Saturday, April 16, 2011

மதுரையில் இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் வெள்ளத்தில் கோலகலமாக நடைபெற்றது


மதுரையில் இன்று
 
மீனாட்சி-சுந்தரேசுவரர் 
 
திருக்கல்யாணம்:
 
பக்தர்கள் வெள்ளத்தில் கோலகலமாக நடைபெற்றது
மதுரை, ஏப். 16-
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் எதிர்சேவை போன்ற வைபவங்களை காண மதுரை மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள்.
 
இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் இரவில் பூதம், அன்னம், காமதேனு, தங்கப்பல்லக்கு, குதிரை, ரிஷபம் உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நான்கு மாசி வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
 
14-ந்தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், சிவபெருமானை சந்தித்த மீனாட்சி நாணி தலை குனிந்து தன் மணவாளன் சிவபெருமான் என்பதை உணர்ந்த திக்விஜயம் நிகழ்ச்சி நேற்று மாலையும் சிறப்பாக நடைபெற்றது.
 
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதற்காக ரூ.3 1/2 லட்சம் செலவில் ஊட்டி, பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ண மலர்களால் வடக்கு-மேல ஆடி வீதியில் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
 
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் 4 சித்திரை வீதிகளில் சுற்றி வந்து பின் கோவிலில் உள்ள முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர். காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
 
காலை 9.57 மணிக்கு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் வடக்கு-மேல ஆடிவீதியில் அமைக்கப்பட்டிருந்த மண மேடைக்கு வருகை தந்தார். பின்னர் மீனாட்சி அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், முருகப்பெருமான் தெய்வானை ஆகியோர் அடுத்தடுத்து மேடைக்கு வந்தனர்.
 
பின்னர் 10.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். 10.35 மணிக்கு விநாயகர் பூஜையும், முளைப்பாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 10.40 மணிக்கு மந்திரங்கள் ஓதி மேடையில் யாகம் வளர்க்கப்பட்டது.
 
பின்னர் பல்வேறு பூஜைகளும், திருப்பாலிகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுந்த ரேசுவரர் பிரதிநிதியாக தெய்வசிகாமணி பட்டரும், மீனாட்சி அம்மன் பிரதிநிதியாக அசோக் என்ற மருதநாயக்கர் பட்டரும் இருந்தனர்.
 
சரியாக 10.56 மணிக்கு மங்கல இசை முழங்க சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுக்கு மங்களநாண் அணிவித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சிவ சிவ என கோஷமிட்டனர். மேடையிலேயே சுவாமி, அம்மன் மீது பூக்கள் தூவப்பட்டது. மேலும் பெண் பக்தர்கள் தங்களது கழுத்தில் புது தாலியை மாற்றிக் கொண்டனர்.
 
திருக்கல்யாண நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், நீதிபதி ராமநாதன், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், மேயர் தேன்மொழி, மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், கோவில் நிர்வாக அதிகாரி பத்மநாபன், பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
பக்தர்கள் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக கோவிலிலும், கோவில் வெளியேயும் 19 டி.வி.க்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வரிசையாக நின்று திருமண மொய் பணத்தை செலுத்தினர்.
 
திருக்கல்யாணத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இன்று மாலை பூப்பல்லக்கும், நாளை காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment