தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னை, மாநிலத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு மாநகராக காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரும், சர்வதேச அளவில் பிரபலமான நகராகவும் விளங்கி வருகிறது.
371 ஆண்டுகளுக்கு முன்பு, 1639 ஆக. 22ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த, பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளரான ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் விஜய நகர அரசின் கீழ் இருந்த வந்தவாசியை ஆண்ட வெங்கடாத்ரி நாயக்கரிடம் (இவருடைய தந்தைதான் தமர்லா சென்னப்ப நாயக்கர்) பேசி, கடற்கரை அருகே இடத்தை வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர்.
நாயக்கரிடமிருந்து இடம் வாங்கிய ஆவணத்தில் சென்னப்ப நாயக்கர் பட்டினம் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நாளை சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாட நகர வரலாற்று அறிஞர் எஸ்.முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டிசூசா ஆகியோர் இணைந்து கடந்த 2004ம் ஆண்டு மெட்ராஸ் டே கொண்டாடத் துவங்கினர். மெட்ராஸ் டே பிரபலமாவதற்கு சுசீலா ரவீந்திரநாத், ரேவதி, வி.ஸ்ரீராம் ஆகியோரும் இம்முயற்சியில் பங்கெடுத்தனர். தற்போது சென்னை முழுவதும் கொண்டாடும் ஒரு வார விழாவாக (ஆக.15-22) உருவாகியுள்ளது.
பிரிட்டிஷார் ஜார்ஜ் கோட்டை கட்டியதால், கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. ஆங்காங்கே இருந்த சிறுசிறு மீனவர் குடியிருப்புகள் மற்றும் மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இடையிலும் குடியிருப்புகள் அமைந்ததால் ஊர் விரிவாகத் தொடங்கியது.
பிரிட்டிஷாருக்கு முன்பாக, 1552ல் சாந்தோமில் குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள் வியாபாரம் செய்தனர். ஜவுளி மூலப்பொருட்கள் இப்பகுதியில் கிடைத்தன. இந்த வர்த்தகத்தைப் பங்கிடுவதற்காகத்தான் கிழக்கிந்திய கம்பெனியும் திட்டமிட்டது. அதன்விளைவாகவே பிரான்சிஸ் டே இங்கு வந்தார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னபட்டினம் என்றும் தெற்கே உள்ள பகுதி மதராஸ்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. பிரிட்டிஷார் வருகைக்குப் பின்னர் இரண்டு நகரத்தையும் ஒன்றாக்கி மதராஸ்பட்டினம் என்று அழைத்தார்கள். 1953ல் மதராஸ்பட்டினத்துக்கு கீழ் இருந்த பகுதிகள் மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்டது. 1746ம் ஆண்டில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கைவசத்துக்குச் சென்றது. 2 மாதங்களிலேயே மீண்டும் ஆங்கிலேயேர் கைப்பற்றினர். அப்போது முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை பிரிட்டிஷார் கைவசமே இருந்தது.
சுதந்திரத்துக்குப் பின்னர் ஜவுளி, ஆட்டோமொபைல், சாப்ட்வேர், மருத்துவம், ஹார்ட்வேர் உற்பத்தி, நிதிச் சேவைகள் என்று நகரத்தின் தொழில் பெருகின. வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத்திலும் இந்நகரம் சிறந்து விளங்குகிறது. பழமையான பெருமைக்குரிய கட்டடங்களும், நவீன மாற்றத்துக்குரிய கட்டடங்களுடனும் சென்னை மனதைக் கவர்கிறது.
சென்னையின் பெருமையையும் அருமையையும் வெளிப்படுத்தும் வகையில், மெட்ராஸ் டே நாளில், கதை, கவிதை, கட்டுரை போட்டிகள், பாரம்பரிய நடை பயணங்கள், உணவுத் திருவிழா, பந்தயம், போட்டோ கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment