Monday, October 11, 2010

இந்தியாவுக்கு 30-வது தங்கம்

இந்தியாவுக்கு 30-வது தங்கம்

First Published : 12 Oct 2010 01:46:46 AM IST


தில்லி காமன்வெல்த்தில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் தேசியக் கொடியுடன் மைதானத்தை மகிழ்ச்சியுடன் வலம் வருகிறார் இந்திய வீராங்கனை
புது தில்லி, அக்.11: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 30-வது தங்கத்தை வென்றது.  தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 6 வெண்கலங்களை கைப்பற்றியது. வட்டு எறிதல் போட்டியின் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் வென்று புதிய வரலாறு படைத்தனர். வட்டு எறிதலில் இந்திய வீராங்கனைகள் கிருஷ்ண பூனியா, ஹர்வந்த் கெüர், சீமா அந்தில் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தைக் கைப்பற்றினர்.  துப்பாக்கி சுடுதல்: மகளிர் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த்-மீனா குமாரி ஜோடி வெண்கலம் வென்றது.  குத்துச்சண்டை: குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அமன்தீப் சிங், ஜெய் பகவான், தில்பாக் சிங், விஜேந்தர் சிங் ஆகியோர் அரை இறுதியில் தோல்வியுற்று ஏமாற்றினர். அரை இறுதி தோல்வி மூலம் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.  சாதனை சமன்: இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா 30 தங்கம், 23 வெள்ளி, 28 வெண்கலங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது.  இதன்மூலம் மான்செஸ்டர் காமன்வெல்த்தில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களை, தில்லி காமன்வெல்த்தில் சமன் செய்துள்ளது. மான்செஸ்டர் போட்டியின் போது இந்தியா 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலங்களை வென்றது. தற்போது தில்லி போட்டியில் 30 பதக்கங்களை வென்றதன்மூலம் மான்செஸ்டர் பதக்கப் பட்டியல் பெற்ற தங்க பதக்க எண்ணிக்கையை இந்தியா சமன் செய்துள்ளது. 

No comments:

Post a Comment