Friday, July 9, 2010

அழிவின் விளிம்பில் தஞ்சை குளங்கள்

அழிவின் விளிம்பில் தஞ்சை குளங்கள்

First Published : 08 Jul 2010 01:29:06 AM IST


குப்பைகள், கழிவுப் பொருள்கள் குவிந்து கிடக்கும் தஞ்சை சாமந்தான் குளம்.
தஞ்சாவூர்: தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட பல குளங்கள் முற்றிலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள குளங்களும் அழிவின் விளிம்பில் உள்ளன.    தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் தனது ஆளுகைக்குள்பட்ட நிலங்களை வளப்படுத்த குளம், குட்டை மற்றும் கால்வாய்களை வெட்டி, வேளாண் தொழிலை செம்மைப்படுத்தினார். பின்னர், வந்த நாயக்கர்கள் அந்தக் குளங்களைப் பராமரித்தனர்.  நாயக்க மன்னர்களைத் தொடர்ந்து வந்த மராட்டியர்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள சமுத்திரம் ஏரியை உருவாக்கினர் என்பது வரலாறு. சோழர்களின் தலைநகரமாக ஆன பின்பே தஞ்சை பெரும் வளர்ச்சியைப் பெற்றது. இதற்கு உதாரணமாக கல்லணை, காவிரியைக் கூறலாம். இதனால், தஞ்சை தரணியில் வேளாண் தொழிலைச் சிறப்படையச் செய்த பெருமை ராஜராஜ சோழனையே சாரும்.   தஞ்சை பெரிய கோயில் அருகிலுள்ள சிவகங்கைப் பூங்கா குளம் ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்டது. இக் குளத்திலிருந்து நகரின் பிற பகுதிகளில் அமைந்துள்ள சாமந்தான் குளம், அய்யங்குளம், நாயக்கர் அரண்மனைக்குள் இருந்த அந்தப்புரக் குளம் ஆகியவற்றுக்கு பூமிக்குள் நீர் வழிப் பாதை அமைக்கப்பட்டு, நீர் நிரப்பப்பட்டுள்ளது. இன்றும் அதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.   காலப் போக்கில் மேற்கூறிய குளங்களுக்கு சென்ற நீர்வழிப் பாதைகள் அனைத்தும் அடைபட்டு, சில இடங்களில் சாலைகள் அமைக்க பள்ளம் தோண்டிய போது நீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்து, அதில் மண் நிரம்பி அவை மூடப்பட்டன.   தஞ்சை நகரில் தற்போது பழங்காலக் குளம், ஏரி என எடுத்துக் கொண்டால் சிவகங்கை குளம், சாமந்தான் குளம், அய்யங்குளம், அழகிக்குளம், பூக்காரத் தெருவிலுள்ள கல்லுக் குளம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள பரந்து விரிந்த சமுத்திரம் ஏரி  உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் வகையிலான சில மரபுச் சின்னங்களான நீர் நிலைகள் மட்டுமே உள்ளன.  பெரிய கோயில் பின்புறம் இருந்த செவ்வப்பநாயக்கன் ஏரி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.   ஏற்கெனவே நகரில் பழைமையான பல்வேறு குளங்கள் அழிக்கப்பட்டு, குளம் இருந்ததற்கான சுவடுகளே தெரியாத வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது அழகிக்குளம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் எதிரில் உள்ள குளம், சாமந்தான் குளம், சமுத்திரம் ஏரி ஆகியன அழிவின் விளிம்பில் உள்ளன.   நகரிலுள்ள குளங்கள் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சாமந்தான் குளத்தின் நிலப்பரப்பில் கால் பகுதி குப்பை மேடாக உள்ளது.  இதேபோல, சமுத்திரம் ஏரிக்குள் பாதி இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மாடி வீடுகளும், தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.   எனவே, அழிவை நோக்கியுள்ள சாமந்தான் குளம், வேகமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் சமுத்திரம் ஏரி ஆகியவை காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன.  மாவட்ட  நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டினால், இன்னும் ஓராண்டிலேயே சாமந்தான் குளம் தூர்க்கப்பட்டு விடும். சமுத்திரம் ஏரியும் காணாமல் போகும் நிலை ஏற்படும்.   தஞ்சையில் நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் அரசின் ஒத்துழைப்புடனேயே நடக்கிறது என்றே கூறலாம். எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் குளங்களாக இருந்தவை ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த இடத்துக்கு பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.   மேலும், நீர்நிலைகள் இருந்த இடங்களில் கட்டப்படும் கட்டடங்கள் மண்ணுக்குள் இறங்கலாம். இது பின்னால் வரக்கூடிய ஆபத்து எனத் தெரிந்தும், நகராட்சி நிர்வாகம் சில இடங்களில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கியுள்ளது.    இந்நிலையில், அழியும் நிலையில் உள்ள குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சுத்தம் செய்து தண்ணீர் விட்டு, நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கலாம். சாமந்தான் குளம் நகரின் மையப் பகுதியில் இருப்பதால், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி படகு சவாரிவிட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றலாம்.

No comments:

Post a Comment