First Published : 17 Sep 2010 01:13:34 PM IST
Last Updated :
தஞ்சாவூர், செப் 16: தஞ்சாவூரில் நடைபெற உள்ள பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான விழா அழைப்பிதழ்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 22-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பெரிய கோயிலில் தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை நிகழ்ச்சி, மாலை 6.45 மணிக்கு திருநங்கை நர்த்தகி நடராஜ் நடனம், இரவு 7.30 மணிக்கு முனைவர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல் நாளிலேயே மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிவகங்கைப் பூங்கா, ராசராசன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கரந்தை ஆகிய இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதேபோல, செப்டம்பர் 23, 24-ம் தேதிகளிலும் அதே 5 இடங்களில், அதே நேரத்திற்கு சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 2-ம் நாளான செப்டம்பர் 23-ம் தேதி பெரிய கோயிலில் மாலை 5.30 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் கலை நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு டி.எம். கிருஷ்ணா இசை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு நடனக் கலைஞர் ஜாகிர் உசேன் நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.
செப்டம்பர் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு அரண்மனை வளாகத்தில் சோழர்கால வரலாற்றை விளக்கும் கண்காட்சியை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். காலை 10.30 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகால்சோழன் அரங்கில், "இந்திய பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தை தொடங்கிவைத்தும், சோழர்கால ஓவியங்கள் என்ற நூலை வெளியிட்டும் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.
மாலை 5.30 மணிக்கு பெரிய கோயிலில் அலங்காநல்லூர் ஆறுமுகம் குழுவினரின் பறையாட்டம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், மாலை 6.45 மணிக்கு அருணா சாய்ராமின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரிய கோயிலில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் தலைமை வகிக்கிறார். முனைவர்கள் ஒளவை நடராசன், குடவாயில் பாலசுப்பிரமணியன், நடன காசிநாதன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் பேசுகின்றனர். மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி வரவேற்றுப் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் நன்றி கூறுகிறார்.
மாலை 5.30 மணிக்கு பெரிய கோயிலில் திருக்குவளை சகோதரிகளின் மங்கல இசையும், அதைத் தொடர்ந்து திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. பின்னர், முனைவர் பத்மா சுப்பிரமணியன் குழுவினரின் 1000 நடனமணிகள் வழங்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பெரிய கோயிலில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு திலகர் திடலில் தி.க.ச. புகழேந்தி, தி.க.ச. கலைவாணன் குழுவினரின் ராசராச சோழன் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது.
செப்டம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு பெரிய கோயிலில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஆயுதப் படையினர் பயிற்சித் திடலில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முதல்வர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரையாற்றுகிறார். விழாவுக்கு தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் தலைமை வகிக்கிறார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பெற்றுக் கொள்கிறார். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ச.சு. பழநிமாணிக்கம் சிறப்பு நாணயத்தை வெளியிட, நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமி பெற்றுக் கொள்கிறார்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசுகின்றனர். தலைமைச் செயலர் சு. மாலதி வரவேற்கிறார். சுற்றுலா- பண்பாட்டுத் துறை செயலர் வெ. இறையன்பு நன்றி கூறுகிறார்.
முதல்வர் கருணாநிதி பெரிய கோயிலுக்கு வருவாரா?
செப்டம்பர் 23-ம் தேதி இரவே முதல்வர் கருணாநிதி தஞ்சாவூருக்கு வந்துவிடுவதாக சென்னையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக போலீஸôர் கூறுகின்றனர். 24-ம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வரங்க நிகழ்ச்சி, 26-ம் தேதி ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ள நிறைவு விழா நிகழ்ச்சி ஆகியவற்றில் மட்டுமே முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். 25-ம் தேதி அவர் தஞ்சாவூரில் தங்கியிருந்தாலும், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படவில்லை.
பெரிய கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்பதாக அழைப்பிதழில் இல்லை. பெரிய கோயிலில் 25-ம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் கனிமொழி வரவேற்கிறார்.
1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பெரிய கோயிலில்தான் நடைபெறுகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது, யாரெல்லாம் பங்கேற்கின்றனர் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
பெரிய கோயிலுக்கும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்குமான ராசி குறித்த கருத்துகளைத் தகர்க்கும் விதமாக, முதல்வர் பெரிய கோயிலுக்குள் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
thanks by dinamani First Published : 17 Sep 2010 01:13:34 PM IST
hai this topic given to dinamani news paper
ReplyDelete