மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் ராஜராஜன்: முதல்வர் மு. கருணாநிதி
First Published : 27 Sep 2010 12:44:29 AM IST
Last Updated : 27 Sep 2010 12:56:40 AM IST
தஞ்சாவூர் ஆயுதப் படை திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டையொட்டி, சிறப்பு நாணயத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதைப
தஞ்சாவூர், செப். 26: ஆயிரமாண்டுகளுக்கு முன்பே மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் ராஜராஜன் எனப் புகழாரம் சூட்டினார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி.
தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, ஆயுதப் படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியது:
சோழ மன்னர்களில் பெரும் சிறப்பும், பெரும் புகழும் கொண்டு விளங்கிய ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அதிகாரிகள், ஆர்வலர்கள், அறிஞர்களுடன் இணைந்து இங்கு கொண்டாடியிருக்கிறோம். இதன்மூலம் நாம் ராஜராஜனுக்கு புகழை சேர்த்ததாகக் கொள்ளக்கூடாது. ராஜராஜன்தான் நமக்கு இந்த வாய்ப்பை பிச்சையாக வழங்கியுள்ளார்.
நீலகண்ட சாஸ்திரிகள் கூட கலைப்படைப்பு மிகுந்திருந்த காலம் ராஜராஜனின் காலம் என்றும், அக்காலத்தில் மக்கள் மீது அக்கறை கொண்டு கலை, உள்ளூர் ஆட்சி முறை, வாணிபம், கடல் கடந்த வாணிபம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முழுமை பெற்று விளங்கின எனக் கூறியுள்ளார்.
கி.பி. 850-ல் விஜயாலய சோழன் இங்கிருந்த பகை மன்னனை வெற்றி கொண்டு, தஞ்சையை சோழர்களின் தலைமையிடமாக மாற்றினான். அடுத்து வந்த ஆதித்தன் தொடங்கி ராஜராஜன், ராஜேந்திரன் என சோழப் பேரரசின் தலைநகராக தஞ்சாவூர் விளங்கியது. இங்கிருந்து வங்கக் கடல், அரபிக் கடல், மாலத்தீவுகள் வரையிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, அதனைத் திறம்பட நிர்வகித்தான் ராஜராஜன்.
உதாரணமாக, எல்லைகளில் பாதுகாப்புக்கு காவல் படைகள், ஆற்றல் மிக்க அலுவலர்கள், அறிஞர்களை எப்போதுமே தன்னுடன் வைத்திருந்தான்.
ராஜராஜன் காலத்தில் பல்வேறு வரிகள் போடப்பட்டன. அவற்றை இரண்டாண்டுகளுக்குச் செலுத்தாதவர்களின் நிலங்களை விற்று, அந்தப் பணம் அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டது. அவன் திரட்டிய நிதிகள் மக்கள் நல்வாழ்வு, சுகம், நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வீரப்பணிகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டன.
ராஜராஜன் காலத்தில் நிலங்களை அளக்க ஒரு முறை கையாளப்பட்டிருந்தது. இதற்கென பயன்படுத்தப்பட்ட ஒரு கோலுக்கு உலகளந்தான் கோல் என்று பெயர். நிலங்களை நிலம், கொல்லை, காடு எனப் பிரித்து, அக்காலத்திலேயே அளவீடுகள் செய்யப்பட்டன.
ராஜராஜன் சைவத்தைப் பின்பற்றுபவனாக இருந்தாலும், வைணவம், பௌத்தம், சமண சமயங்களை வெறுத்தவன் அல்லன். அவர்களுக்கும், அந்தணர்கள், புலவர்கள் உள்ளிட்டோருக்கும் நிலங்களை வழங்கியுள்ளான்.
ஊராட்சிகளை நிர்வகிக்க தனியாக அவை இருந்தன.
இவை வரி விதித்தல், வசூலித்தல், அதனை அரசு கஜானாவில் சேர்த்தல், வழக்குகளை விசாரித்துத் தீர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த அவைக்கு உறுப்பினராகப் போட்டியிடவே பல்வேறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. குடவோலை முறையில் உள்ளாட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மக்களாட்சியைத் திறம்பட நடத்தி வாழ்ந்தவன் ராஜராஜன். அவனைக் கண்டு நடுங்கியவர்கள் உண்டு. ஆனால், அவன் அமைதியின் உருவமாக, ஆன்மிகவாதியாக வாழ்ந்தான்.
உலகமே வியக்கும் பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜனின் அடுத்த ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது நாம் இருக்கப்போவதுமில்லை. அந்த விழாவை நடத்துபவர்கள் நம்மை மறக்கப் போவதுமில்லை என்றார் கருணாநிதி.
விழாவுக்கு மாநில நிதியமைச்சர் க. அன்பழகன் தலைமை வகித்தார்.
செம்மை நெல்லுக்கு ராஜராஜன் பெயர்
செம்மை நெல்லுக்கு ""ராஜராஜன் 1,000'' எனப் பெயர் சூட்டுவதாக அறிவித்தார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி.
தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
ஒரு முறை வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னிடம் வந்து, இந்த நெல் செம்மையாக விளைகிறது, இதற்கு என்ன பெயர் வைக்கலாம் எனக் கேட்டார். செம்மையாக விளைவதால், செம்மை நெல் என்றே பெயர் வைத்துக் கொள்ளுமாறு கூறி, அப்போது அதற்கு செம்மை நெல் எனப் பெயரிட்டேன்.
தற்போது தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, அக் கோயிலைக் கட்டிய ராஜராஜனின் பெயர் தினந்தோறும் மக்கள் மனதில் உணவு உண்ணும் போதெல்லாம் எண்ணி மகிழ்வுறும் வகையில் செம்மை நெல் (சாகுபடிக்கு) ராஜராஜன் 1,000 எனப் பெயரிடுகிறேன் என்றார் கருணாநிதி.
No comments:
Post a Comment