Thursday, June 16, 2011

அ.தி.மு.க.,வின் வீம்பால் வீண் செலவு: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: "அ.தி.மு.க., அரசு வந்ததும், வராததுமாக, சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக எடுத்த முடிவால், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே பலத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது' என, கருணாநிதி தெரிவித்துள்ளார்.








அவர் வெளியிட்ட, "கேள்வி-பதில்' அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய தலைமைச் செயலகத்திலிருந்து பணியாற்றுவது, நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால்தான், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் உள்ளத்தில் புதைந்திருக்கும் உண்மை காரணத்தை மக்கள் அறிவர். ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகங்கள் உள்ளன. அங்கிருந்து கோப்புகள் அமைச்சர்களை சென்று அடையவில்லையா? ஓமந்தூரார் வளாகத்தில், அனைத்து துறைகளும் அமைவதற்காகத்தான், தேவையான அலுவலகங்களை கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி முடிந்தால், அனைத்து துறை அலுவலகங்கள், அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டசபை ஆகியவை ஒரே வளாகத்திற்குள் வந்து விடும். மா.கம்யூ., சமச்சீர் கல்வியை, இந்த ஆண்டே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. தி.மு.க., சொல்வதை ஏற்காவிட்டாலும், கூட்டணிக் கட்சியான மா.கம்யூ., சொல்வதையாவது, தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டத்தை, நிறுத்தியதால், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, அச்சிடப்பட்ட புத்தகங்களை செல்லாது என அறிவித்துவிட்டு, புதிய பாடத்திட்டப்படி புத்தகங்களை அச்சிட அரசு ஏற்பாடு செய்துள்ளது. பழைய விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து, புத்தகங்களை அச்சிட அரசு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. வீம்பின் காரணமாக, அரசுக்கு ஏற்பட்டுள்ள முதல் வீண் செலவு. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஐகோர்ட் முடிவு தெரிகிற வரை, மாணவர்கள் எந்தப் புத்தகங்களைப் படிப்பர் என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. தேவையின்றி, அ.தி.மு.க., வந்ததும், வராததுமாக எடுத்த முடிவு காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment