முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Tuesday, November 2, 2010
ஜெயலலிதாவின் நேர்மை, நாணயத்திற்கு காலம் பதில் சொல்லும்: முதல்வர்
சென்னை : "அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் நேர்மை, நாணயம், ஜனநாயகத்திற்கு காலம் தான் பதில் சொல்லும்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை பற்றியும், நாணயத்தை பற்றியும், ஜனநாயகத்தை பற்றியும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன் 1.7.1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஐந்தாண்டுகள் அவர் முதல்வராக ஆட்சி செய்ததற்கு பின் 30.4.1996ல் அவருடைய சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்.ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களின் மதிப்பு, 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 43 ரூபாய். இதுதான் ஜெயலலிதாவின் அகராதியில், "நாணயம்' என்பதற்கான அர்த்தமா? ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
சட்டத்தின் சந்து, பொந்துகளில் எல்லாம் புகுந்து கொண்டு, கின்னசில் இடம் பெறக் கூடிய அளவுக்கு, தனது சொத்துக்குவிப்பு வழக்கை கீழ்கோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை, பின் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கீழ்கோர்ட் வரை, "பரமபத சோபன' படத்தில் பார்ப்பதை போல மேலும் கீழும் இழுத்தடித்து, தனது நேர்மையை குறித்த காலத்தில் நிரூபிப்பதற்கு திராணியின்றி தாமதம் செய்து வருகிறாரே, இதுதான் "நேர்மை'க்கு அடையாளமா?முதல்வராக இருந்த போது, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலையில் வாங்கி கொண்டாரே, இதுதான் "நேர்மை'க்கான அறிகுறியா?டான்சி நிலபேர வழக்கில், டான்சி நில சம்மந்தமான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு, வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, கோர்ட்டில் தான் போட்ட கையெழுத்தையே, தன்னுடைய கையெழுத்து இல்லை என சத்தியப் பிரமாணம் செய்து சொன்னாரே, இதுதான் "நாணயத்திற்கு' ஜெயலலிதா வழங்கும் சான்றிதழா?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் பொறுப்பேற்ற உடனேயே, முதல் பணியாக சட்டசபையிலேயே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய அநாகரிகப் போக்கும், அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் உறுதிமொழியை எடுத்து கொண்டதும், சட்டசபையிலே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய கலாசார கேடும் அரங்கேற்றப்பட்டனவே, இதுதான் ஜெயலலிதா வழிகாட்டும் "ஜனநாயக'த்தின் பாதையா?முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால், நாளை கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பர். பின் மற்ற சிறுபான்மையினரும் கேட்பர். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும் என்று, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான தனது எண்ணத்தை வெளிப்படுத்தியவர் ஜெயலலிதா.
"ஜனநாயகத்துக்கும், நாணயத்துக்கும் அவர் கொண்டிருக்கும் அர்த்தமும், அவர் பின்பற்றும் அணுகுமுறையும் கண்டு ஜனநாயகத்திலும், நேர்மை, நாணயத்திலும், குறைந்தபட்ச நம்பிக்கை கொண்டவர்கள் கூட, அதிகபட்சமாக நகைப்பர். செய்ய வேண்டியதை செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்தும், முதல்வர் பொறுப்பையும், அதிகாரத்தையும் சொந்த சுயநல வேட்டைக்காகப் பயன்படுத்தியவர் ஜெயலலிதா.இன்றைக்கு ஜனநாயகம், நேர்மை, நாணயம் பற்றியெல்லாம் பேசுவதை நமது ஜனநாயக மாண்புகளிலே அக்கறையும், ஆர்வமும் உள்ளவர்கள் கவனித்து, கணித்து கொண்டு தான் இருக்கின்றனர். இவை அனைத்திற்கும் காலம் தான் பதில் சொல்லும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment