Showing posts with label வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல'. Show all posts
Showing posts with label வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல'. Show all posts

Wednesday, June 15, 2011

"வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல' : கருணாநிதி

சென்னை: "வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல' என, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.








கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கச்சத்தீவை திரும்பப் பெற, சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் வருவாய் துறையை இணைத்துக் கொள்ள முடிவு செய்து, கடந்த 9ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார்; ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வரும், ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சியினரும், கச்சத்தீவை, நான் மத்திய அரசிடம் கூறி, இலங்கைக்கு வழங்கும்படி செய்ததுபோல், என் மீது வசைமாரி பொழிந்துள்ளனர். சிலர் தமிழகத்தின் அழிவிற்கும், காவிரி பிரச்னைக்கும் நான் தான் காரணம் என முழங்கியுள்ளனர். இதிலிருந்தே, கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வரப்பட்டதே, என் மீது விமர்சனக் கணைகளை வீசத் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். கச்சத்தீவு தி.மு.க., அரசின் எதிர்ப்பை மீறி, 1974ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்த உரிமைகள், 1976ம் ஆண்டு தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சி நடந்த போது பறிக்கப்பட்டு விட்டன. அன்றிலிருந்து இன்று வரை, அ.தி. மு.க., 22 ஆண்டுகள், தி.மு.க., 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சியிலிருந்த போது, ஏன் கச்சத்தீவை மீட்கவில்லை?







ஜெயலலிதா 1991ம் ஆண்டு, சுதந்திர தின விழா உரையில், கச்சத்தீவை திரும்பப் பெற, மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும், அரசு தயாராக உள்ளது என்றார். அதற்கான தீர்மானத்தை 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றினர். அதற்கு அடுத்த ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பினோம். அது நடக்கக் கூடியதாக தெரியவில்லை என்றார். கடந்த 9ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது, "தனது ஆட்சியில் கச்சதீவை திரும்பப் பெற முயற்சித்ததாகவும், தி.மு.க., ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனக் கூறியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி, சட்டசபையில் நான் பேசும்போது, ""கச்சத்தீவை தாரை வார்க்க தி.மு.க., ஒப்புக் கொள்ளவில்லை. அனைத்து கட்சியினரும் ஆதரிக்க தயார் என்றால், கச்சத்தீவை திரும்பப் பெற அவையில் தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறேன்,'' எனக் கூறினேன்.







இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்பதற்காகத் தான், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என, ஜெயலலிதா 1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை மறந்து இன்று, வீராவேசமாகப் பேசியுள்ளார். தி.மு.க., தேர்தலிலே தோற்றிருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் தி.மு.க.,வின் தாயகப் பற்றையும், எனது தமிழ் பற்றையும் நன்கு அறிவர். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழகத்தின் மீது பற்று கொண்டவர்களும் அல்ல. தோல்வி அடைந்தவர்கள் எல்லாம், தமிழகம் மீது பற்று அற்றவர்களும் அல்ல. வென்றவர்கள் சொல்வது எல்லாம் வேதமும் அல்ல. இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.