சென்னை : "வரும் சட்டசபை தேர்தலுக்கான வெள்ளோட்டமே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் தேர்தலில் தி.மு.க., பெற்றுள்ள வெற்றி' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதிலும் ஏதோ பொதுத்தேர்தல் நடைபெறுவதைப் போல மிகுந்த பரப்பரப்பு காட்டப்பட்ட பஸ் தொழிலாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான சங்கத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 25ம் தேதி நடந்தது. தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச., - அ.தி.மு.க., தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம், காங்கிரஸ் கட்சியின் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தே.மு.தி.க., - பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள் ஆதரவு பெற்ற சங்கங்கள் என மொத்தம் 13 தொழிற் சங்கங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க., ஆதரவளித்த சங்கம், ஓட்டுகள் சிதறாமல் இருக்கவும், தி.மு.க., ஆதரவான தொ.மு.ச.,வை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவும் அ.தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிடப் போவதாக அறிவித்தன. அது, 2011ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலுக்கான முன்னணி என்பதைப் போல அந்தக் கட்சியின் தலைவர்களின் மிகப்பெரிய கட்-அவுட், புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு விளம்பரம் செய்தார்கள். ஜெயலலிதாவோ கோடநாட்டில் இருந்தவாறே பஸ் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான சங்கத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டுமென அறிக்கைகளை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் பணியாற்றும் மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 580 ஊழியர்களில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 377 பேர். அதாவது 96 சதவீதத்தினர் இந்தத் தேர்தலில் ஓட்டளித்தனர்.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே தொ.மு.ச., தான் முன்னிலையில் இருந்து, வெற்றி பெற்றது. தே.மு.தி.க., - ம.தி.மு.க., உட்பட எட்டு சங்கங்களின் ஆதரவுடன் போட்டியிட்ட அ.தி.மு.க., தொழிற்சங்கம் இரண்டாவது இடத்திற்குக் கூட வர முடியாமல், மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. தொ.மு.ச., 73 ஆயிரத்து 450 ஓட்டுகளை அதாவது 57.31 சதவீத ஓட்டுகளைப் பெற்று முதல் இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு சங்கமான சி.ஐ.டி.யு., 19 ஆயிரத்து 2 ஓட்டுகளைப் பெற்று 2வது இடத்திலும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்கங்கள் 15 ஆயிரத்து 765 ஓட்டுகளைப் பெற்று 3வது இடத்திலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஐ.என்.டி.சி., சங்கம், 4,824 ஓட்டுகளைப் பெற்று 4வது இடத்திற்கு வந்துள்ளன. பா.ம.க., ஆதரவு தொழிற்சங்கம் 2,857 ஓட்டுகளைப் பெற்று 6வது இடத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தொழிற்சங்கம் 2,307 ஓட்டுகளைப் பெற்று 7வது இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் 1,912 ஓட்டுகளையும் பெற்றுள்ளன.
போக்குவரத்துத் துறையிலே பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தி.மு.க., ஆட்சியிலே செய்யப்பட்ட நன்மைகளும், அ.தி.மு.க., ஆட்சியிலே செய்யப்பட்ட தீமைகளும் தான் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தேர்தலில் நாம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணம். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க., இதுபோலவே சமுதாயத்திலே உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படக் கூடிய தேவைகளை உணர்ந்து அவைகளை நிறைவேற்றும் பணியிலே தன்னை முன்னிறுத்திக் கொண்டு பணியாற்றுகிறது. எந்த ஒரு முற்போக்குப் பணிக்கும் வெள்ளோட்டம் விடுவது என்பது எப்போதும் பழக்கமான ஒன்று. அந்த வகையில், 2011ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வெள்ளோட்டமே தற்போது நடைபெற்று முடிந்துள்ள போக்குவரத்துக் தொழிலாளர்கள் தேர்தலில் தி.மு.க., பெற்றுள்ள வெற்றி. இந்த வெற்றி மேலும், மேலும் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment