நமது அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாக அமைப்பில் தலையாய பங்கு வகிப்பவர்கள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். |
அவர்களே நாட்டின் நிர்வாகத்தை முன்னின்று நடத்துகிறார்கள் எனலாம். அவர்கள் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அத்தகைய உயர்ந்த அதிகார நிலையை அடைய பல இளைஞர்கள் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதற்கான தேர்வுகளுக்கு தம்மை தயார் செய்கிறார்கள். பலரது வாழ்க்கையின் பெரிய லட்சியமாக இருக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பதவிக்கான தேர்வில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றம் என்ன? மற்றும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? அந்த மாற்றத்தால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் எந்த வகையில் கஷ்டத்தை எதிகொள்ள போகிறார்கள்? என்பதைப் பற்றிய விவாதங்கள், நிர்வாகப் பணிகளின் ஆர்வலர்கள் மத்தியில் சமீப நாட்களாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டில் பலவகை பணிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வுகள் அனைத்திலும், முதன்மையான மற்றும் கடினமான தேர்வு இந்திய ஆட்சிப் பணி தேர்வேயாகும். இந்த தேர்வானது எந்த முறையில் நடத்தப்படுகிறது என்பதைப் பற்றிய விரிவான தகவல் மாணவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதை தெரிந்துகொண்டால்தான் தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தையும் எளிதாக புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் அதற்கேற்ப தயாராக முடியும். பழைய தேர்வு முறை முதல் நிலைத்தேர்வு (பிரிலிமினரி): ஐ.ஏ.எஸ் தேர்வின் முதற்கட்டமாக நடத்தப்படும் தேர்வு முதல்நிலை தேர்வு என்று அழைக்கப்படுகிறது. மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இரண்டு வகையான தேர்வு முறைகள் உள்ளன. அவை, தாள் 1 - பொது அறிவு பாடங்கள் தாள் 2 - விருப்பப் பாடம் பொதுஅறிவு பாடத்தேர்வில் இடம்பெற்ற பாடப்பிரிவுகள்:இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் இந்திய தேசிய இயக்கத்தை உள்ளடக்கிய இந்திய வரலாறு இந்திய மற்றும் உலக புவியியல் தேசிய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள் பொது மற்றும் அன்றாட அறிவியல் உளவியல் திறன் மற்றும் புள்ளியியல் அடிப்படைகள் முதலானவை. திட்டமிடல், வரவு-செலவு கணக்குகள், மேம்பாட்டு திட்டங்கள், அரசியல் மற்றும் அரசியலமைப்பின் சமீபத்திய சம்பவங்கள், பஞ்சாயத்து ராஜ், வாக்குப்பதிவு சீர்திருத்தங்கள், இயற்கை வளங்கள், கலாச்சாரம், தேசியத்தின் வளர்ச்சி, குழுக்கள், ஆணையகம் போன்றவை சம்பந்தமான கேள்விகளே ஒவ்வொரு வருடமும் கேட்கப்பட்டன. சமீப காலங்களில், இந்த பொது அறிவு தாளில், நடப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. இதற்கான மதிப்பெண் 150 இரண்டாம் தாள் தேர்வான விருப்பப் பாட பிரிவில், விவசாயம், கால்நடை மருத்துவம், தாவரவியல், வேதியியல், கட்டிடப் பொறியியல், வணிகம், பொருளாதாரம், மின் பொறியியல், புவியியல், மண்ணியல், இந்திய வரலாறு, சட்டம், கணிதம், இயந்திரப் பொறியியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், விலங்கியல், புள்ளியியல் போன்ற பாடங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். இதற்கான மதிப்பெண் 300 இந்த இரண்டு தாள்களும் ‘ஆப்ஜெக்டிவ்’ முறையிலான கேள்விகளைக் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 மணி நேரங்கள். இந்த முதல்நிலைத் தேர்வானது, இரண்டாம் நிலைத் தேர்வான முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்யும் பொருட்டே நடத்தப்படுகிறது. இத்தேர்வு முடிவுகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படுகின்றன. முதன்மைத் தேர்வு (மெயின்):முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு அந்த ஆண்டே அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் முதன்மைத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் 9 தாள்கள் உள்ளன. ஒவ்வொரு தாளுக்கும் 3 மணி நேரங்கள். தாள் 1 - அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 18 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதலாம். அந்த மொழியில் உங்களின் புலமை சோதிக்கப்படும். இதற்கு 300 மதிப்பெண்கள். தாள் 2 - ஆங்கில மொழித்திறன் தேர்வு - 300 மதிப்பெண்கள் தாள் 3 - பொதுக் கட்டுரை பகுதி - 200 மதிப்பெண்கள் தாள் 4 - 2 பொதுஅறிவு பாடங்கள் - ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண்கள் தாள் 5 - 2 விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் 2 தாள்கள் இருக்கும்) - ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண்கள் - மொத்தம் 1200 மதிப்பெண்கள் விருப்பப் பாடங்களாக, விவசாயம், கால்நடை மருத்துவம், தாவரவியல், வேதியியல், கட்டிடப் பொறியியல், வணிகம் மற்றும் கணக்கியல், பொருளாதாரம், மின் பொறியியல், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், மேலாண்மை, கணிதம், இயந்திரப் பொறியியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், விலங்கியல், புள்ளியியல் போன்ற பாடங்களிலிருந்து ஏதேனும் இரண்டை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். மேலும் கீழ்கண்ட மொழி இலக்கிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம். அவை, அராபிக், அசாமி, பெங்காலி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மராத்தி, மலையாளம், மணிப்பூரி, நேபாளம், ஒரியா, பாலி, பாரசீகம், பஞ்சாபி, ரஷ்யன், சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. விருப்பப் பாடங்களில் கீழ்கண்ட பாடப் பொருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை, அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் பொது நிர்வாகம் வணிகவியல் மற்றும் மேலாண்மை மானுடவியல் வரலாறு மற்றும் சமூகவியல் கணிதம் மற்றும் புள்ளியியல் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவம் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவம் மற்றும் மருத்துவ அறிவியல் பொறியியல் படிப்பில் ஏதேனும் 2 துறைகள் பட்டியலிலுள்ள மொழி இலக்கிய பாடங்களில் 2 பொருத்தமான பாடங்கள் இந்த தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். இப்பகுதியில் மொத்தம் 2600௦௦ மதிப்பெண்கள். ஆனால் முதல் இரண்டு பகுதிகளான பிராந்திய மொழி தேர்வு மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. மற்ற பகுதிகளின் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 2000 மதிப்பெண்கள். முதல் இரண்டு பகுதிகளின் மதிப்பெண்கள் கணக்கில் கிடையாது என்றாலும், அந்த தேர்வுகளில் கட்டாயம் தகுதிபெற வேண்டும். முக்கிய தேர்வானது கட்டுரை வடிவில் எழுதப்பட வேண்டும். இந்த தேர்வில் உங்களின் முழு அறிவுத்திறன் மற்றும் புரிந்துணர்வு திறன் போன்றவை சோதிக்கப்படும். நேர்முகத்தேர்வு: முதன்மை தேர்வில் தேறியவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எத்தனை இடங்கள் காலியோ, அதைவிட இருமடங்கு நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வுக்கான அழைப்புகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அனுப்பப்படும் மற்றும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் உங்களின் ஆளுமைத்தன்மை, சமூகப் புரிந்துணர்வு திறன், தலைமைப் பண்பு போன்றவற்றை சோதிப்பார்கள். உங்களின் செயல்பாடு தேர்வாளர்களை கவர்ந்துவிட்டால் நீங்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். முக்கியத் தேர்வின் மதிப்பெண்கள் 2000 மற்றும் நேர்முகத்தேர்வின் 300 மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு, மொத்த மதிப்பெண்களாக வைக்கப்பட்டு, அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுவீர்கள். சிவில் சர்வீசஸ் தேர்வில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் மேற்கண்ட முறையில்தான் பல வருடங்களாக தேர்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெகடிவ் மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, இந்த மாற்றம்தான் அடுத்த பெரிய மாற்றமாக நிகழ்ந்துள்ளது. மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதன்மூலம் வரும் 2011 முதல் ஐ.ஏ.எஸ் -க்கான முதல்நிலை தேர்வானது புதியமுறையில் நடைபெறும். அதைப்பற்றி தற்போது விரிவாக காண்போம். முதல்நிலைத் தேர்வில், பொதுஅறிவு பாடம் மற்றும் விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்களை எழுதினோம். ஆனால் தற்போது அந்த விருப்பப்பாட முறை நீக்கப்பட்டு திறனாய்வு (ஆப்டிடியூட்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இனி இரண்டு பகுதிகளுக்கும் சமமாக 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள் அளிக்கப்படும். திறனாய்வுப் பகுதியின் பாடத்திட்டம்:அறிந்துகொள்ளும் திறன் இணைந்து பழகும் திறன்கள், தகவல் தொடர்பு திறன்கள் காரணமறிதல் மற்றும் பகுத்தாய்வு திறன்கள் முடிவெடுக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திறன் புத்திக்கூர்மைத் திறன் பொது எண் கணிதம் - எண்கள் மற்றும் அதன் தொடர்புகள், தரவு கருத்துருவாக்கம் (10ம் வகுப்பு நிலை) ஆங்கில மொழியை அறிந்துகொள்ளும் திறன் (10ம் வகுப்பு நிலை) மாற்றத்திற்கான காரணங்கள்: இரண்டாம் நிர்வாக சீர்திருத்த கமிஷன் உள்ளிட்ட பல கமிட்டிகள், மாணவர்களின் பாட அறிவை சோதிப்பதை விட, அவர்களின் திறனாய்வு தன்மையை சோதிப்பதே முக்கியம் என்று கடந்த காலங்களில் தொடர்ந்து பரிந்துரைத்து வந்தன. நல்ல பாட அறிவை பெற்றிருப்பவர், நல்ல அதிகாரியாக இருப்பார் என்று உத்திரவாதம் தரமுடியாது என்பது இவைகளின் வாதம். மேலும் விருப்பப் பாடங்கள் ஒவ்வொன்றும் ஒரு தன்மையில் இருப்பதால், அவற்றை மதிப்பிட்டு அதன்மூலம் தேர்வெழுதுபவர்களின் திறன்களை சமமாக மதிப்பிடுவது இயலாத காரியம். இதன் மதிப்பெண்களும் வெளியிடப்படுவதில்லை. மேலும் பலர் தாங்கள் கல்லூரியில் படித்த பாடங்களையே விருப்பப் பாடங்களாக எடுத்து, அதன்மூலம் எளிதில் முதல்நிலையை கடந்து விடுகிறார்கள். எனவேதான் இந்த முரண்பாட்டை தடுக்க இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வு என்பது சிவில் சர்விஸ் திறனாய்வு (ஆப்டிடியுட்) தேர்வு என்று அழைக்கப்படும். மாற்றத்தின் நன்மைகள்:தேர்வுமுறை அனைவருக்கும் ஒன்றாக மாறிவிடுவதால், அனைவரும் ஒரேமுறையிலேயே தயாராக வேண்டும். மதிப்பிடும் தன்மையில் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஒரேமாதிரியான சவால் அனைவருக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வின் இரண்டு பிரிவுகளுக்குமே சமமான மதிப்பெண்களும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் எந்த ஒரு தனிப்பட்ட பாடத்தின் பாதிப்புகளோ, அதன் தன்மைகளோ இருக்காது. பாதகங்கள்:இத்தகைய மாற்றத்தால் முதல்நிலை தேர்வானது, ஒரு கடினமான பகுதியாக மாறிவிடுகிறது மற்றும் கிராமப்புற சூழலிலிருந்து ஐ.ஏ.எஸ் எழுதவரும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் போன்ற குரல்கள் எழுகின்றன. இதில் நிறைய உண்மை இருக்கிறது. ஆனால் நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கப்போகும் ஒரு பணிக்கான தேர்வில் இத்தகைய மாற்றங்கள் அவசியமானவை. அதேசமயம் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தற்போது முதல்நிலைத் தேர்வில் மட்டுமே மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அடுத்தடுத்த நிலைகளிலும் மாற்றம் வருமா என்பது பின்னாளில் தெரியும். மத்திய அரசு பணிகளுக்கான சிவில் சர்விசஸ் தேர்வுகளில், திறனாய்வு என்ற அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் இந்த தேர்வின் மூலம் இப்போதுதான் கொடுக்கப்படுகிறது. |
முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Saturday, November 20, 2010
சிவில் சர்வீசஸ் தேர்வுமுறையும், புதிய மாறுதலும் - 20-11-2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment