வரி கட்டாமல் கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி தாக்கு
Vote this article
(1054)
(19)
சென்னை: ஊழல் கட்சிகளான திமுக, அதிமுகவோடு கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:
கேள்வி: தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்- அவர்களோடு கூட்டணி கிடையாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவருடைய அந்த அறிவிப்பை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. நான் படித்துப் பார்த்தேன். ஒரேயொரு ஒப்பீட்டு உதாரணத்தை மாத்திரம் இதுபற்றிச் சொன்னால் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பதைப் போல பொதுமக்களுக்கு உண்மை விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
தி.மு. கழகத் தலைவனாக இருக்கின்ற நான் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்கிவிடுகிறேன். சில நேரங்களில் அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலும் அந்தத் தொகையைச் சேர்த்து வழங்கச் செய்திருக்கிறேன்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், 2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' திரைப்படத்திற்கு நான் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமே, தம்பி மு.க. ஸ்டாலினை நேரில் சென்று வழங்கும்படி செய்தேன்.
அது போலவே 9-7-2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூபாய் 25 லட்சத்தில் வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்தக் கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.
2005 நவம்பர் முதல் 2010 ஆகஸ்ட் மாதம் வரை மாதந்தோறும் ஏழையெளியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என்றும் ஐயாயிரம் ரூபாய் என்றும் ஒவ்வொரு மாதமும் என் பெயரால் உள்ள "கலைஞர் கருணாநிதி அறக் கட்டளை'' நிதியிலிருந்து வழங்கி வருவதன் மூலமாக இதுவரை 2049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோலவே ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழியாக வழங்கிட, ஒரு கோடி ரூபாயை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு வழங்கினேன்.
இந்த நிதியைக் கொண்டு, "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி, இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கச் செய்திருக்கிறேன்.
மேலும் ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கி, அதன் மூலம் அறக் கட்டளை ஒன்றை உருவாக்கி கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்.
அண்மையில் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "பின்லாந்து'' நாட்டைச் சேர்ந்த உலகத் தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு முதன் முறையாக பத்து லட்சம் ரூபாய்க்கான இந்த விருது வழங்கப்பட்டது.
"பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காக எனக்குக் கிடைத்த 50 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்திருக்கிறேன். அந்தத் தொகையினை அருந்ததியர் நல வாரியத்தின் மூலமாக அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க வழங்கப்படும் என்று அறிவித்து, அப்படி வழங்க முற்பட்ட போது, அந்த 50 லட்சம் ரூபாய் போதாமல், மேலும் பதினோறு லட்ச ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்த போது, அந்தத் தொகையையும் வங்கியில் இருந்த என்னுடைய நிதியிலிருந்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்து, மாணவர்களுக்கு அதை வழங்கச் செய்தேன்.
அது போலவே "இளைஞன்'' திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியமைக்காக எனக்கு அளிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயில், வருமான வரித் தொகை போக எஞ்சிய 45 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்து, மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக அந்தத் தொகையை வழங்கச் செய்தேன்.
என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும், பொற்காசுகளையும் கூட அப்படியே முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்தேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 14-4-2010 அன்று மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் எனக்கு அளித்த "அம்பேத்கர் சுடர்'' விருதுடன் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினையும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.
இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக் கூட ஏழையெளியோர்க்குப் பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டு விட்டன.
அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்- மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார். இந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே,
அவர் ஊழலைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது-உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது! பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமா?
கேபிதான் விளக்க வேண்டும்:
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் கே.மகேந்திரன் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையைப் பார்த்தீர்களா?
பதில்: அவரது மறுப்பு அறிக்கையைப் பார்த்தேன். ஆனால் அவர் தனது அறிக்கையிலே குறிப்பிட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் குமரன் பத்மநாபன் அளித்த பேட்டியினையும் நாளேடுகளில் படித்தேன். அதாவது-விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாபன் அளித்த பேட்டியில், "இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோ தான்'' என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
மேலும் அவர் தனது பேட்டியில், "கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சக் கட்ட போர் தீவிரம் அடைந்திருந்தது. இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டை தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுப்பினர்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டு கோளை ஏற்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகளும் விரும்பினர்.
இந்த முடிவை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் நடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., மகேந்திரனிடம் தெரிவித்தார். அதை அவர், ம.தி.மு.க. பொதுச் செயலர், வைகோவிடம் கூறினார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால், விடுதலைப் புலிகளின் முடிவை வைகோ மாற்றினார். தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையை எடுக்க முடியும் என வைகோ கூறினார்'' என்று குமரன் பத்மநாபன் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பேட்டி உண்மையல்ல என்று மகேந்திரன், எம்.எல்.,ஏ., மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதிலே என்ன உண்மை என்பதை விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாபன் தான் தெரிவிக்கவேண்டும்.
கிரீன் பீல்டு' விமான நிலையம்:
கேள்வி: திருப்பெரும்புதூர் "கிரீன் பீல்டு'' விமான நிலையம் பற்றி தெளிவான ஒரு விளக்கத்தைத் தாங்கள் எழுதியிருந்தீர்கள். தமிழகத்திற்கு வரக் கூடிய நல்ல திட்டங்களையெல்லாம் அரசியல் உள் நோக்கத் தோடு ஒருசில கட்சிகள் எதிர்ப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் தானே இழப்பு?
பதில்: இந்தப் பிரச்சினை பற்றி இன்றைய தினம் ஒரு நாளிதழில் திருப்பெரும்புதூரைச் சேர்ந்த ச.கணபதி என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் சில குறைபாடுகளைத் தெரிவித்திருந்த போதிலும் சில உண்மைகளையும் தெரிவித்திருக்கிறார்.
அதாவது- "கிரீன் பீல்டு விமான நிலைய விவகாரத்தில் முதல்வரின் அறிக்கை உண்மையானதே. மற்ற மாநிலங்களில் எல்லாம், கிரீன் பீல்டு விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்து விட்டது; தமிழகம் மட்டுமே பின்தங்கியுள்ளது. ஆரம்பத்திலேயே இதற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர், எதிர்க்கட்சியினர்.
கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, கடந்த நான்கு ஆண்டு காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், ஐந்தாண்டுகள் உறக்கத்தில் இருந்த ஜெயலலிதாவும், ராமதாசும், தேர்தல் நெருங்கும் நேரத்தில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கின்றனர். தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல. இத்திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் சரியல்ல.
இதே போல் தான் தென் மாவட்டங்களில், "டாடா'' நிறுவனத்தின் தொழிற்சாலையை, விவசாயிகள் என்ற போர்வையில் தடுத்து நிறுத்தி, அம்மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சியை அரசியல் கட்சிகள் முடக்கின. தற்போது அதே "பார்முலா''வை இங்கேயும் பயன்படுத்தி, தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கின்றனர்'' என்றெல்லாம் எழுதியிருப்பதோடு, "பொதுமக்களின் ஆதரவோடு இத்திட்டம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை'' என்றும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருக்கிறார்.
இந்த உண்மை பொது மக்களுக்குத் தெரிகிறது. அது மாத்திரமல்ல; ஏதோ உள்நோக்கத்தோடுதான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதும் பொது மக்களுக்குப் புரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment