தஞ்சாவூர்: டூவீலர் திருட்டை தடுக்க புதிய தொழில் நுட்ப முறையில் மீட்டர் பாக்ஸ் பொறுத்தும் முறையை கும்பகோணத்தைச் சேர்ந்த மாணவர் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் விவேக்ராஜ் (23). கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., மெக்கானிக் படித்துள்ளார். இவர் டூவீலரில் சாவிக்கு பதில் கைவிரல் ரேகை மற்றும் ரகசிய எண்ணை பயன்படுத்தி இயக்கக்கூடிய வகையிலும், தானாகவே டூவீலர் பூட்டிக்கொள்ளும் வகையில் ஆட்டோமேடிக் லாக்கையும் கண்டுபிடித்துள்ளார்.
சாதனை கண்டுபிடிப்பு குறித்து விவேக்ராஜ் கூறியதாவது:டூவீலரில் உள்ள மீட்டர் பாக்ஸ் பகுதியில் சாவிக்கு பதில் கைரேகையை பதிவு செய்யும் கருவியை இணைத்து, குடும்பத்தில் உள்ளவர்கள் கைரேகையை அதில் பதிவு செய்ய வேண்டும். டூவீலரில் உரிமையாளர் அனுமதியுடன் ரகசிய எண்ணை பயன்படுத்தி அவரது நண்பர்களுக்கு மட்டும் அது தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த எண்ணையும், கைவிரல் ரேகையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள டூவீலரில் கைவிரல் ரேகை, ரகசிய எண் அறிந்தவர் தவிர மற்ற எவரும் டூவீலரை நகர்த்தக்கூட முடியாது.மேலும், போர்க் லாக், பேக்வீல் லாக், பெட்ரோல் லாக் என மூன்று லாக்கரை அமைத்து, அவற்றையும் இதனுடன் இணைத்தால் அம்மூன்றும் டூவீலரை நிறுத்தியதும் லாக் ஆகிவிடும். இதனால், இந்த டூவீலரை உருட்டிச் செல்ல முடியாது. திருப்ப முடியாது. ஓட்டிச் சென்றால் சிறிது தூரத்தில் பெட்ரோல் தீர்ந்து டூவீலர் தானாக நிற்கும். டூவீலரை கைரேகை வைத்து, ரகசிய எண் கொடுத்து ஸ்டார்ட் செய்தால் மட்டுமே பிற லாக்கர் திறந்து டூவீலரை இயக்க முடியும்.இந்த முயற்சிக்கு காப்புரிமை பெற முயன்றுள்ளேன். இதை கண்டறிய எனக்கு 8,500 ரூபாய் செலவானது. வியாபார ரீதியில், அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தினால் மிகக்குறைந்த விலையில் பயன்படுத்தலாம். டூவீலர் திருட்டையும் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கண்டுபிடிப்புக்கு அவரது கல்லூரியில் முதல் பரிசும், சென்னை ஐ.ஐ.டி.,யில் 76 கல்லூரிகள் பங்கேற்ற போட்டியில் மூன்றாம் பரிசும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment