Wednesday, April 20, 2011

தி.மு.கழகம் வேகமாக வளர்ந்தது








புதிதாக அமைக்கப்பட்ட தி.மு.கழகம் வளருமா என்று சந்தேகப்பட்டவர்கள், பலர். குறிப்பாக காங்கிரஸ்காரர்கள், எதிர்காலத்தில் தி.மு.கழகம் பலம் மிக்க ஒரு எதிர்ப்பு சக்தியாக விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அண்ணாவின் பேச்சும் எழுத்தும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன.



குறிப்பாக அண்ணா பேசும் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர். எதுகை மோனையுடன் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், மக்களை மயக்கின. "தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்", "மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர்" என்று புகழ் பெற்றார்.



அண்ணாவின் இயற்பெயர் சி.என்.அண்ணாதுரை. காஞ்சீபுரத்தில் நடராசன் _ பங்காரு அம்மாள் தம்பதிகளின் மகனாக 1909_ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15_ந்தேதி பிறந்தார். நடராஜனும், பங்காரு அம்மாளும் அன்பும், பண்பும், தெய்வ பக்தியும் உடையவர்கள். ஆயினும் ஏழைகள்.



எனவே, அண்ணாவை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை, அவருடைய சிற்றன்னை ராஜாமணி அம்மாள் ஏற்றார். அவரை அண்ணா "தொத்தா" என்று அன்புடன் அழைப்பார். சிறுவயதில் அண்ணாவுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் இல்லை. விளையாட்டில் அதிக நாட்டம் செலுத்தினார்.



அதன் விளைவாக, அண்ணா எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் தேறவில்லை. பிற்காலத்தில் பெரிய மேதையாகத் திகழ்ந்த அண்ணா, எஸ். எஸ்.எல்.சி. பரீட்சையை மூன்று முறை எழுத நேரிட்டது என்றால், நம்பமுடியவில்லை அல்லவா? எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார்.



கல்லூரியில் படிக்கும் போதே, பட்டிமன்றங்களில் பங்கு கொண்டார். அவருடைய பேச்சுத்திறமை அப்போதே வெளிப்பட்டது. பி.ஏ.ஆனர்ஸ் (எம்.ஏ) பரீட்சையில் தேறினார். பட்டம் பெற்ற பிறகும் நூல்கள் படிப்பதை அண்ணா நிறுத்தவில்லை. இலக்கியங்கள், வரலாறுகள், புராணங்கள் அனைத்தையும் படித்தார்.



பேரறிஞராக உருவானார். அண்ணாவுக்கு 1930_ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பெற்றோர் பார்த்த மணமகளான ராணி அம்மாளை அவர் மணந்தார். அண்ணா ஏதாவது வேலைக்குப்போகவேண்டும் என்று அண்ணாவின் பெற்றோரும், தொத்தாவும் நினைத்தனர். அதனால், வேலை தேடி அலைந்தார்.



பாரிமுனை அருகில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால், சுதந்திர மனப்பான்மை உடைய அண்ணா, 4 மாதங்களுக்கு மேல் அந்த வேலையில் நீடிக்கவில்லை. இந்த நேரத்தில், அரசியல் பக்கம் அவர் கவனம் திரும்பியது. நீதிக்கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.



நீதிக்கட்சியின் பெரிய தலைவர்களுக்குத் தமிழில் நன்றாக பேசவராது. ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களுடைய பேச்சை தமிழில் மொழி பெயர்ப்பார், அண்ணா. அவருடைய மொழிபெயர்ப்பின் அழகைக்கண்டு, தலைவர்கள் பிரமித்தனர். அண்ணாவின் புகழ் தமிழ்நாடெங்கும் பரவத் தொடங்கியது.



திருப்பூரில் நடந்த இளைஞர் மாநாடு ஒன்றுக்கு, அண்ணா சென்றிருந்தார். அந்த மாநாட்டுக்குப் பெரியாரும் வந்திருந்தார். அந்த மாநாட்டில்தான் இருவரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர். அண்ணா, பெரியாரின் சீடரானார். நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற "விடுதலை" பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.



அதில் அண்ணா எழுதிய கட்டுரைகள், அவர் புகழை மேலும் உயர்த்தின. 1944_ல் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது. நீதிக்கட்சி தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவதையும், ஆங்கிலேயர்களுடனேயே உறவாடி வருவதையும் வெள்ளையர்கள் கொடுத்த "சர்" "ராவ் பகதூர்" போன்ற பட்டங்களைப் பெருமையோடு சுமப்பதையும் கண்டு மனம் நொந்தார்.



ஆங்கிலேயர் கொடுத்தப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றார். பெயருக்குப்பின்னால் சாதிப் பெயர் போட்டுக்கொள்வதை நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார். "ஜஸ்டிஸ் கட்சி" என்ற பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்றக்கோரும் தீர்மானத்தை இந்த மாநாட்டில் அண்ணாதான் கொண்டு வந்தார்.



தீர்மானத்தின் மீது 35 மணி நேரம் காரசாரமாக விவாதம் நடந்தது. பிறகு தீர்மானம் நிறை வேறியது. திராவிடக் கழகத்தின் தலைவராக பெரியாரும், தளபதியாக அண்ணாவும் இருந்து கட்சியை வளர்த்தனர். இந்த நேரத்தில் பெரியார் _ மணியம்மை திருமணத்தினால் அண்ணா_பெரியார் உறவு முறிந்தது. தி.மு.கழகத்தை அண்ணா தொடங்கினார்.



தி.மு.கழகம் வேகமாக வளர்ந்தது.

No comments:

Post a Comment