டி தில்லி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.போட்டியை முதல்முறையாக இந்தியா நடத்துவதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.போட்டியை பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸýம், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும் முறைப்படி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கெüர், பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத், சார்லஸின் மனைவி கமீலா பார்க்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விழாவில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன அதிகாரிகள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.போட்டி துவக்க விழா இரவு 7 மணிக்கு தில்லி ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் துவங்கியது. பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் குழுமியிருந்தனர்.காமன்வெல்த் போட்டியின் சின்னமான ஷெரா பொம்மை துவக்க விழா நிகழ்ச்சியைக் காணவந்தவர்களை அன்புடன் வரவேற்றது. அதன்பிறகு கலைநிகழ்ச்சிகள் துவங்கின.பல்வேறு மாநிலக் கலைஞர்கள் இசை வாத்தியங்களை இசைத்தபடி மைதானத்தை வலம் வந்தனர்.மைதானம் முழுவதும் உயரமான பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தன. கலைஞர்களுடன் பொம்மைகளும் நாட்டியமாடும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உயரமாக இருந்த பொம்மைகளை கம்பிகளில் கட்டி கலைஞர்கள் இயக்கினர். இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என 7 வகையாக துவக்க விழா கலைநிகழ்ச்சிகள் பிரிக்கப்பட்டிருந்தன.ரிதம் ஆஃப் இந்தியா, ஸ்வாகதம், டிரீ ஆஃப் நாலெட்ஜ், யோகா, கிரேட் இந்தியன் ஜர்னி, ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.கலைஞர்கள் மைதானத்தில் வாத்தியக் கருவிகளை இசைத்துக் கொண்டு வலம் வந்தது மைதானத்திலிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.ஜொலித்தது ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்: துவக்க விழாவையொட்டி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் மின்னொளியால் ஜொலித்தது. மைதான வளாகங்களில் இரவை பகலாக்கும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.மைதானத்துக்குள் வண்ணமயமான விளக்குகளால், மைதானம் பிரகாசமாக மின்னியது. மைதானத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ராட்சத பலூன், விடியோ திரையாகவும் செயல்பட்டது. கலைநிகழ்ச்சிகளை ரசிகர்கள் அந்தத் திரையில் கண்டுகளித்தனர். மேலும் மைதானத்தின் நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரைகளிலும் விழா நிகழ்ச்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.இந்திய அணி: இந்த போட்டியில் 619 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. கலைநிகழ்ச்சிகளுக்குப் பின்னர் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. 54 நாடுகளைச் சேர்ந்த 71 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டிக்கான செலவு | 70 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.போட்டிகளுக்காக 12 ஸ்டேடியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில ஸ்டேடியங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. மேலும் சில ஸ்டேடியங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்க 6,700 வீரர், வீராங்கனைகள் உலகம் முழுவதிலுமிருந்தும் வந்துள்ளனர். வீரர்கள் அணிவகுப்பின்போது இந்திய அணியை, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா வழிநடத்திச் சென்றார். மூவர்ணக் கொடியை பிந்த்ரா ஏந்திச் செல்ல அவரை இந்திய வீரர், வீராங்கனைகள் பின்தொடர்ந்தனர்.7,500 போலீஸôர் பாதுகாப்பு: போட்டி துவக்க விழா நடைபெற்ற ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 7,500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் என்எஸ்ஜி கமாண்டோ வீரர்களும் அடங்குவர்.வான்வழியாகத் தாக்குதல் நடத்தும் முயற்சி நடந்தால் அதைத் தடுக்கும் வகையில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஸ்டேடியத்தை வட்டமிட்டன.மைதானத்துக்குள் நுழையும் ஒவ்வொருவரும் கடும் சோதனைக்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை, அங்கீகார அட்டை இல்லாமல் வந்தவர்கள் பாரபட்சமின்றி திருப்பி அனுப்பப்பட்டனர்.4 அடுக்கு பாதுகாப்பு: ஸ்டேடியத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகள் உள்பட அனைவரும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment