Sunday, June 19, 2011

தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பயணிப்பதை ஜெயலலிதா தவிர்ப்பாரா

கோவை:""தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பயணிப்பதை ஜெயலலிதா தவிர்ப்பாரா,'' என, கோவையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.




தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க., அரசு அமல்படுத்தியது. 50 ஆண்டுகளில் எட்டக்கூடிய சாதனையை தி.மு.க., அரசு கடந்த ஐந்தே ஆண்டுகளில் எட்டியது. சட்டசபையில் எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்படாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.


அனைவரும் ஒரே மாதிரியான கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை அ.தி.மு.க., அரசு தடுத்து நிறுத்தியுள்ளது; அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தையும் நீக்க முயற்சிக்கிறது.தலைமை செயலக கட்டடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. இது முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்பது உண்மையே. ஆனால், முறையாக கட்டப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டதற்காக புதிய தலைமை செயலகத்தை புறக்கணிக்கும் ஜெயலலிதா, எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பயணிப்பதை தவிர்ப்பாரா? இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment