சென்னை : "கூட்டணிக்காக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா எந்த அஸ்திரத்தை வீசினாலும் எடுபடாது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை: மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்போம் என, ஜெயலலிதா கூறியது மக்கள் நலனைப் பாதுகாக்க உதவாது என, மார்க்சிஸ்ட் கட்சி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும், அம்மையாரின் மனம் நோகக் கூடாது என்பதைப் போல, அந்தத் தீர்மானத்தில் மத்திய அரசையும், அதற்கு ஆதரவாக உள்ள தி.மு.க., அரசையும் பலவிதங்களிலும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியோடு அணி சேர வேண்டும் என்பதற்காக அம்மையார் எப்படியெல்லாம் தானாக முன்வந்து அறிக்கை விடுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஏதோ, அதைக் கண்டிக்கிறோம் என்ற அளவுக்காவது அறிக்கை விட முன்வந்த மார்க்சிஸ்ட்களின் தீர்மானம் ஓரளவு ஆறுதலாகவே உள்ளது.
பார்லிமென்ட் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு மத்திய அமைச்சர் ராஜாவை பதவி விலகுமாறு செய்த பிறகும், அவரை கைது செய்ய வேண்டும்; வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும்போது, மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.அ.தி.மு.க., தலைவி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் கோர்ட்டால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும், நான்கு இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவை செல்லாது என கூறப்பட்ட பின்னரும், கவர்னரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்து, அதுவும் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றை எல்லாம் மக்கள் மறந்திருப்பர் என எண்ணுகிறார் போலும்.
கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்று பதவி விலகிய ராஜா, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப்பதையும் மறந்துவிடக் கூடாது.ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், வேறு யாரும் இறுதி முடிவெடுத்துவிட முடியாது. மத்திய கணக்குத் தணிக்கைத் தலைமை அதிகாரியின் அறிக்கையை பொது கணக்குக் குழு பரிசீலனை செய்ய உள்ளது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்து, அதன் மீது விரிவான விவாதம் நடைபெறலாம்.
பொது கணக்குக் குழுவின் தலைவராக, தற்போது பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தான் இருக்கிறார். பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென கோருவதன் மூலம், எதிர்க்கட்சியினருக்கு முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பார்லிமென்ட்டை நடத்தவிடக் கூடாது என்பதற்காகவே கையாள்கிற யுக்தியா? வரும் 2011 தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என, பல்வேறு வகையான யூகங்களை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அந்த யூகங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை; கற்பனையானவை; எவ்வித அடிப்படையும் இல்லாதவை.
காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா வலிய வந்து அறிவித்ததை ஏற்க முடியாதென்றும், கூட்டணியில் இடமில்லை என்றும், அம்மையார் அறிவித்த 24 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் கட்சி பதிலளித்து, கதவை மூடிவிட்டது. ஜெயலலிதாவின் தற்போதைய அறிவிப்புக்கு பொருளுமில்லை; பொருத்தமுமில்லை. எனினும், அந்த அம்மையாரை தலையில் வைத்து ஆடிக்கொண்டிருப்போர், அது ராஜதந்திர அறிவிப்பென்றும், பிரம்மாஸ்திரம் என்றும் மோகனாஸ்திரத்தால் மயங்கி, ஏமாற்றப் பார்க்கின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2006 சட்டசபை தேர்தல், 2007ம் ஆண்டு தேசிய அளவில் மூன்றாவது அணி முயற்சி என பல்வேறு சாகசங்களை செய்து பார்த்தார். அப்போதெல்லாம் வெற்றி பெறாத அவரது ராஜதந்திரமும், பிரம்மாஸ்திரமும், வலிய வந்து இப்போது அவர் செய்திருக்கும் அறிவிப்பாலா வெற்றி பெறப்போகின்றன?கடல் கொண்ட பூம்புகார் நகரின் எழில் மிகு தோற்றத்தை, புதுவை பாரதியார் பல்கலைக் கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன் ஓவியமாகத் தீட்டியுள்ளார். நாளேட்டில் வந்த ஓவியத்தை நானும் கண்டேன். மகிழ்ச்சி மிகக் கொண்டேன். ஓவியர் ராஜராஜன் அழகாகத் தீட்டியுள்ளார்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment