கோவை : ""படிப்பு மட்டுமே முக்கியமல்ல; நல்ல பண்புகளை கற்றுக் கொள்வதும் முக்கியம். வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ பேசினார்.
மக்கள் கல்வி குறித்த "பங்கேற்று நடித்தல்' போட்டி, கோவை ராஜவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டில்லி தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும்(என்.சி. இ.ஆர்.டி) சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து போட் டியை நடத்துகின்றன. பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்று போதை பழக்கம், எய்ட்ஸ் நோய், பெண் அடிமை, சுகாதாரம், இனக்கவர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாடகமாக நடித்துக் காட்டினர். போட்டியை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி துவக்கி வைத்தார். சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ போட்டிகளை ஆய்வு செய்தார். விழாவில் அவர் பேசியதாவது:வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். பள்ளி வயதில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் மாணவர்களின் வாழ்க்கை வீணாகிறது. சக பள்ளி மாணவ மாணவியரை கேலி செய்யும் செயல்களில் ஈடுபடக் கூடாது. பள்ளி வயதில் பாலின ஈர்ப்பால் பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியம். சுகாதாரம் உட்பட ஒவ்வொரு நல்ல பழக்கமும் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். பஸ்சில் தொங்கியபடி செல்லக்கூடாது. படித்தவர்கள் மட்டுமே படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர். படிக்காதவர்கள் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக பயணம் செய்கின்றனர். நல்ல பண்புகளை பள்ளிக் கல்வி கற்றுத் தருகிறது. இது போல் விதிமுறைகளை மீறுவதால் நல்ல பண்புகளை பள்ளியில் கற்கும் நோக்கம் வீணாகிறது. இவ்வாறு, இளங்கோ பேசினார்.
போட்டியில் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், அன்னூர் ஒன்றியம் காட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், மடத்துக்குளம் ஒன்றியம் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தேர்வான மாணவ மாணவியர் அடுத்தபடியாக, மதுரை கல்லுப்பட்டியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மண்டல அளவிலும் அதன் பின் டில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்பர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குனர் ஆரோக்கியசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பிரேம் அதிபன், துணை முதல்வர் ரீட்டா, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், சபர்பன் பள்ளி முதல்வர் சுப்ரமணியன், இமயம் அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பரமேஸ்வரி உட்பட மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பலர் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment