Tuesday, November 2, 2010

"நெருங்கி... நெருங்கி...' பார்க்கலாம் : திருப்பதியில் தேவஸ்தானம் முடிவு



நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை பக்தர்கள், அருகிலிருந்து தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர, தேவஸ்தான நிர்வாகம் முன்வந்துள்ளது.

வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வெங்கடேச பெருமாளை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினமும் திருமலை வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், சில வினாடிகள் கூட சுவாமியை தரிசிக்க முடியாமல் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள், தேவஸ்தான நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து புகார் கூறினர். இதையடுத்து, பக்தர்களின் மனக்குறையை போக்க, சுவாமியை அருகிலிருந்து தரிசிக்கும் மாற்று ஏற்பாடுகளை, தேவஸ்தான நிர்வாகி கிருஷ்ணா ராவ் செய்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணா ராவ் கூறியதாவது: வார இறுதி தினங்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகம் குவியும் என்பதால், சுவாமியை அருகிலிருந்து தரிசிக்கும் வசதியை, பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ள செவ்வாய், புதன் கிழமைகளில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. திருமலை கோவிலில் செவ்வாய்கிழமை அதிகாலை சுப்ரபாத சேவை முடிந்த பிறகு, புதன் நள்ளிரவு வரை, வைகுண்டம் இரண்டாவது கியூ காம்ப்ளக்சிற்குள் சென்று விட்ட பக்தர்களுக்கு, சுவாமியை அருகிலிருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில், புதனன்று நள்ளிரவுக்குள் தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்கு, வியாழனன்றும் இந்த வசதி ஏற்படுத்தப்படும். புதிய நடைமுறைப்படி, கோவிலில் மூலவரின் முன்பு உள்ள மூன்றாவது வாசற்படி அருகிலிருந்து தரிசிக்கலாம். சில தினங்களில் வைகுண்டம் கியூ காம்பளக்சில் 15 வளாகங்களுக்கு குறைவாக கூட்டம் இருந்தாலும், புதிய நடைமுறைப்படி தரிசன வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இவ்வாறு கிருஷ்ணா ராவ் கூறினார்.

No comments:

Post a Comment