Friday, April 15, 2011

இன்று மீனாட்சி திருக்கல்யாணம்

ஏப்ரல் 15,2011


Stay connected to temple.dinamalar.com
 
 
 
சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் செய்து, உலகையெல்லாம் வென்று, இறைவனின் மனதையும் வென்ற அன்னை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அனைத்து உலகங்களுக்கும் மணவோலை அனுப்பப்பட்டது. தெய்வத் தம்பதியர் திருமணம் பூவுலகில் நடப்பதைக் காண விண்ணுலகமே மண்ணுலகிற்கு வந்தது. மணமகன் சுந்தரேஸ்வரரை வரவேற்க பிரம்மாவும்,திருமாலும் மதுரைக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். சுமங்கலிப்பெண்கள் பூரண பொற்கலசம் ஏந்தி மங்கலதீபத்தோடு அணிவகுத்து நின்றனர். பெண்ணின் தந்தை மலையத்துவஜ பாண்டிய மன்னனும், தாய் காஞ்சனமாலையும் மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து, ""எம் மகள் மீனாட்சியை மணந்து பாண்டிய நாட்டை அரசாள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அகத்தியர், நாரதர் போன்ற ரிஷிகள் பக்தி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தனர். பிரம்மா முன்னிருந்து யாகவேள்வியை நடத்தினர். கலைமகளும், அலைமகளும், மலைமகளாகிய மீனாட்சியை அலங்காரம் செய்து மணவறைக்கு அழைத்து வந்தனர். கொட்டியது மேளம், குவிந்தது கோடி மலர், கட்டினார் மாங்கல்யம். மீன்போன்ற கண்களையுடைய அங்கயற்கண்ணியையும், அழகே வடிவான சுந்தரேஸ்வரரையும் கண்ட அனைவரும், "கண் பெற்ற பயனை இன்று கண்டோம் என்று மகிழ்ந்து வாழ்த்தினர். பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்தது. இந்த இனிய காட்சியை நாளை நாம் காணலாம். இரவில் கல்யாண கோலத்தில் சுந்தரேஸ்வரர் யானையிலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் மாசிவீதியை வலம் வருவர். இக்காட்சியைத் தரிசித்தால் உங்கள் இல்லத்தில் விரைவில் மேளச்சத்தம் ஒலிக்கும்.

1 comment: