மதுரை : ""கூட்டணி தலைவர்கள் முன், நமது ஒற்றுமையை, கூட்டணி பிணைப்பை நிலைநாட்டி உள்ளீர்கள்,'' என மதுரையில் நேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி - அனுஷா திருமணத்தில், முதல்வர் கருணாநிதி பேசினார். இதே கருத்தை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வலியுறுத்தினார். திருமணத்திற்கு தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
மணமக்களை வாழ்த்தி திருநாவுக் கரசர் (காங்.,) பேசும்போது, ""கருணாநிதி, கடவுளை நம்புகிறாரோ இல்லையோ, கருணாநிதியை கடவுள் நம்புகிறார்'' என்றார்.
இல.கணேசன் - பா.ஜ: இப்போதெல்லாம் திருமண வாழ்த்து என்றால் தட்டச்சு செய்து அனுப்புகின்றனர். ஆனால் நான், வாழ்த்து அனுப்பும்போது கைப்படத் தான் எழுதி அனுப்புவேன். அதே போல, பேரன் திருமணத்திற்கு, கருணாநிதி கையால் எழுதியதை அழைப் பிதழாக அனுப்பி உள்ளனர். இப்படி செய்வதில் ஒரு ஈடுபாடு கிடைக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்த இவர், பேசும்போது, ""நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இக்கூட்டணி செயல்படுகிறது. இது போல, மீதி இருக்கும் மூன்றரை ஆண்டுகளுக்கும் இணைந்து செயல்படும் என் பதில் சந்தேகம் இல்லை,'' என்றார்.
நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நாம் பெற்ற பெருமையை நிலை நிறுத்த, நமது கூட்டணி எப்படி பயன்படுகிறதோ அது போல் மணமக்கள் இடையே விரிவான, வாழ்க்கை கூட்டணி நிலை பெற்று தொடரும் என நம்புகிறேன். அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்கின்றனர். நான் அவரை, ஒரு கரும்பாக நினைக்கிறேன். கரும்பு, அடியில் இனிக்கும்; நுனியில் துவர்க்கும். அது போல அழகிரியை ஒரு கரும்பாக கருதி, தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, நுனிக் கரும்பு போல் கடித்தால் சுவைக்காது, நாக்கை கிழிக்கும். மூத்த மகன் மு.க.முத்துவுக்கு, என் தந்தை நினைவாக பெயர் வைத்தேன். பட்டுக்கோட்டை அழகிரி, எங்கள் இயக்க தலைவராக இருந்ததால், அவரது பெயரை அழகிரிக்கு வைத்தேன். ரஷ்யாவில் பொதுவுடைமை கொள்கையை வளர்த்த ஸ்டாலின் இறந்தபோது, பிறந்ததால், "ஸ்டாலின்' என்ற பெயரை அடுத்த மகனுக்கு சூட்டினேன். மற்றவர்களுக்கு தமிழின் மீது இருந்த பற்றால் பெயர் வைத்தேன். பேரப் பிள்ளைகள், கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டால், லட்சியம் பட்டுப்போனதாக ஆகிவிடும். கூட்டணி தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் முன், நமது ஒற்றுமையை கூட்டணி பிணைப்பை நிலைநாட்டும் வகையில், இங்கு வந்துள்ளீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
மத்திய அமைச்சர் சிதம்பரம், இந்திய முஸ்லிம் லீக் தமிழக தலைவர் மைதீன்கான், சபாநாயகர் ஆவுடையப்பன், பொன்னம்பல அடிகளார், காங்., மாநில தலைவர் தங்கபாலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., மாநில அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தமிழரசி, தொழிலதிபர் விஜய் மல்லையா, கலெக்டர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அட்சதையை வாயில் போட்ட பிரணாப்: திருமணத்திற்கு முன், மணமக்கள் மீது தூவுவதற்காக அட்சதை தரப்பட்டது. அதை எடுத்த பிரணாப் முகர்ஜி, அது எதற்கு தரப்பட்டது என தெரியாமல், வாயில் போட்டுக்கொண்டார். மேடையில் பேசிய பலரும், "ஆறாவது முறையும் கருணாநிதி முதல்வர் ஆவார்' என்றனர். திருமணத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ""இந்த திருமணத்தால் மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காங்., - தி.மு.க., கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்த மத்திய, மாநில அமைச்சர்களுக்கு எனது நன்றி,'' என்றார்.
No comments:
Post a Comment